நதியெங்கு மூழ்கித் தலந்தோறும் சுற்றியும்
நல்லநிய மங்கள் செய்தும்
நானென்ற ஆணவந் தள்ளினோ மென்றுசிவ
ஞானங்கள் பலபேசியும்
கதிகொண்ட மவுனியாய் அட்டமா சித்தியொடு
கற்பந் தனைப்பு சித்தும்
கண்ணிறுக மூடிச் சிவானந்த மென்றுசெயல்
கண்டி ருந்தோ மென்னவும்
எதிரொருவ ருக்கொருவர் தர்க்கித்து மற்கட்டி
இப்படி அனந்த கோடி
இதுவல்ல அதுவல்ல என்றுபோ ராடுவது
என்னவகை யோஅறி கிலேன்
சதமென்று உன்னைநான் நம்பினேன் நம்பினேன்
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவணப வானந்தனே.