முருகன் App
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
அம்புலிப்பருவம்8 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

அம்புலிப்பருவம்

சாமம்
62முருகனோடு சந்திரனைச் சமத்துவப்படுத்தி அழைப்பது✓
திருமருவு கார்த்திகைப் பெண்கள்முலை தொடுநலம்
சித்தித்த வண்மையாலும்;
சேவிலொரு வேளை,அடல் மேடத்தி லொருவேளை,
திகழ்கின்ற தன்மையாலும்;
கருமயிற் றொடர்பாலும்; அனலனைய சோதியைக்
கவினுறப் புணர்தலாலும்;
கனவிசா கத்தினிற் பிரியமுற லாலும்;அவிர்
கதிர்வட்ட நடுவிலுற்று
வருகின்ற தாலும்;அம் பரவிழிக் கொண்டுலகை
வலமாத லாலும்; விண்ணூர்
மறையவன் சொல்விழைத லாலும்,இவ னுன்றனை
மனத்(து)இணை யெனக்குறித்தான்
அருள்ததி தரும்அமுதம் நிகர்முருக வேளொடினி(து)
அம்புலீ ஆடவாவே .
அணிபொழிற் றேவபுரி வளரயிற் சேவகனொ(டு)
அம்புலீ ஆடவாவே.
63✓
கடகமரு வுங்கர மிகப்பெறுத லாலும்,ஒரு
கன்னிவலி திற்புணர்ந்த
காரணத் தாலும்,வெண் சிங்கமுக முற்றும்
கழித்துமகிழ் பெருமையாலும்
இடமுறுந் துலைகொண்டு செட்டியென் றுலகினர்
இயம்பிடக் குலவலாலும்,
ஈசனொரு கண்ணின்மணி யென்றுவே தாகமம்
எடுத்திசைக் கின்றதாலும்,
திடமிகுந் தனுசொன்று கொளலாலும், மகரமலி
செவியாலும், மதனவேடன்
சிரமேல் நடக்கும் புகழ்ச் சீரி னாலும்,மயல்
செறிமகளிர் நிந்தையாலும்,
அடலவுணர் பகையாலும், உனையன்ன குமரனுடன்
அம்புலீ ஆடவாவே,
அணிபொழிற் றேவபுரி வளரயிற் சேவகனொ(டு)
அம்புலீ ஆடவாவே.
64✓
காதல்மலி வெய்திக் கசிந்துருகு வாட்கினிது
கைகொடுத் திட்டதனையும்
கலைவல்ல புலவனொரு வனையளித் திடலையும்
கமலமலர் முழுதும் ஒல்கும்
சீதள முகந்துன்று தலையும், மலை உச்சியிற்
றினமும் நில வலையும், அலைநீர்
சிந்தைமகிழ் வுறவந் துதித்தலையும், வெண்கணம்
செறியநடு நிற்றலையும், மீன்
கேதனத் தெழுதுகுலம் வாழுவைத் தலையும்
கிளிக்கிறைவன் ஆடல்நீடக்
கிளர்தலையும், ஒருபதிற் றாறுகலை கொண்டுவளர்
கீர்த்தியையும், எண்ணி நின்மீ(து)
ஆதரம லிந்தழைக் குங்குமர குருபரனொ(டு)
அம்புலீ ஆடவாவே
அணிபொழிற் றேவபுரி வளரயிற் சேவகனொ(டு)
அம்புலீ யாடவாவே
65பேதம் சந்திரனொடு முருகன் உயர்வு கூறி, அழைப்பது✓
சிற்றவுண ருக்கும்அஞ் சுறுவைநீ! இவனவர்
திறற்படைக் கொரு கூற்றுவன்;
செங்கதிர்முன் உனதொளி மழுங்கும்; இவன் முன்னதொரு
செயலுமில் லாதுமறையும்
கற்றவரு னைப்பெரி திகழ்ந்திடுவர்; இவனைமெய்க்
கருணையங் குரவனென்பார்
காதல்மட மங்கையர்க்(கு) இயமநீ; இவனவர்
களிப்புற முயங்கு காளை;
பொற்றடங்கிரியினைச் சூழ்வைநீ; இவனது
புலம்பப் புடைத்த கையான்;
பொருவரு களங்கன்நீ; இவன்மறுவில் பேரருட்
புனிதன்; உனை நனியழைத்தான்;
அற்றமிது நன்றுநன்(று;)அறுமுகக் கடவுளுடன்
அம்புலீ ஆடவாவே
அணிபொழிற் றேவபுரி வளரயிற் சேவகனொ(டு)
அம்புலீ ஆடவாவே
66✓
மின்படு முகிற்றிரளும் உனைமறைத் திடும், இவன்
வியன்புகழ் மறைப்பதில்லை;
விபுதரு டொருவன்நீ, இவனவர்க் கரசனது
வெந்துயர் ஒழித்தவீரன்;
மன்பதைத் திரளன்றி மற்றையி ருங்கணும்
வாழ்க்கைஉன(து), அளவில்கோடி
மறைகட்கும் அறிவரிய நிலையுடைய னிவன்; ஒருபுள்
வந்துகொத் தத் தளர்வை நீ,
முன்பகர் திறற்புள்ஒரு மூன்று தொழ மகிழ்வனிவன்;
முப்பது தினத்தி லொருநாள்
முழுமையுறு வாய், அணுவில் அணுவா நிறைந்ததனி
முதல்வனிவன்; விழைதல் எளிதோ?
