சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
முத்தப்பருவம்6 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
முத்தப்பருவம்
41✓
கன்னற் சிலையான் மனம்நாணும்
கவின்மிக் குடையாய்! நடமாடும்
கலப மயில்மேற் பவனிவரும்
கந்தா! கருணைக் கடலமுதே!
பன்னற் கரிய பிரணவச்சீர்
பகரும் கனிவாய்க் குருபரனே!
பாலை நிலத்தில் தருகவிக்காப்
பதத்தால் நடந்த பான்மையனே!
துன்னற் றனத்துச் சிவகாமி
துதிக்க நடிப்போன் மடிமீதில்
தொழுவார் வினையைக் களையும்ஒரு
தும்பி முகனோ(டு) இருப்போனே!
முன்னற் கரிய பெரும்புகழ்சேர்
முருகா! முத்தம் தருகவே
முழங்கும் தமிழ்ப்பாண் டியர்குலத்து
முதல்வா! முத்தம் தருகவே.
42✓
வருந்தித் துதிப்போர் விழிகாண
மயில்மீ தேறி வருங்குரவா!
வாளேந் தியகை இரணியன்தன்
மார்பைப் பிளந்தோன் மருகோனே!
குருந்தில் உமையாள் மலர்க்கரத்திற்
குலவும் விளையாட்(டு) உடையானே!
கொல்லா விரதக் கவுமாரர்
குறிக்கும் பொருளே! குறத்திஇதழ்
அருந்திக் களிக்க முனியானாய்!
அமரர் பதியிற் களிறெடுக்கும்
அரிவை கணவா! புலியூரில்
அமரோர் விரும்பும் அருட்கடலே!
முருந்திற் றிகழும் நகைக்குமரா!
முறையால் முத்தம் தருகவே
முழங்கும் தமிழ்ப்பாண் டியர்குலத்து
முதல்வா! முத்தம் தருகவே.
43✓
பாவா ணருக்(கு)இன் னருள்வழங்கும்
பரம குருவே! அடியாருட்
பதியும் திருத்தாட் பெருமானே!
பங்கே ருகப்பூ வுடையானை
நாவால் ஒருசொற் புகன்று,தலை
நான்கும் குலுங்கப் புடைத்தோனே!
நல்லோர் எவர்க்கும் துணையாவாய்!
நறைப்பூங் கடம்பு புனைதோளா!
பூவாழ் உயிர்க்கோர் கயிலைஎனப்
புகன்று தொழுதோன் கதியடைந்த
புலியூர் தனைவிட்(டு) அகலாமற்
பொருந்தும் புகழ்சேர் புனிதர்களாம்
மூவா யிரவர் பணிகுமரா!
முகிழ்வாய் முத்தம் தருகவே
முழங்கும் தமிழ்ப்பாண் டியர்குலத்து
முதல்வா! முத்தம் தருகவே.
முத்து உண்டாகுமிடங்கள் சில✓
மாதும் களிறும் மழைமுகிலும்
வளையும் கரும்பும் வரைக்கணும்
வாழை முதலா மற்றவையும்
வழங்கும் முத்தங் களைவிரும்பேன்
ஓதும் கடவுள் பலர்தாமும்
உலவாத் திருப்பாற் கடற்பிறந்த
உண்கண் மடவார் தாம்கொடுக்கும்
ஒருமுத் தமும்நன் றெனஉரையேன்
காதும் குளிரத் துதிகூறிக்
கவுமா ரத்தோர் மொழிப்படியே
கடம்பு குவளை குர(வு)ஆதி
கமழ்பூ எடுத்தன் பதத்தணிவேன்
மோதும் கடந்துர் தனைத்தடிந்த
மொய்ம்பா! முத்தம் தருகவே
முழங்கும் தமிழ்ப்பாண் டியர்குலத்து
முதல்வா! முத்தம் தருகவே.
45பள்ளர்கள் வயலிற் பயிற்றும் செயல்கள்✓
செய்யார் வரம்பில் முகில் ஊர்வான்
செயலைப் பரவிக் குரவையொலி
சிறக்கத் தொழிலில் இறங்கி,இரு
செம்பொற் குடநேர் முலைகுலுங்கக்,
கையால் நாற்று முடியலைத்துக்
கவிழ்ந்து நிமிர்ந்து நடுமகளிர்
கண்வேல் பாயச், சிலவுழவர்
காம வெறிகொண்(டு) அவரருகில்
நெய்யார் குழலைத் திருத்துநர்போல்
நெருங்கும் புலியூர்க் கனகசபை
நிமலன் மகிழப், பலதேவர்
நிதமும் புகழப், பகைதடிந்து
மொய்யார் கடம்பு புணைதோளா!
முன்போல் முத்தம் தருகவே
முழங்கும் தமிழ்ப்பாண் டியர்குலத்து
முதல்வா! முத்தம் தருகவே.
