சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
செங்கீரைப்பருவம்3 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
செங்கீரைப்பருவம்
11✓
நீர்பூத்த வேணிப் பிரான்எழிற் றில்லைநடு
நின்றுநடம் ஆடல் கண்டு
நெக்குருகும் அம்மைதிரு முலையமுதும் ஓராறு
நீடொளி மடந்தை மார்தம்
வார்பூத்த கொங்கைதரு பாலும் புசித்தன்பர்
மனமனைய தாமரைப்பூ
மத்தியிற் கவுமார சமயநிகர் பொய்கைமிசை
வைக்கக் கிடந்து கொஞ்சிப்,
பார்பூத்த நாவலர்க்(கு) உதவுசுர பந்தியிற்
பன்னிரு விரற்க வைத்துப்,
பகரறும் எழுத்தாறும் மொழிபவர் சுமக்கும்இரு
பாதவிரல் வாய்ம டுக்கும்
சீர்பூத்த குழவியென விளையாடும் ஒருவனே!
செங்கீரை ஆடி அருளே
செந்தமிழ்க் கிரிநிலவு தென்பாண்டி நாயகா!
செங்கீரை ஆடி அருளே.
12குழந்தை முருகனைக் கொஞ்சுமுறைமை✓
வல்லைஒத்(து) ஒளிர்முலைச் சிவகாமி வல்லிதிரு
மடிமீது வைத்த ணிந்த
வளைகிலுக் கிட,மலர்க் கைகொண்டு நீராட்டி
வன்ன முன் தானையைக் கொண்(டு)
ஒல்லையில் துவர,மெல் லெனஒத்தி ஆற்றிப், பின்
உலகெலாம் உய்ய வேண்டி
ஒருவிதப் பொட்டிட்டு, ஞானமுடன் எண்சித்தும்
உதவுபால் அமுதம் ஊட்டிக்,
குல்லையிற் றிகழ் வதனம் ஓராறும் மலரும்
குறுஞ்சிரிப் போர்ந்து, கொஞ்சிக்,
குஞ்சரமு கத்தவன் தொடர்புறக் கொடுவந்து,
குறைவில்சிற் சபையில் ஆடும்
தில்லைவித் தகனிடத்(து) உதவவளர் குழவியே!
செங்கீரை ஆடி யருளே
செந்தமிழ்க் கிரிநிலவு தென்பாண்டி நாயகா!
செங்கீரை ஆடி யருளே.
13பல நற்செயல் தோன்ற முருகன் தோன்றினனெனல்✓
கொங்கவிழ் மலர்த்தரு நிழற்கொண்ட புலவரும்
குவலயப் புலவர் தாமும்
குறைவில்சீர் எய்துமென மகிழ்வுறச், சூர்முதற்
கொடியகோ லரசர் அன்னோர்
தங்கணத் தினர்,புறச் சமயத்து ளார்,புலைத்
தன்மையோர், அனையர் தாமே
தபனன்முற் கிறுமியிற் றுடிதுடித் தயர்வுறச்,
சட்சமய வாண ரெல்லாம்
மங்களம் பலசெய்ய, மடுவில்வரு மைந்தனே!
மறுவில்சிற் சபையில் ஆடும்
வள்ளலார் தவமுதிர வடிவான தெய்வமே!
வதனங்கள் ஆறு கொண்டாய்!
செங்கரும் புடையவேள் மனம்நாணும் அழகனே!
செங்கீரை யாடி யருளே
செந்தமிழ்க் கிரிநிலவு தென்பாண்டி நாயகா!
செங்கீரை யாடி யருளே.
14முருகன் ஆடியதன் காரணமாகப் பலர் பலவிதம் ஆடினரெனல்✓
தந்தையா கியபரன் கனகசபை யதனிடம்
சரணொன்று தூக்கி யாடத்,
தாயான சிவகாமி காளியுரு வாகியோர்
சபதத்தி லாட, மாமன்
கந்தையினில் அவல்கொணரும் அவன்முதற் பலதோழர்
காணவொரு பாம்பி லாடக்,
கமலையா கியமாமி ஆறெழுத்து ஓதுமவர்
கவிபகர் தலத்தி லாடப்
பந்தெநிகர் கொங்கைகொளும் வல்லவை தனைக்கொண்ட
பரிவினாற் றமைய னாடப்
பக்தர்,வா னவர், முனிவர், முதலினோர் அனைவரும்
பகையொழிவ(து), எண்ணி யாடச்
சிந்தையினில் ஆடும்நீ திருவருட் களிகொண்டு
செங்கீரை யாடி யருளே
செந்தமிழ்க் கிரிநிலவு தென்பாண்டி நாயகா!
செங்கீரை யாடி யருளே.
15முருகன் சிறப்பு✓
புத்தமுதெ னக்கவி தொடுத்தணியும் உத்தமப்
புலவர்களும், உடல்மு ழுக்கப்
புனையும்வெண் ணீறுடைய கவிமார புனிதரும்,
புலையாதி தவிரும் வண்மைப்
பக்தர்களும் அலைகடலை உண்டுவிட் டவன்முதற்
பலகோடி முனிவர் தாமும்,
பணிகின்ற முருகனே! அணிதுங்க வேலிலகு
பன்னிரு புயத்தண்ணலே!
