முருகன் App
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிறுதேர்ப்பருவம்11 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

சிறுதேர்ப்பருவம்

91முருகனைச் சிறுதேர் அமைத்து விளையாடும்படி கூறுதல் வாவிச் சிறப்பு✓
மாதவன் கரமனைய செந்தாம ரைப்போதில்
வளையினம் துயிலும் எழிலும்,
வாணிநிகர் ஓதிமம் தவளவா ரிசமலரில்
வதிகின்ற சீரும், மின்னார்
காதளவில் நீள்விழிக் கயலஞ்சி முதுவரால்
கமுகிலுறு குருகு வெருளக்
கல்லென்று பாய்ந்துவரும் வியனும்,அலை இனமெலாம்
கரையினிற் சென்று சென்று
மோதுமிகு பேரொலியும், விரிவண்டு மதுவுண்டு
மொகுமொகென மொய்க்கும் இசையும்,
மும்மத கரிவந்து முழுகெருமை தலைகண்டு
முதலைஎன்(று) அல்(லு)ற தையும்
சீதமலி வாவிதொறும் நிலவுபுலி யூரனே!
சிறுதேர் உருட்டி யருளே
செம்புநதி வைகையொடு திகழ்பாண்டி நாயகா!
சிறுதேர் உருட்டி யருளே.
92✓
துங்கமுறு கோடொன்று கொண்டகரி தழுவிமகிழ்
துணையாய பவள மலையே!
சூரியன் முதற்பகரும் முச்சுடரும் விழியாய்த்
துலங்கும்அரன் ஈன்ற சுடரே!
கொங்கவிழு மலர்பூத்த பைங்குழற் சிவகாமி
கொஞ்சுமொரு செங்கிள்ளையே!
குறமகளும் அமரர்தரு மகளும் புணர்ந்துளம்
குளிர்கின்ற கொற்ற வேலே!
பங்கய மலர்பொகுட் டுடையமைத் துனன்உளம்
பதறவிளை யாடும் முருகா!
பாரதி எனும்தங்கை களிகூர முதுநூல்
பயிற்றியருள் பழைய புலவா!
செங்கண்முர கரிமருக னானகும ரேசனே!
சிறுதேர் உருட்டி யருளே
செம்புநதி வைகையொடு திகழ்பாண்டி நாயகா!
சிறுதேர் உருட்டி யருளே.
93✓
மேகமோர் ஏழுக்கும் முனியரசன் உறுமலையை
வெற்பில்முன் தளையு மைத்தாய்!
விரைகமழ் கடம்புகுர வம்குவளை வெட்சியொடு
வேம்பும் புனைந்து நின்றாய்!
பூதநிகர் களமுடைய பொறியாய மாமிதன்
பொன்மேனி குன்ற நாணிப்
போகாமல் முத்தமிட் டளிகூர இளமைப்
பொருத்தம் அகலா திருந்தாய்!
சாகரத் துறுகொடியர் குலவேர் களைந்துவரு
சத்திவேல் கொண்டு யர்ந்தாய்
தமிழ்வாணர் கலகம் தவிர்த்துவப்(பு) உதவமுச்
சங்கம் தொறும்பு குந்தாய்!
சேகரமெ னப்பரமர் புனைமலர்க் கையனே!
சிறுதேர் உருட்டி யருளே
செம்புநதி வைகையொடு திகழ்பாண்டி நாயகா!
சிறுதேர் உருட்டி யருளே.
94முருகப்பெருமான் சிறுதேர் உருளும்போது உடன் உருளும் பல நிகழ்ச்சிகள் இவை என்பது✓
வெட்டுற்ற பாம்பிற் றுடித்தருள அன்றுகரு
வேழத் துதிக்கை கொய்தாய்!
வில்லா யிரம்கொண்ட சிங்கனது சிரமெலாம்
வெங்களத் துருள எய்தாய்!
மட்டுற்ற மாலைபுனை சூரன் இருபுள்ளாகி
மகுடம் உருளப் புரிந்தாய்!
மதுரையில்முன் வருசமண மதமகளிர் கோவென்று
மண்ணில் உருளப் பணித்தாய்!
கொட்டுற்ற தொன்மைக் குறிஞ்சிதொறும் வெள்ளருவி
கொழிமுத்தம் உருள நின்றாய்!
குலவுதிரு மலைமீதில் உருளும் ஒருவனையும்
குறுஞ்சிராய்ப் பால்அ ளித்தாய்!
செட்டுற்ற நெஞ்சினர்கள் உணராத பரதனே!
சிறுதேர் உருட்டி யருளே
செம்புநதி வைகையொடு திகழ்பாண்டி நாயகா!
சிறுதேர் உருட்டி யருளே.
95✓
வெண்ணீறு முதலாய(து) அணியாமல்
ஊன்உண்டு வீணே திரிந்த தலைகள்
வெட்டுண்டு மதியுண்டு கெட்டுண்டு கொத்துண்டு
வெம்பாலை அதனில் உருள,
தண்ணீர் வளங்குலவும் நானிலத்(து), அறுவகைச்
சமயத்தி னோர்கள் செங்கைத்
தடமலரில் மணியுருள, நாவிலவிர் மந்திரம்
தாரகத் தோடும் உருள,
பெண்ணீலி யர்க்குருகி டாதசிலர் நெஞ்சில்உறு
பேரின்ப வாரி பொங்கிப்
பிரவாளம் எனவிழிகள் வழியுருள உணர்வரிய
பேரம் பலத்தில் நின்று
தெண்ணீர் குலுங்கநடம் இடுபரமர் மைந்தனே!