46வேறு✓
செப்புறழ் முலைச்சியர் மயக்குற விளங்செழிற்
றிண்தோ ளுடைக்கந்தனே!
சித்தர்பல ருக்கும்ஒரு குருவாகி மலைதொறும்
திருநடம் புரிதெய்வமே!
வெப்புறு குணத்தவுணர் சமணர்முத லாகுமவர்
வேரறுத்துத் திரும்பும்
வேலாயு தம்கொண்டு மயிலேறி விளையாடும்
வீராதி வீரமுருகா!
மைப்புயல் நடத்திவரு மகபதிக்(கு) அரசுதரும்
வள்ளலே! என்னைஒருநாள்
வண்டமிழ்க் கிள்ளையென முக்காலும் உரைசெய்த
வாயுடைய குருநாதனே!
முப்புரம் எரித்துநடம் ஆடியவன் மைந்தனே!
முத்தம் கொடுத்தருள்வையே
முதிர்புகழ்ப் பாண்டியரில் முதன்மைபெறும் வயவனே!
முத்தம் கொடுத்தருள்வையே.
47✓
மைக்கடலதில், பொருநை மாநதியில் நெல்லைநடு
வருகாலில், ஒருகிணற்றில்
வைப்பாறதில், கழுகு மலைவாவி யில்,கனலில்,
வண்டமிழ்ப் பனுவல்எல்லாம்
தக்கவர் கொளத்தமியன் உதவவும், கழுவேறு
சமணரிற் கொடியபுலையோர்
தம்மைநரி நாய்கழுகு பேய்பருந் தாதியவை
தாம்உணப் போர்புரிந்து
மிக்கபுகழ் சூடுமவர் தம்பொருமை கண்டுமனம்
மெலிவறவும், நின்சொல்எல்லாம்
மெய்யாக வும்,பிறவி பொய்யாக வும்,கலபி
மீதேறி என்முன்வந்து
முக்கணாடை யானும்அவன் மனைவியும் கொள்ளுமுயர்
முத்தம்கொடுத் தருள்வையே
முதிர்புகழ்ப் பாண்டியரின் முதன்மைபெறு வயவனே!
முத்தம்கொடுத் தருள்வையே.
48வேறு
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தனனா✓
சுத்தம றைத்துணி வைத்தெளி வுற்றவர் சொற்படி நிற்கிலனோ
துட்டர்த மைக்கறு வத்தகு நற்றவர் சொற்பனம் உற்றிலனோ
வித்தக ருக்குளம் நெக்குரு கத்தகும் மெய்த்துதி கற்றிலனோ
மிக்கதி ருப்பொடி அக்கம ணித்தொடை வெற்றிநி னைத்திலனோ
சித்தனை எனக்கன கச்சபை யிற்றிகழ் சிற்பர னுக்கினியோய்!
செட்டியெ னப்பெய ரிட்டுவி முப்பொருள் செப்புமு முப்புலவா!
முத்தந கைச்சியர் பக்கலி ருப்பவ! முத்தம ளித்தருளே
முத்தமிழ் கற்பவ ருக்கொரு சற்குரு! முத்தம ளித்தருளே.
49✓
சத்திய மற்றும னப்படி நிற்பவர் தட்டழி யப்புரிவாய்!
தத்துவ நிச்சயம் உற்றுய ரத்தகு சட்சம யத்தொளிர்வாய்!
பத்தியி னைக்கொடு நத்துனர் சொற்படி பற்பல
சித்தருள்வாய்!
பக்குவ முற்றும்வ ருத்திம றைப்பொருள் பற்றிடெ
னத்தருவாய்!
தித்தியில் மத்தள மொத்துந டிப்பவர் சிற்சபை யிற்சிவனார்
சித்தம் கிழ்ச்சியு றத்திறல் மிக்குள செற்றல ரைக்களைவாய்!
முத்தியி னுக்குயர் வித்தெனும் உத்தம! முத்தம ளித்தருளே!
முத்தமிழ் கற்பவ ருக்கொரு சற்குரு! முத்தம ளித்தருளே.
50வேறு
தனதன தனதன தனதன தனதன தத்தந் தனதானா✓
முருகவிழ் குரவொடு புனலியும் அணிபுய! முத்தந் தருவாயே
முரண்மிகும் அவுணர்கள் அறஅமர் பொருதவ! முத்தந் தருவாயே
முருகஎன் மொழிபகர் கொடிஎதிர் வருபர! முத்தந் தருவாயே
முதல்நடு கடையெனும் அவைபுகழ் புரவல! முத்தந் தருவாயே
முருகொடு பலபல யுகம்வரை மிளிர்குக! முத்தந் தருவாயே
முலையமு துதவிடும் உமையவள் கொளுமுயர் முத்தந் தருவாயே
முருகுறு சபையினில் நடமிடும் அவர்சுத! முத்தந் தருவாயே
முதிர்தமிழ் மலிவுற முயல்பவர் நடுமணி! முத்தந் தருவாயே.