சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிறுபறைப்பருவம்10 / 12
சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப்பெருமான் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
சிறுபறைப்பருவம்
81சிறுபறைமூலம் ஒலிஎழுப்பி மக்கட்குச் செய்திகளை விளக்கும்படி கூறுதல்✓
உரையுணர்(வு) இறந்தமுழு மோனமே இனிதென்றும்,
ஒருவனே கடவுள் என்றும்,
ஒருகோடி சமயத்துள் ஓராறு சமயமே
உயர்வென்றும், உயிர்கொன் றிடா(து)
இரைநுகரும் மிருகத்தும் ஏனைமா னிடராகும்
ஈனர்இழி வுள்ளார் களே
என்று(ம்),மறை பலகோடி ஒன்றொடொன்(று)ஒவ்வாமல்
இகலுவது பழமை என்றும்,
கரைதவிரும் ஆனந்த வாரிதரும் அமுதெனக்
காணல்குரு பாதம் என்றும்,
கயலனைய விழிமகளிர் மயலொழியும் நலமடைதல்
கடினமே யாகும் என்றும்,
திரைகடற் கலையே ழுடுத்தஉலக(கு) எங்கெணும்
சிறுபறை முழக்கி யருளே
சிவசிதம் பரர்மகிழ வருபாண்டி நாயகா!
சிறுபறை முழக்கி யருளே.
82✓
எப்படித் தக்கநலம் உற்றார்க ளேனும்அருள்
இல்லார்கள் எளியர் என்றும்,
இழிவெலாம் உடையார்கள் எனினும்அது பெற்றோர்கள்
யாவர்க்கும் ஏற்றம் என்றும்,
முப்பழச் சாறனைய செந்தமிழை அன்னகலை
மொழியவே றில்லை! என்றும்,
முற்பிறவி, பிற்பிறவி ஒப்பாத மூடர்பகர்
முத்தியும் முழுப்பொய் என்றும்,
மெய்ப்பிரம நிலைசச்சி தானந்த மயம்என்றும்,
வெவ்வேறு வாறு கூறி
வெறுவாயை மெல்வோரும், உயர்பத்தி யால்உணர்வில்
மேவுவது சகசம் என்றும்,
செப்பனைய பலகோடி அண் டத்தி னும்சென்று
சிறுபறை முழக்கி யருளே
சிவசிதம் பரர்மகிழ வருபாண்டி நாயகா!
சிறுபறை முழக்கி யருளே!
83✓
ஒருமதத் தொருதலைவர் உண்டாகி, மற்றவர்
உளம்பதற மோதும் வேளை
ஒத்திருப் பதுதிரு வருட்செயல் வழக்கென்றும்,
உன்னுவது போல எல்லாம்
தருமமொடு சத்தியமும் வடிவான தெய்வம்
தழைப்ப(து)உண் டென்றும், அழியாச்
சமரச சுபாவம் துளக்குவது முன்செய்த
தவமென்றும்,மாறி லத்தில்
குருமர(பு) இலாதமதம் இலைஎன்றும், அருள்வலிமை
கொள்ளாத ஞானம் எல்லாம்
கொற்றவர்கள் முதலான பொருளாள ரைக்கண்டு
கூசிக் கிடக்கும் என்றும்,
திருமறுகு தொறும், அறிஞர் சித்தம் தொறும், சென்று
சிறுபறை முழக்கி யருளே!
சிவசிதம் பரர்மகிழ வருபாண்டி நாயகா!
சிறுபறை முழக்கி யருளே!
84✓
எம்மதத் தாடல்களும் என்தாதை யாடலே
என்றும், அவைதோறும் மேவி
இகலறுத் தவர்,அவர்க்(கு) உவகைதரு குருவெலாம்
யானன்றி இல்லை என்றும்,
மெய்ம்மதத் தொடுத்தும் அதுபோல மற்றதில்
வியப்பொன்று மேவும் என்றும்,
வீடுணரும் ஞானியே விழியுடையன் என்றும்,அவன்
மெல்லமலர் வாய்தி றந்தால்
பொய்ம்மத தினர்தாமும் ஒத்துரை பயிற்றுவது
புதுமை என்றும், கருத்துப்
போனபடி ஒருநாம ரூபம்வைத் தாலும்அது
பூரணத் துடைமை என்றும்,
செம்மணிக் குவடனைய பன்னிரு புயங்களால்
சிறுபறை முழக்கி யருளே
சிவசிதம் பரர்மகிழ வருபாண்டி நாயகா!
சிறுபறை முழக்கி யருளே.
