முருகன் App
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
அம்புலிப்பருவம்8 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

அம்புலிப்பருவம்

61சாமம் சந்திரனுக்கும் முருகனுக்கும் ஒற்றுமை✓
தெருளறிஞர் பரவுசிற் சபைநாதன் அன்பிற்
சிறக்கின்ற தன்மை யாலும்,
செங்கனல் எனக்குலவு மேடத்தில் ஒருவேளை
திகழவரு பெருமை யாலும்,
இருளறச் செய்துகண் ணுடையவர் தமக்கெலாம்
இன்பம்விளை வித்த லாலும்,
இக்குவிற் காமனது விழவினுக்(கு) இனியன் என்(று)
இகமெலாம் மொழித லாலும்,
சுருள்குழற் பேதையர்கள் வலியவந் தணையத்
துலங்குமெழி லாலும் நீயும்
சொல்லும்இ வனுக்குநிக ராமென்ன உலகரும்
துதிகூறல் உண்டு கண்டாய்!
அருள்வடிவ மாகவளர் குமரகுரு பரவேளொ(டு)
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
62✓
உற்பலத் துரிமையுடன் உடுமகளிர் காதலன்என்
ஒருநாமம் உடைமை யாலும்,
உலகமெங் கணும்நிறையும் ஒளியாலும்,விண்ணவர்க்(கு)
உவகைதரு தன்மை யாலும்,
நற்பனுவல் பகர்புலவ னுக்(கு) ஆவல் கொளலாலும்,
ஞாலம் தனைச்சுற் றியே
நாகத்தில் வரலாலும், அலைவாரி ஓதமிக
நன்குதய மாத லாலும்,
பற்பல உயிர்க்கிதம் புரிகின்ற தாலும்,ஒரு
பதினாறு கலையி னாலும்,
பகருமி வனுக்குநிகர் ஆவை!என் றுன்னைப்
பரிந்தழைத் திடல்அ றிதியேல்
அற்பர்உணர் தற்கரிய புகழுடைய முருகனுடன்
அம்புலீ ஆட வாவே.
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
63✓
இன்பமுறும் அமுதத்தி னாற்றவளம் ஆவைநீ!
இவன்வெள்ளை நிற ணிந்தோன்,
இருள்கடிய வல்லைநீ! கருநிறத் தானவர்க்(கு)
இயமன்இவண், நீஇ ரங்கா
வன்பரும் களிகூர வருவை!இவன் வேறுமத
வாணரும் பரவ மகிழ்வான்,
மலையினிற் போவைநீ! இவன்எழிற் குன்றுதொறும்
மாறாமல் ஆடல் செய்வான்,
துன்பமும் சிலர்உறப் புரிவைநீ! இவன்முழுத்
துட்டரைக் காய்ந்து நிற்பான்,
சொல்லுமிவை அனையபல தொழிலாலும் நீஇவன்
தோழனாம்; ஆகை யாலே
அன்பர்பலர் கைதொழத் திகழுமுரு கையனுடன்
அம்புலீ ஆட வாவே!
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே!
64பேதம் சந்திரனைவிட, முருகனை வேறுபடுத்தி உயர்வறக் கூறல்✓
செங்கதி ரவன்புசித் துப்புசித்(து) உமிழத்
தியங்கு வாய்!இவன் எண்ணிலாத்
தெய்வமும் தனதுமய மானெப் பேரறிஞர்
சிந்தையிற் றிகழ வல்லான்,
பங்கமுறும் மறுவாரும் உடலன்நீ! இவன்எழிற்
பவள மேனியில் அதில்லை
பரவையிற் றணிவைநீ! இவன்அதனில் வாழ்அவுணர்
பற்றறக் களையும் வீரன்,
வெங்கண்அர விற்கஞ்சி மெலிவைநீ! இவன்மயில்
விழுங்கிக் களிக்கும், இதனால்
விளையாட வரில்உனக் கெபெருமை, உனதுநல்
வேளை,இவன் உனைஅ ழைத்தான்
அங்கசனும் நாணும்அழ குடையகும ரேசனுடன்
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
65✓
ஒருவட்ட மாவைநீ! ஓராறு வட்டமாம்
ஒள்ளிய முகத்தன் இவன்,நீ
உம்பர்ஊர் வளர்குரவன் அடிமை,இவன் யாவர்க்கும்
உபதேசம் உதவு பெருமான்,
தருஅரசன் இட்டபணி செய்வைநீ! இவன்அவன்
தன்துயர் தவிர்த்த தெய்வம்,
தன்மைபல வாறாவை நீ!இவன் குறைவுறாத்
தகையுடை யன்,மத் தாகிஓர்
பருவதத்(து) அடியில்உற் றனை!இவன் அவற்றின்முடி
பலவினும் நடித்து நிற்கும்
பாததா மரையுடையன், உன்னைவா! என்னப்
பரிந்தழைக் கின்ற(து) அறிவாய்!