செத்தமக பதின்அன்பும் மலவரன் தலைகளும்
திருமால் உடற்கு றிப்பும்
சீறுபாம் பணியும் புலித்தோலும் ஆடிடச்
சிற்சபை யிடத்தி லாடும்
சித்தனரு ளக்குலவு சிவகாமி புதல்வனே!
செங்கீரை யாடி யருளே
செந்தமிழ்க் கிரிநிலவு தென்பாண்டி நாயகா!
செங்கீரை யாடி யருளே.
16வேறு✓
இன்பக் கடலே! அருட்குன்றே!
எளியார்க்(கு) எளியாய்! எனையாளும்
இறைவா! கொடியோர் ஈடழிக்கும்
எழில்வேல் பிடித்த பெருமானே!
வன்பர்க்(கு) இரங்கா மனத்தானே!
மயில்மீ தேறி வருமுருகா!
மகவான் மகளும் புனக்குறவர்
வளர்த்த கொடியும் புணர்கணவா!
தன்பத் தரின்மேற் சமன்ஒருக்கால்
தன்னை மறந்து வருவானேல்
தடிவான் அவனூர் தனைநோக்கிச்
சபையில் நடிப்போன் தரும்க்குகனே!
அன்பர்க்(கு) இரங்கும் குருபரனே!
ஆடி யருளாய் செங்கீரை
அணிசேர் பாண்டி நாயகனே!
ஆடி யருளாய் செங்கீரை.
17✓
பத்தி நெறியோர் இகழ்ந்தாலும்
பரிந்தாண் டருளும் முருகோனே!
படிற்றுச் சமணர் குலமாளப்
படித்தாற்(கு) உதவும் கலையுடையாய்!
தித்தித் திருந்து வினைஒழிக்கும்
தெவிட்டா அமுதே! எனைச்சூழும்
திருக்கண் ணுடையாய்! அடற்சேவல்
சிறக்கும் கரத்தாய்! தினந்தோறும்
துத்திப் பணப்பாம்(பு) அணிகளையும்
சுமந்து நடிப்போன் தொழும்ஞரவா!
துதிகூர் வளமைப் புலியூரில்
தூயோர் பரவும் துணைத்தாளா!
அத்தி முகவன் துணையானாய்!
ஆடி யருளாய்! செங்கீரை
அணிசேர் பாண்டி நாயகனே!
ஆடி யருளாய்! செங்கீரை.
18வேறு
தனதன தனதன தனதன தனதன தனதன தானன தந்தான✓
தமருடன் அலைகடல் அதனிடை மருவிய தானவ ருங்,கூறை
தனையிகழ் சமணர்கள் முதலிய சமயர்கள் தாமுமெ லிந்தோட
நமதெனல் முதலிய பிழைதவிர் முனிவரர் நாகரி கம்பேச
நறைமலி துளவனும் மலர்மிசை யறைதரும் நான்முக னும்பேண
இமகரன் எரிகதிர் விழியென மருவிடும் ஈசன்ம கிழ்ந்தாட
எழில்மிகு சபையினில் அனைவரும் வசமற ஈடில்வ ளஞ்சேரும்
அமரர்கள் பதிகொளும் அரசுறு துயர்கெட ஆடுக செங்கீரை,
அணிமிகு தமிழுடை யவர்புகழ் குருபர! ஆடுக செங்கீரை.
19✓
கடலிடை மலிவுறு கொடியவர் குலம்அறல் காணவி ழைந்தோர்கள்
கலபியில் அயில்புனை புயமொடு வருமொரு காரணன் என்றோர்கள்
மடவியர் மயல்கெடும் அநுபவம், அதுபெற வாடிமெ லிந்தோர்கள்
மலைதொறும் உனதருள் பரவிடும், அதுபெரு வாழ்வென நின்றோர்கள்
இடர்கெட ஒருசபை யதனிடம் நடமிடும் ஈசனும், அன்பாரும்
இணைதவிர் முனிவரும், அளவுறு மகிழ்வுற ஏதிலர் கண்கூச
அடலுறும் அமரர்கள் அதிபதி முடிகொள ஆடுக செங்கீரை
அணிமிகு தமிழுடை யவர்புகழ் குருபர ஆடுக செங்கீரை.
20✓
செங்க னகந்திக ழும்சபை யன்சுத! செங்கோ செங்கீரை
செந்திலில் வந்(து)அவு ணன்தனை வென்றவ! செங்கோ செங்கீரை
செங்கண்மு குந்தன்வி ரும்பியு சுந்தர! செங்கோ செங்கீரை
தெம்புறு பைங்கிளி தங்குநெ டும்புய! செங்கோ செங்கீரை
சிங்கள ரும்பர வும்படி நின்றவ! செங்கோ செங்கீரை
செண்டல ரும்சுர மங்கையர் வங்கண செங்கோ செங்கீரை
சிங்கமும் அஞ்சுவ ரந்தரு புங்கவ! செங்கோ செங்கீரை
தென்பொதி யந்தரு தண்டமிழ் கொண்டவ! செங்கோ செங்கீரை.