முருகன் App
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
வருகைப்பருவம்7 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

வருகைப்பருவம்

51குழந்தை முருகனைக் கூவி அழைத்தல்✓
கடியார் மலர்த்தண் பொழில்சூழும்
கவின்தோய் புலியூர் நடுவிளங்கும்
கனக சபையிற் சிவபெருமான்
கண்ணன் மணியாய் வருங்குகனே!
மடிமீ திருந்து சிவகாமி
மகிழ ஒருபால் முலைசுவைத்து,
மற்றோர் முலையை நெருடிஅவள்
வதனத்(து) அணிநோக் கிடும்மதலாய்!
இடிபோல் முழங்கும் சூரற்சேவல்
எடுக்கும் கரத்தாய்! கீரன்முதல்
எண்ணில் பெரியோர் தொடுத்ததமிழ்
இயங்கும் புயத்தில் எழிலாரும்
வடிவேல் புனைந்த குருபரனே!
மயில்மீ தேறி வருகவே
வளஞ்சேர் பாண்டி நாயகனே!
வருக! வருக! வருகவே.
52நிறுதவித் துயர்நீக்க அழைத்தல்✓
கொலையோர் புலையோர் செயும்கொடிதாற்
கொதிக்கும் துயரும், அறுசமயம்
கொண்டோர் வருந்தல் சகியாமல்
குலையும் துயரும், குவடனைய
முலையார் விழியாம் கணைபாய
மோகக் கடலில் தினந்தோறும்
முழுகும் துயரும், பனுவல்பல
முந்நீர் கவர்ந்த முழுத்துயரும்,
நிலையாய் உனையே கருதாமல்
நேர்ந்த படிபோம் மனத்துயரும்,
நிகழ்த்தும் இவைநேர் பலதுயரும்
நீற்றால் ஒழித்(து)உன் அருள்கொடுப்பான்
மலைதோ றாடும் பதத்தானே!
மயில்மீ தேறி வருகவே
வளஞ்சேர் பாண்டி நாயகனே!
வருக! வருக! வருகவே.
53தன் அநுபவம் பல சாற்றும் அருமை✓
பொருநை நதியின் நடுவிளங்கும்
புகழ்சேர் உருமா மலையிடத்தில்
புகன்ற மொழியும், திருமலையிற்
புரிந்த செயலும், செந்தூரில்
ஒருவா(று) உணர்த்தும் பெருநிலையும்
ஓங்கும் புனிதத் திருநெல்லை
ஊரில் திகழ்ந்த விளையாட்டும்,
உலவாக் கழுகு மலைக்கூத்தும்,
அருணா புரியிற் றரும்வாக்கும்
அனைய பிறவும் புவியினரும்
அறியப் புரிதற்(கு) ஆசையுற்றேன்
அனைத்தும் அறிவாய்! அசைப்பிப்பாய்!
மருவார் பொழில்சூழ் புலியூரா!
மயில்மீ தேறி வருகவே
வளஞ்சேர் பாண்டி நாயகனே!
வருக! வருக! வருகவே.
54உமையவள் முருகனை அழைக்கும் உரிமை✓
கண்ணே! வருக! சிவஞானக்
கனியே! வருக! எனையாண்ட
கனிவின் தவமே வருக!அருட்
காரே! வருக! கழ(ற)அரிதாம்
எண்ணே! எழுத்தே! வருக!என
இமவான் மகள்அன்(று) அழைத்துமடி
இருத்திக் கலையால் வெயர்த்தமுகம்
இலங்கத் துடைத்து, முலையருத்திப்,
பண்ணேர் மழலை மொழிகேட்டுப்
பலகால் மோந்து களிகூரும்
பவளக் குவடே! உனதடியார்
பதமா மலரில் துகளாய
மண்ணே றியநற் றலையேன்முன்
மயில்மீ தேறி வருகவே!
வளஞ்சேர் பாண்டி நாயகனே!
வருக! வருக! வருகவே.
55நகர்வளம்✓
காவிப் பனிமா மலர்ப்பெருக்கும்,
கமலப் போதும், களையாகக்
கருதிக் களையும் கடைசியர்தம்
கண்ணாற் பயந்து, கழனிவிட்டுத்
தாவிப், பகட்டும் நெடும்வாளை
தடித்தென்(று), அரவக் குலம்வெருளத்,
தண்பூம் பொழிலார் குரக்கினங்கள்
தாமும் பயந்து விழிமூட,
காவிற் சூரியான் பரியேழும்
கதற, வயிற்றைக் கிழித்துவரும்
கவினார் புலியூர்ச் சிவன்புதல்வா!
கருங்கட் குறத்தி கனிந்தளிக்கும்
மாவிற்(கு) உருகும் கிழமுனிவா!
