முருகன் App
நல்லூர் நான்மணி மாலை
சொக்கன்
வாழ்பவ ரேபுவி8 / 12
நல்லூர் நான்மணி மாலை · சொக்கன்

வாழ்பவ ரேபுவி

23விருத்தம்✓
வாழ்பவ ரேபுவி மன்னவரே
மாலென ஓங்கிய மெய்யவரே
ஆழ்பவ வேலையில் வீழ்பவரே
ஆணவ மாயையிற் சேர்பவரே
சூழ்கலி பற்றுதல் எண்ணாது
சூரர்என் றேநினை சோதரரே
வாழ்விது மின்னலென் றோர்ந்திடுவீர்
வானவர் தலைவனை ஏத்திடுவீர்.
24அகவல்✓
ஏத்திடு வீரே இகத்திடை உள்ளீர்
சாத்துணை வரையவன் தாளிணை சார்ந்து
நானெனும் உணர்வினை நசுக்கிடும், அன்பால்
ஊனினை உருக்கிநின் றோலமிட் டழுமின்
வானவர் தமக்கும் மற்றுளோர் எவர்க்கும்
மூலமாய் நின்றவிம் மூர்த்தியை உணர்மின்
கோலமார் குமரா குருபரா கந்தா
ஏலமார் குழலியர்க் கேந்தலே குகனே
ஆலமர் கடவுளின் அரும்பெறல் மகனே
வேலனே கடம்பா வித்தகா முருகா
பார்வதி பாலகா பத்தர்கட் கெளியாய்
ஆர்வலர்க் கருளும் அறுமுகப் பெருமான்
காலமும் நினைவுங் கடந்திடு கடவுள்
சோலைவாய் தோறுந் துலங்கிடும் எழிலே
குறிஞ்சியின் செல்வக் குவையிலும் மருதத்
திறைஞ்சிடு கதிர்வயல் இருப்பினும் ஈண்டிய
பசுமைசார் முல்லையின் பருமரக் காட்டிலும்
அருமைசேர் நெய்தலின் அவலக் குரலிலும்
பாலையின் கொடுவிழிப் பார்வையி னிடத்தும்
பாலனாய் நின்றருள் கூட்டுவை நீயெனில்
யாவுமுன் ஆடல் நீ யாவினும் ஒளிர்வோய்
தாவுமுன் சேவடி தன்னிடை எம்மைச்
சேர்த்திட ஆவன செய்வையென் றுரைத்துக்
கூத்துக்கள் ஆடிக் குலவுக
சூத்திர நாதனாம் வேலொடுஞ் சேர்ந்தே.
25வெண்பா✓
சேர்ந்தே குமரன் திருவிழியின் தீக்கையினை
ஆர்ந்தே அளப்பரிய ஆனந்தம் - கூர்ந்தே
தலையால் நடந்தாலும் தண்டிக்கா தெம்மை
நிலையாக வைத்திடுவன் நீடு.
26கலித்துறை✓
நீடெமை வைத்துயிர் மேவிடு துன்பினை நீக்கிடுவாய்
நாடென மாடென வீடென ஓடென நச்சியதாற்
பாடுறும் இவ்வுடல் ஓடிட இன்றுனைப் பார்த்தழுது
வாடிடும் எங்களை உன்னடி வையென வாழ்த்துமுனே.