நீயே புவிக்கு நிழல்தரும் தருவாம்
நீயே மயக்கினை நிலைத்திடா தொழிப்போன்
நீயே காலமும் கருமமும் உயிர்ப்பும்
நீயே விநாயகன் நீயே நிமலன்
நீயே உமையவள் நீயே திருமால்
ஆயும் அறிவெலாம் அழகனே நீயே
தாயுந் தந்தையும் தமையனும் தம்பியும்
சேயும் மனைவியும் செல்வமும் நீயே
பாயும் புனலெனப் பரிந்தருள் புரிவோய்
செந்தமிழ்க் கிறைவ அந்தமில் புகழோய்
நொந்தவர்க் குருகிடும் குன்றமர் கடவுள்
வந்தனை இயற்றிட வருமருட் பிழம்பாய்ச்
சிந்தையில் நிறைந்திடுஞ் செம்மைசால் சிறுவ
இடபக் கொடியினை ஏற்றியிவ் வீழத்
தடையலார்த் தொலைத்திடும் அருந்தமிழ்க் காவலர்
திசையெலாம் வளர்த்தநல் லிசையென ஓங்கிய
வசையிலா நல்லூர் வாழிடங் கொண்டோய்
உலகம் உவப்புற அருளி
நிலவுவை என்றன் நெஞ்சினில் நிலைத்தே.