சிறுதேர் உருட்டி யருளே
செம்புநதி வைகையொடு திகழ்பாண்டி நாயகா!
சிறுதேர் உருட்டி யருளே.
96வேறு சங்கு ஒலிக்குமிடங்கள்✓
மகளிர் கழங்கா டியகரத்தில்,
மணிப்பூண் ஒதுக்கும் 'பலமறுகில்,
வாவி அலரும் மலர்ப்பொகுட்டில்,
வளஞ்சேர் சாலி வயல்வரம்பில்,
திகழும் மாட மனைமுன்றில்,
தெண்ணீர்ச் சாலிற், செழும்பொழிலில்
திருமால் முதலோர் சிலர்வாயில்,
சிற்றம் பலத்தோன் செவித்துணையில்,
மகரக் கொடியோன் சிலைப்பெருக்கில்
வாழை நிழலிற் புனலூறும்
மள்ளர் குடிலில் வளைமுழங்கும்
வளத்தால் உயரும் புலியூரில்
ஓகரப் பரிமேல் வருங்குமரா!
உருட்டி யருளாய் சிறுதேரே
ஒளிர்வேல் பிடித்த பாண்டியனே!
உருட்டி யருளாய் சிறுதேரே.
97✓
எட்டாய் இலங்கிப் பலவாறாய்
இசைந்து கிடக்கும் தமிழ்வண்ணத்(து)
இயல்பிற் றவறாத் திருப்புகழ்நூல்
இயம்பும் முதுமைப் புலவோர்க்கும்,
தட்டா(து) ஒழுகும் நயம்உணரும்
தக்கோர் தமக்கும், தினம்படிக்கும்
தகைமை யினர்க்கும், செவிகொடுக்கச்
சலியா தவர்க்கும், சார்ந்தோர்க்கும்
நட்டார் பலர்க்கும், அவர்பெருமை
நவிலத் துணியும் நல்லோர்க்கும்,
நமன்வேள் பிரமன் அணுகாத
ஞானா னந்தப் பேறருளி
ஓட்டார் குடிக்கு நெருப்பாவாய்!
உருட்டி யருளாய்! சிறுதேரே
ஒளிர்வேல் பிடித்த பாண்டியனே!
உருட்டி யருளாய்! சிறுதேரே!
98வேறு தனத்தானன தனத்தானன தனத்தானன தானா✓
முருக்கம்இத ழுடைப்பாவையர் முலைச்சோடுறு மார்பா!
முதற்காரணன் எனத்தேறிய முனிக்கோனணி தாளா!
பெருக்காவரு திதற்றானவர் பிழைத்தோடவி டாதாய்!
பிறப்பேழையும் அறுத்தோர்கதி பெறப்பேசிடும் வாயாய்!
தருக்காலெதிர் திரட்சாரணர் தமக்கோர்நம னானாய்!
தனித்தாரக மதிற்சேரொளி தனிற்றோய்தரு சீலா!
உருக்காமுயர் அயிற்சேவக! உருட்டாய்!சிறு தேரே.
உவப்பால் நடம் நடிப்பார்சுத! உருட்டாய்!சிறு தேரே.
99✓
மரத்தோடலை கடந்தாடிய வலுச்சேர்கதி வேலா!
மழைக்கோன்முடி கவித்தேயவன் மகட்சேர்மண வாளா!
கரத்தோவாறு கிளிக்கோநுவல் கவிக்காவலு ளானே!
கருத்தோடொரு குறக்கோமளை கழற்பேணிய வேடா!
சரத்தோர் தொழும் நவச்சேவகர் 'தமக்காதர வானாய்!
சழக்காகிய மதத்தீயவர் சபைக்கோரிடி யேறே!
உரத்தோள்புனை சமர்ச்சேவல! உருட்டாய்சிறு தேரே
உவப்பால்நடம் நடிப்பார்சுத! உருட்டாய்சிறு தேரே.
100வேறு தனனாதனத் தனனாதனத் தனனாதனத் தனனா✓
சிவனார்நுதற் சுதனே!எழிற் சிறுதேர்உருட் டுகவே
திறல்வேலுடைக் குகனே!திருச் சிறுதேர்உருட் டுகவே
சிவலோகசற் குருவே!தனிச் சிறுதேர்உருட் டுகவே
திகழ்மாமயிற் பரியாய்!மணிச் சிறுதேர்உருட் டுகவே
சிவமானபொற் சரணா!அருட் சிறுதேர்உருட் டுகவே
தெருள்பாவலர்க் கருள்வாய்பொலச் சிறுதேர்உருட் டுகவே
சிவமார்தமிழ்ப் புலவா!புதுச் சிறுதேர்உருட் டுகவே
செறிவார்பொழிற் புலியூர்தொழச் சிறுதேர்உருட் டுகவே.