முருகன் App
நல்லூர் நான்மணி மாலை
சொக்கன்
தென்னவன் சோம7 / 12
நல்லூர் நான்மணி மாலை · சொக்கன்

தென்னவன் சோம

19விருத்தம்✓
தென்னவன் சோம சுந்தரன் மகனாய்த்
திருவளர் கூடலிற் றோன்றிப்
பன்னரும் வேலைப் பாய்ச்சியே கடலைப்
பவிசற வாட்டிய மேலோன்
முன்னவன் பிரமன் முனைப்பினை ஓட்டி
மூலமாம் பிரணவம் உரைத்தோன்
வன்னமார் தமிழில் வைதவர் தமையும்
வாழவைத் தவன்கழல் ஒலிக்கும்.
20அகவல்✓
ஒலித்திட மறந்ததென் உள்ளத் திசையும்
நலியா நின்றதென் நரம்பறு யாழும்
மழைமுகில் இடியென ஒலிதரு பேரிகை
பழையம தாகிநின் றுடைவினை யுற்றது
மூவரின் பாவொடு முனைப்பறு மணிமொழி
தாவருஞ் சீர்த்தியின் சேக்கிழார் தமிழும்
வாயிடை அமராது வலியிழந் தொழிந்தன
காற்றிடை ஒலியிலைக் கண்ணிடை ஒளியிலை
மாற்றலர் நகைசெய மாண்பெலாம் இழந்து
கூனியுங் குறுகியும் குமைந்துமே நாளெலாம்
வீணினிற் கழிந்தன வேதனை மலிந்தது
ஒல்லையில் உன்னடி எண்ணிடாப் பழியால்
தொல்லைசேர் வல்வினைத் துயருழந் திருந்தேன் அந்நாள்,
கல்லையுங் கனியவைத் தென்னையும் இளக்கிடும்
நல்லையான் தண்ணருள் என்றதாம் உண்மை
உணர்ந்தோர் உணர்த்திட உணர்ந்துன்
துணைமலர்த் தாளிணை சூடுதல் குறித்தேன்.
21வெண்பா✓
குறித்தேன் உனையல்லாற் கூடற் குரியார்
வறித்தாம் புவியிதனில் வள்ளி - மறித்தே
தனதடிமை ஆக்குகின்ற தாளல்லால் வேறே
எனதடிமை போக்க இலை.
22கலித்துறை✓
இலையென் றிரப்பவர்க் கின்னருள் செய்திட ஏந்திழையார்
மலையுற் றொளிர்மணி போலரு குற்றிட வந்திடுவன்
தலையுந் இருகரந் தாள்களும் மார்பொடு சாய்த்தவனை
வலையில் விழுத்திட வந்திடு வீர்புவி வாழ்பவரே.