முருகன் App
நல்லூர் நான்மணி மாலை
சொக்கன்
ஏற்றதுன் பாதஞ்5 / 12
நல்லூர் நான்மணி மாலை · சொக்கன்

ஏற்றதுன் பாதஞ்

11விருத்தம்✓
ஏற்றதுன் பாதஞ் சூடுதற் கிந்த
இதயமென் றெண்ணியான் வீணே
மாற்றமொன் றிலாது மாண்பிலா ஊனை
வளர்த்தலில் நாளெலாம் முயன்று
கூற்றுவன் எனக்கே யானெனக் கிடந்தேன்
குயின்மணிப் பதாம்புயம் மறந்தேன்
சாற்றுவார் நெஞ்சுஞ் சரவணத் தடமும்
சார்ந்திடு நல்லையின் முருகே.
12அகவல்✓
முருகலர் வதனத் தருளொளி காணவும்
திருவளர் விழியெழில் திகட்டிடா துண்ணவும்
கோதுறு மாதுளை மொட்டெனச் சிவந்தஉன்
ஏதிலா இதழ்விரி முறுவல்கண் டுருகவும்
பிள்ளைமை கனிந்துயிர் உண்டிடும் மார்பெழில்
உள்ளி உள்ளியென் உளங்குளிர்ந் திடவும்
செந்தழல் மதியின் தண்மையை உற்றென
அந்தமில் அழகுறை அங்கையின் முத்திரை
நோக்கி நோக்கினின் றேங்கவும் ஆங்கொளி
தேக்கியே சுடர்வேல் திகழ்வது கண்டுயான்
பாகெனக் கரைந்துனைப் பாடியே நையவும்
வாகணி தோளெழில் வாங்கிஇன் புறவும்
குன்றியிற் சிவந்தொளி குயிற்றிடும் மென்மலர்
ஒன்றிய அடிகளில் ஒளிவிடுஞ் சலங்கைகள்
கல்கல் என்றுயிர்க் கணிசெயல் காணவும்
செல்வத் தண்டையின் சிற்றிசை கேட்டுயான்
ஆவியை உன்பொருள் ஆக்கவுந்
தாவெனக் கருளைத் தமிழின் வேளே.
13வெண்பா✓
வேளே குறமகளை வெல்லல் கருதியவள்
தாளே தலையிற் றரித்திடுவாய் - ஆளாய்
உனைவெல்ல யானும் உனதடியைப் பூண்பேன்
எனைவெல்ல யாரிங் குளார்.
14கலித்துறை✓
உளரெம் உயிர்ப்பிணி போக்கும் மருத்துவர் ஓங்குதிரு
வளரும் புராதன நல்லூர்ப் பதியிடை வாழுநரென்(று)
உளமும் உயிரொடு நெக்குற் றுருகி உரைத்திடுவன்
தளரும் பிறவியிற் றாங்கிடும் அன்னவன் தண்ணளியே.