மயில்மீ தேறி வருகவே!
வளஞ்சேர் பாண்டி நாயகனே!
வருக! வருக! வருகவே.
56வேறு கந்தனைக் கருதும் கவுரரர் பண்பு✓
சத்தப் பெருங்கடலின் உட்புக் கிருந்துவரு
தகுவனுயிர் கொன்று வந்த
தனிவேல் முதற்பகரும் ஆயுதங் களும்,வதன
தாம ரைகளும், கடம்பும்
மெத்தப் புனைந்தபுயம் ஈராறும் மகுடமுதல்
வியனுற்ற பணிகள் பலவும்,
விண்ணோர் தருங்கொடியும், வேள்விமலை யிற்றிரியும்
வேடுவர் வளர்த்த கிளியும்,
சுத்தத்(து) இலங்கும்ஒரு வேழமும், சேவலும்,
தோகை மயிலும், துலங்கும்
தூயமன மும்,பொருவில் வாய்மையும், கருணையும்,
தோய்வுறத் தொண்டு செய்யும்
பக்தர்க்(கு) இரங்கியருள் பதமலர்த் துணைகொண்ட
பவமலைக் குகன் வருகவே.
பைந்தமிழ்ப் புலியூரில் வந்தசற் குருவான
பாண்டி நாயகன் வருகவே.
57அன்பினர் காண ஆற்றிய அருட்செயல்✓
தற்பரன் எனக்குலவு தந்தைக்கும், மலையமலை
தன்னிலுறு குறுமு னிக்கும்,
தண்டமிழ்க் கீரனொடு பொய்யாமொ ழிக்கும்,ஒரு
தையற்கும், அருண கிரியாம்
விற்பனன், எழிற்பனுவல் விற்பக ழிக்கூத்தன்,
வெண்டளை முறித்த புலவன்,
வேதமுனி சொன்னகதை தமிழ்செய்தவன், போரி
மேயவன், மணற் கொணர்ந்த
அற்பரும் வணங்கிட நகைத்தவன், செந்திலிற்(கு)
அந்தாதி சொன்ன வல்லோன்,
அணிமேவு பாடல் புரத்தொருவன், முதலாகுந்
அளவிலாத் தொண்ட ருக்கும்
பற்பல புகழ்ச்சிதரு பவளவா யுடையவன்!
பச்சைமயில் மேல் வருகவே
பைந்தமிழ்ப் புலியூரில் வந்தசற் குருவான
பாண்டி நாயகன் வருகவே.
58வேறு தனன தனன தனன தனன தனன தனன தனதனா✓
கரக முனிவர் பரவு சரண கமலன் வருக! வருகவே!
கனக மனைய பலவை பருவு கழலன் வருக! வருகவே!
குரவு குவளை புனலி யுடைய குழகன் வருக! வருகவே!
குறவர் குடிலின் மகள்முன் மறுகு குமரன் வருக! வருகவே!
இரவில் அடியர் கனவில் அலையும் இறைவன் வருக! வருகவே!
எனது பழைய பிறவி பகரும் எளியன் வருக! வருகவே!
மரமொ(டு) அலைகொள் கடலை முனியும் வயவன் வருக! வருகவே!
வனிதை மகிழுங் நடன பரமர் மதலை வருக! வருகவே!
59✓
எலியின் அரசை இவரும் ஒருவன் இளவல் வருக! வருகவே!
எமது பகைவர் தொலைய முனியும் இகலன் வருக! வருகவே!
மலியும் மகிமை குலவும் அபய வரதன் வருக! வருகவே!
மலரில் மருவு கமலை கணவன் மருக! வருக! வருகவே!
புலியில் எதிரும் அவுணர் கலக புனிதன் வருக! வருகவே!
புலவர் மகளை அணையும் இணையில் புளகன் வருக! வருகவே!
வலிய புவியை நொடியில் வளையும் மயிலன் வருக! வருகவே!
வனிதை மகிழும் நடன பரமர் மதலை வருக வருகவே!
60✓
மறவர் மகளை அணையு முருக வருக! வருக! வருகவே!
வழுவை யுதவு குமரி கணவன் வருக! வருக! வருகவே!
மறலி பகைவன் இனிய புதல்வ வருக! வருக! வருகவே!
வளைகொள் கரிய முகிலின் மருக! வருக! வருக! வருகவே!
மறவல் அசுரர் சமர குமர வருக! வருக! வருகவே!
வகுளம் அணியும் மதனன் எதிரி வருக! வருக! வருகவே!
மறதி தவிர அருள்செய் குரவ! வருக! வருக! வருகவே!
வழுதி எனமுன் வரும்நல் இறைவ! வருக! வருக! வருகவே!