அருவமுடன் உருவமாய், அருவுரும மானவனொ(டு)
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
66✓
உமையவள் உனைப்பதத் தால்உதைத் தனள்,இவனை
உரிமையொடு முத்த மிட்டாள்,
உரகமணி வோனிடக் கண்நீ!இவன் பொதுவில்
உறும்நுதற் கண்ணில் வருசேய்,
இமையவரில் ஒருவன்நீ! இவன்அவற்(கு) உயிரென்(று)
இலங்(கு)அயிற் சேனாபதி
இளமகளிர் துயர்கண்டு போவைநீ! இவன்அவற்(கு)
இன்பம்அருள் கின்ற செவ்வேள்,
சமையகோ டிகளெலாம் உலகினுக் காகச்
சமைத்தபொருள் என்னும் உன்னைத்;
தந்தமது தலைவனென்(று) இவனைப் பராவும்,இவை
சத்தியம் தவறில் லைகாண்!
அமையனைய தோளுடைக் குறமாது கேள்வனுடன்
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
67தானம் பயன் கருதாமல் அருளும் ஈகை நலம்✓
கருணைபெற லாம்,அளவில் கவிதைபெற லாம்,மழைக்
காரெனக் கொடைகொ டுக்கும்
கைகள்பெற லாம்,எதிர்த்(து) அமராடு வோர்குலம்
களைகின்ற திறமை பெறலாம்,
மருள்நலியும் மெய்யன்பர் களிகூர விளையாடும்
வாழ்வுபெற லாம்,கயி லைநேர்
மாதங்க வாணன்முதல் எண்மரும் புகழ்கூறி
வழிபடும் பெருமை பெறலாம்,
தருணத்தில் உதவுதிரு மந்திரப் பகுதியொடு
சத்தகோ டிக்கும்உ யிராய்த்
தழையும்உயர் பிரணவப் பொருளாய உண்மையைத்
தரும்இலை விபூதி பெறலாம்,
அருணகிரி அதனில்வரு கிளியுடைய கடவுளுடன்
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
68✓
செந்நிறக் கருநிறச் சர்ப்பங் களால்உறு
திடுக்கம் தவிர்ப்ப தற்குச்
சேவற்ப தாகையொடு தோகைமா மயிலுண்டு,
தேய்கின்ற கொடுமை முதலாம்
எந்நிலைப் பிணியும் தொலைத்திடப் பன்னீர்
இலைக்குள் உறும்நீறு நல்கும்
ஈராறு செங்கையுண்(டு), இனிவரும் செயல் சொல்ல
இருமூன்று வாய்கள் உண்டு,
வெந்நிணம் பரு(கு)அவுணர் கலகமற முனியவடி
வேலுண்டு, சனன மரண
வேராய வினையறச் சுடுமிரு தாளுண்டு,
மேதினி முதற்சொல் எங்கும்
அன்னியமி லாதுற்ற வடிவான குமரனுடன்
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
69தண்டம் வராவிடில் ஒறுத்தல் நேருமென உணர்த்திய முறை✓
மதிள்சுற்று கனகநகர் உடையகோன் மதுரையினில்
வந்துமுன் பட்ட பாடும்,
மற்றேழ்வ ரொடுகூடி அமர்புரிந்(து) உயிர்தப்பி
வரஅன்று பட்ட பாடும்,
விதிபட்ட பாடும்,நெடு மால்அஞ்சு தாருகனும்,
வெற்பு(ம்)முன் பட்ட பாடும்,
வேலன்றி வெல்என்று வில்லாயி ரம்கொடெதிர்
விநயவான் பட்ட பாடும்,
சதிமுற்று மாமரத் தோடலை முழங்கெழிற்
சாகரம் பட்ட பாடும்,
சாரணக் கொடுமுனிவர் பட்டபா டும்கருது
தன்மையோர் பகைசெய் வரோ?
அதிருற்ற கழலணைந் தாடுமுரு கேசனுடன்
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.
70✓
வெம்மதம் பெருகநெடு வேலையமு தம்பருகும்
வெள்ளானை உண்டி டாமல்,
வீராதி வீரரும் நடுக்குறக் குலவுதகர்
மேல்வந்து முட்டி டாமல்,
பொய்மதத் தினர்தாமும் நெக்குருக நடமிடும்
புள்ளிமயில் கொத்தி டாமல்,
போர்வேண்டி அநுதினம் கூவுமுயர் சேவற்
புறங்கால் கிழித்தி டாமல்,
மெய்ம்மறைப் பகுதிஒரு நாலுக்கும் உயிரான
வேல்கொன் றிடாமல், இந்த
வியனுலகம் உள்ளவரை அழியாது வாழுநலம்
மேவிடும் விருப்பம் உண்டேல்
அம்மன்இரு வர்க்கும்நடு நின்றகுரு சாமியுடன்
அம்புலீ ஆட வாவே
அணிபொழிற் புலியூரில் வருபாண்டி நாயகனொ(டு)
அம்புலீ ஆட வாவே.