உளதோ இலதோ மெலிதோ வலிதோ
நுளைநுண் அணுவிலும் நுண்ணிதோ பெரிதோ
ஒளியோ இருளோ உருவோ அருவோ
களியோ துயரோ கனவோ நனவோ
எனவுனை எண்ணியிவ் வுலகிடை ஆய்ந்து
மனத்திருட் குகையிடை மயங்கியே கிடந்து
தாமெலாம் அறிந்தவர் என்னவே தருக்கி
நேமியின் பரப்பிடை நீள்துயர் நல்கி
அரைசியல் பேசியும் அறத்தியல் துறந்தும்
உரையியற் றிறத்தால் உலகினை மருட்டிக்
காக்கையில் வெண்மையும் கடலினிற் சிவப்பும்
யாக்கையில் நிலைப்பும் நஞ்சினில் உயிர்ப்பும்
கண்டனம் என்றிவர் காட்டிடுந் திறத்தை
உண்டனன் ஆதலின் உலகியல் இதுவென
எண்ணியே இவரின் இருக்கையை நீங்கி
நண்ணியே உன்பதம் நாடுதல் குறித்தேன்
ஆனால் ஒருகணம் அவர்நிலை ஓர்ந்தால்
தேனார் சோதரர்த் துறத்தலுங் கொடிதாம்.
என்னவர் என்னரு கிருப்பவர் என்பதால்
அன்னவர்க் காயும் அழுதிடல் என்கடன்
பொன்மலர்ப் போதினிற் புரண்டுநின் றிவர்கள்
மையலைப் போக்கிடு மன்னவ என்பனேல்
தையலாம் பரையின் தனயனே இவர்கள்
செய்வன அறியாத் திறத்தினர்
உய்வினை அளித்திடல் உன்கட னன்றோ.