85முருகப்பெருமானை முன்னிலையாக்கித் தத்துவம் உணர்த்தல்✓
உன்றனை அலாமலொரு தெய்வமுண் டென்னநான்
உன்னிடேன், நின்மு கங்கள்
ஓராறு திசையுமே, ஈராறு சமயமும்
உனக்குள்ள தோள்கள், இச்சை
குன்றவர் வளர்த்தகொடி, கிரியையக வான்மகள்,
குறிக்கரிய ஞானம் வைவேல்,
குணமூன்றும் மயிலுடன் தகரும்வெண் களிறும்,
குக்குகு கூ என்று கூவி
நின்றதொரு சேவலே நிறைவாய புகழ்,என்கை
நீயுணர்ந் திடஉணர்ந்தேன்
நிசமான பிரணவப் பொருளும் கொடுத்தாய்!உன்
நேயமே போதும் என்று
தென்றலங் கிரிமுனிவன் வழிபடும் குருபரா!
சிறுபறை முழக்கி யருளே
சிவசிதம் பரர்மகிழ வருபாண்டி நாயகா!
சிறுபறை முழக்கி யருளே.
86வேறு
பலவித ஒலி நிகழ் பான்மை கூறல்✓
காவாழ் புலவர் முடியொலியும்,
கனக சபையிற் சிவன்ஆடும்
கழலின் ஒலியும், சிலம்பொலியும்
களிக்கும் உமையாள் களத்தொலியும்
தேவா ரங்கள் முதலாய
திருநூல் ஒலியும், அரிபிரமர்
சிறக்கும் கணங்கள் கொளும்கருவித்
திரட்பே ரொலியும், தெருநிறையப்
போவார் ஒலியும், களிறொலியும்,
புரவி யொலியும், விடையொலியும்,
பொழிற்புள் ஒலியும், வளையொலியும்,
பொலியும் பெருமை சிறிதேனும்
மூவாப் புலியூர் முருகோனே!
முழக்கி யருளாய் சிறுபறையே
முதன்மைப் பாண்டி நாயகனே!
முழக்கி யருளாய் சிறுபறையே.
87வெண்முத்துகள் விளங்கும் இடம்✓
வன்னக் கதலிப் பெருந்தாற்றில்,
வயலிற் பொலிநெற் கதிர்க்குலையில்,
வாவிக் கமல மலர்ப்பொகுட்டில்,
மறுகிற் றிரியும் வளைவாயில்,
கன்னற் கணுவில், நெடும்வேயில்,
கலிக்கும் பலமுத் தமும்சேர்த்துக்
கன்னிப் பருவக் கடைசியர்கள்
கள்ளுக்(கு) அளந்து களித்தவர்நேர்
சின்னப் பயல்கள் உடன்கூடிச்
சிலவா றாடி, மகிழ்கூறத்
திகழும் புலியூர் நலம் விளைக்கும்
தீபம் அனைய செழுஞ் சுடரே!
முன்னற் கரிய வடிவுடையாய்!
முழக்கி யருளாய் சிறுபறையே
முதன்மைப் பாண்டி நாயகனே!
முழக்கி யருளாய் சிறுபறையே.
88வேறு
தனனாதன தனனாதன தனனாதன தனனா✓
பிணியாமென உலகோர்பகர் பிழையோர்குடி கெடவே
பெருகார்வமொ டுனையேபணி பெரியோர்மகிழ் வுறவே
துணிவோடுயர் வதையேபுரி துகளார்மதம் அறவே
சுடர்வேல்மயில் எனஓதிய தொழிலாளர்கள் மிகவே
கணியாமென வனமூடுறு கருணாகர முருகா!
கதியாமதின் விதையாகிய கழல்சேர்குரு பரனே
அணிசேர்சடை யினர்பாலக! அறையாய்சிறு பறையே
அழியாதுயர் தமிழ்நாயக! அறையாய்சிறு பறையே.
89✓
கொடியோர்களும் மதவேரொடு குலவேரற முனிவாய்!
குறமாதுடன் மகவான்மகள் குணம்யாவையும் உணர்வாய்!
வடிநேரம துணர்சேவலை விறல்வேலொடு புனைவாய்!
விளையாடலை நிதம்நாடியுள் மெலிவார்தமை அகலாய்!
துடிநாடகம் இருதாள்கொடு சுகவாரிதி அருள்வாய்!
சுரர்மீதொரு முதுசூர்இடு சுமைதீர்சமர் புரிவாய்!
அடியார்மிகு பொதுவார்சுத! அறையாய்சிறு பறையே
அழியாதுயர் தமிழ்நாயக! அறையாய்சிறு பறையே.
90✓
அரிஆழியை அருள்வேலவ! அறையாய்!சிறு பறையே
அதிமோகன வடிவார்குக! அறையாய்!சிறு பறையே
அரிமாமகள் புணர்சேவக! அறையாய்!சிறு பறையே
அடல்சேர்குற மகள்காவல! அறையாய்!சிறு பறையே
அரியாகிய மயிலார்பவ! அறையாய!சிறு பறையே
அவரேறற வருதேசிக! அறையாய்!சிறு பறையே
அரியார்கழல் அரனார்சுத! அறையாய்!சிறு பறையே
அழியாதுயர் தமிழ்நாயக! அறையாய்!சிறு பறையே.