அன்பருக் கோரெளிய னானமுரு கையனுடன்
அம்புலீ ஆடவாவே
அணிபொழிற் றேவபுரி வளரயிற் சேவகனொ(டு)
அம்புலீ ஆடவாவே
67தானம் இன்ன இன்ன பரிசு பெறலாம் என்று கூறி அழைப்பது✓
செங்க னெடுமா லெனவுனது
சீரார் குலத்தில் வருமொருவன்
திருக்கை நிமிர்த்த கரத்தினுக்குன்
தேகச் சயநோய் ஒருபெரிதோ?
வெங்கண் அரவம் இரண்டினையும்
விழுங்கத் தகும்புள் இரண்டிருக்கும்
விதந்தேர்ந் திலையோ? விடம்போலும்
விழியார் எருவிட் டெறிதரும்ஓர்
பங்கந் தவிரப் பெறலரிதோ?
பகைச்சூர் முதலோர் ஈடழித்துப்
பைம்பொ னகரிற் குடியேற்றும்
பழைய உதவி மறந்தனையோ?
அங்கண் மயில்வா கனக்குகன்பால்
ஆடவாராய் அம்புலியே
அருள்சேர் தேவை முருகனுடன்
ஆடவாராய் அம்புலியே!
68✓
தோயுந் தமிழ்ச்சீர் குறுமுனிக்குத்
துலங்கப் பகர்ந்தான்; பிரமனுக்குத்
தொல்லைப் பிணியாம் ஆணவநோய்
தொலையப் புரிந்தான்; சுடராழி
ஏயும்படிமா யனுக்களித்தான்;
இறைவன்றனக்கும் பிரணவத்தின்
இயல்பைத் தெரித்தான்; எவரெவர் வந்(து)
எவைவேண் டினுமிக் கீந்துளன்காண்;
நீயும் விரும்பு மவைமுழுதும்
நெறியிற் பெறலாம்; ஒருகிளியும்
நீபத் தடந்தோள் மிசையேறி
நிலவப் பெறல் கேட்டிடலை கொல்லோ?
ஆயும் பெருமைச் சரவணன்பால்
ஆடவாரா யம்புலியே!
அருள்சேர் தேவை முருகனுடன்
ஆடவார்தா யம்புலியே!
69தண்டம் வராவிடில் ஒறுத்தல் நேரும் என அச்சுறுத்தி விளித்தல் வேறு - சந்தம் தந்தன தானன தந்தன தானன தந்தா னந்தனனா✓
தந்த வெளானைய தன்பகை நேரில்அ
தந்தான் உண் டொழிவாய்!
தண்டை குலாவுப தம்பெறும் ஆடு,த
ருங்கோபங் கொடிதே;
பைந்தகை மாமயில் அங்கத ஊனுகர்
பண்பார் கின்றதலோ?
பண்கொடு கூவுந லந்திகழ் சேவல்ப
றந்தா லும்பொடிவாய்!
வெந்தழல் நேர்விழி செண்டொளிர் வீரர்மி
கும்பேர் உண்டறிவாய்!
விண்டவரு டொரு வன்கதி ரோன் இகல்
வென்றோன் அன்று கொலோ
மந்தணம் ஈசனு டன்பகர் சேயெதிர்
வந்தாடம் புலியே
வண்பெறு தேவைபு ரந்தவி சாகன்முன்
வந்தாடம் புலியே.
70தத்தன தானன தத்தன தானன தந்தா னந்தனனா✓
இத்தனை தூரம ழைத்தும்வ ராமல்கி
ருந்தாய், உங்கள்பிரான்
எய்த்தொரு வேயுரு வத்தொடு காவிரி
யின்பால் நின்றஅநாள்
அத்தனை பாடுப டுத்திய சூரனை
அங்கே வென்றதனால்
அத்தம தாம்நக ரிற்குடி மேயினை
அன்றோ? நன்குணராய்!
பித்தரில் மோசமு றத்துணி யேல்!மருள்
பெண்பா வம்பலநீ
பெற்றுளை! யாதுவ ரப்பெறுவாய் கொல்?பி
ணங்கேல்! பிங்கலம்நேர்
மத்தக வேழமு கற்கிளை யானுடன்
வந்தா டம்புலியே
மற்பொலி தேவைந கர்க்கு மரேசன்முன்
வந்தா டம்புலியே.
71தானன தந்தன தானன தந்தன தானா தந்தனனா✓
மாதவ னும் புகழ் சீர்பெறு கந்தன்முன்
வாவா அம்புலியே!
மாசறும் ஐங்கர னார்மகிழ் தம்பிமுன்
வாவா அம்புலியே!
மாதர்ம னங்கவர் ஆறிரு மொய்ம்பன்முன்
வாவா அம்புலியே!
மாழையும் ஒஞ்சுவ தாயக டம்பன்முன்
வாவா அம்புலியே!
மாதரு மங்கைம ணாளன்வ ருந்துமுன்
வாவா அம்புலியே!
மாவவை கிர்ந்துள கோபம்வி ளங்குமுன்
வாவா அம்புலியே!
வாதப யந்தவிர் வாழ்வருள் மைந்தன்முன்
வாவா அம்புலியே!
வாய்மைம லிந்துயர் தேவையின் நண்பன்முன்
வாவா அம்புலியே.