தருவாய் என்றுன் சந்நிதி அடைந்தே
வருவாய் என்றுன் வழிபார்த் திருந்தனன்
செருவார் புரங்கள் செறுத்தவன் மதலாய்
குருவாய் இலங்கிடுங் குமரனே குகனே
இருளால் அலக்கணுற் றெய்த்திடுஞ் சிறியனை
அருளால் அருகணைத் தாற்றுதல் செய்யா(து)
உருளுஞ் சகடமாய் உலைந்திட வைத்தாய்
பொல்லா உலகப் புன்மையிற் சிதைந்து
நல்லார் இணக்கினை நாடிடா தொழிந்தே
எல்லாம் 'நான்'எனும் இழிமலப் பிணக்கிற்
கல்லாச் சிறியனேன் கதியிழந் துழன்றேன்
பன்னாள் இந்தப் பரிபவக் கடலில்
மன்னா உழன்ற மதியிலி இன்று
விழியினிற் குருடாய் மொழியினில் ஊமையாய்
அழிவுறுங் காலையுன் அருகணைந் துள்ளேன்
கண்களின் மடையைக் கரைத்துயிர் நீராய்
நண்ணிடப் புலம்பிநான் நாவெலாம் உன்பேர்
நிறைத்துநின் றையனே வருகவென் றழைப்பேன்
உறைத்திடு துன்பினை ஒழித்திட என்னருந்
தாயே வானனத் தயங்கிடா தழைப்பன்
சேயென் குரலினைச் செவிமடுத் தருள்வாய்
நாவலற் கருளிய நல்லூர்ச்
சேவலங் கொடியாய் வந்திடல் வேண்டும்.