தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சப்பாணிப்பருவம்5 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
சப்பாணிப்பருவம்
32முருகன் சப்பாணி கொட்டுதலால் கொட்டும்
பொருள்கள்✓
வண்குலவு சோலைதொறும் உலவைவந் துலவுதலின்
மலர்கொட்ட முகிலினங்கள்
வானரம்ந டுங்கமயில் களிகூர ஓயாத
மழைகொட்ட வான ளாவும்
திண் குவடு தொறும்நின்று கல்லென இரைந்துபல
தெள்ளருவி கொட்ட இமையாத்
தேவர்அவர் மாதரொடு வந்(து) எயினர் அறியாது
சிறிதுகண் கொட்ட ஒருபாற்
பெண்குடிகொள் ஆதிப் பிரான் அனையர் மலர்மகப்
பேரழலில் அவிகள் கொட்டப்
பெருமுலைக் குறமகளிர் பிணையினது தோல்கொடு
பிணித்தமண முழவு கொட்டும்
தண்குறிஞ் சிக்கிறைவ னானகும ரேசனே
சப்பாணி கொட்டி யருளே
தமிழ்வளம் பெறுதேவை நகர்புரந் தருள்வேல
சப்பாணி கொட்டி யருளே.
33✓
வானவர் பிரானரண் மனைக்கோபு ரத்தடியில்
மருவுமும் முரசுகொட்ட
மறிதிரைப் பாற்கடலின் மதியொடு பிறந்தபல்
மங்கையர்கள் செங்கை கொட்ட
மீனவன் வளர்த்ததமிழ் வாரிநுகர் முகிலனையர்
மிகுகவிதை மாரி கொட்ட
வெண்ணீ றிடாப் புலையர் குலவே றறக்கறுவும்
வீரர் தம்தோள் கொட்டவிற்
கானவர் குறிச்சியிற் றொண்டகம் கொட்டக்
கருங்குழற் கற்றை படரும்
கனகமயில் நிகர்பதும கோமளை முதற்பலோர்
கண்கள் நீர்கொட்ட லெண்ணித்
தானவர்கள் நெஞ்சகம் பறைகொட்ட ஒருசிறிது
சப்பாணி கொட்டியருளே
தமிழ்வளம் பெறுதேவை நகர்புரந் தருள்வேல
சப்பாணி கொட்டியருளே.
34முருகன் கைகள் தொடுமிடம்✓
காமனை யெதிர்த்தவர் சடைக்கொன் றையும் கவுரி
கார்த்திகை உடுக்கள் என்னும்
கன்னியர்கள் கண்களும் கனகநக ரிற்குலவு
களிறுதுவு மகள் கொங்கையும்
கோமளக் குயிலனைய குறமகள் பதங்களும்
குட்டுணும் பிரமர் தலையும்
குளிர்பொழிற் றிருவருணை மாநகரில் ஒருபழைய
கோபுரத் துய்ந்த கிளியும்
நாமகள் படிக்கக் கொடுத்த சுவடியும் வழுதி
நலமுற எடுத்தநீறும்
நம்பியு மறந்த ஒரு தொண்டன்மனை யிற் களியும்
நாடொறுங் கமழ மலரும்
தாமரை மலர்த்திரள் எனத்தகு கரங்களாற்
சப்பாணி கொட்டியருளே
தமிழ் வளம் பெறுதேவை நகர்புரந் தருள்வேல
சப்பாணி கொட்டியருளே.
35முருகன் கரங்கள் முன் செய்த செயல்கள்✓
இரவுபகல் மாறாடி மலைகளைப் பந்தென
எடுத்தெறிந்(து) ஆழிஏழின்
இடையூழுக் கித்திசைப் பாலகரை வென்று புவி
யாவும் படைத்த வன்றன்
கரமொடு பதங்களுக் கானதளை யிட்டுக்
களிற்றுமுகன் ஆதியாய
காரவுண ரைச்செற்று வானகத் தமரர்தம்
காற்றளை களைந்து மகவான்
அரவபடம் நிகரல்குல் அயிராணி யொடுமகிழ
அம்பொன்மணி முடிசூட்டி வெள்
ஆனைமக ளீடேற மங்கலம் அணிந்(து) உண்மை
அடியவர் விருப்ப முற்றும்
தரஒரு சலிப்பின்றி மிளிர்கின்ற கைகள் கொடு
சப்பாணி கொட்டியருளே
தமிழ்வளம் பெறுதேவை நகர்புரந் தருள்வேல
சப்பாணி கொட்டியருளே.
சப்பாணி கொட்டும் காரணம்✓
இமையசையு மவ்வளவு போதுமுனை மறவார்
இடர்ப்பிணி யிடைப்படாமல்
ஈசிரு மறைப்பொருள் உணர்ந்தபெரி யோர்பலரும்
ஈனருக் கொல்குறாமல்
கமையொடு தராதரம் அறிந்(து) உதவ வல்லவர்
கலிக்கடலின் மூழ்கிடாமல்
கபிலையொடு கன்றரிந் துண்பவர் இடத்தினிற்
கமலைகுடி கொண்டிடாமல்
சிமையமுழு மைக்கும் தமிழ்க்கவி சொலக்கருது
சீரியர் திகைப்புறாமல்
சேவலங் கொடியே செயம்செயம் எனப்பகர்
திருப்புகழ் மறைந்திடாமல்
சமையங்கள் ஈராறும் நம்பியத டங்கைகொடு
சப்பாணி கொட்டியருளே
தமிழ்வளம் பெறுதேவை நகர்புரந் தருள்வேல
சப்பாணி கொட்டியருளே.
37வேறு
மகுடம்
வண்டுகளின் செயல்✓
அளியினம் மொகுமொகெனும் இசையொடு பறந்து வந்(து)
அணிபொழிற் றலையின் மலர்வீழ்ந்(து)
அதைவிட்டு மறுகுதொறும் உலவுகளி றுமிழ்மதம்
அருந்திஅத னையும்நீத் துமேல்
தெளிபுனற் றட மனந் தந்தொறு மலர்ந்தபல
செங்கமலம் ஆதிநல்கும்
சிறுதுளித் தேன்பருகி அமையா தெழுந்தணி
திருந்திழை மடந்தை நல்லார்
களிநலம் பொலியாடல் பயிலரங் கிற்சென்று
கண்கள்முத லாம்உறுப்பைக்
கருதிஇமை குவிதல்முத லாவன குறித்துக்
கழித்(து) அளகமலரில் வைகிக்
குளிர்வியன் திகழ்தேவை நகரில்வந் தமர்சாமி
கொட்டியருள் சப்பாணியே
குமரகுரு பரமுருக சரவணப வாஇனிது
கொட்டியருள் சப்பாணியே.
38வேறு
மயிலின் தன்மை✓
நாலா னனத்தான் முதல்மூவர்
நண்ணும் தலமாம் இரவியையும்
நளிர்வெண் கதிர்கால் மதியினையும்
நடுங்கப் படுத்தும் இருபாம்பைக்
காலா னவற்றில் இருபணியாய்க்
கவினப் புனைந்து கனற்கோபக்
கலுழன் வெருளக் கனன்(று) அகவிக்
கலபச் சுமையாற் களையாமல்
வேலா வலயம் சிலகடந்து
வெள்ளை நிறப்பாற் கடல்நடுப்போய்
விண்டு வுறங்கு மாசுணத்தை
விரைவி லெடுத்து நடமாடும்
கோலா கலமா மயிற்குமரா
கொட்டியருளாய் சப்பாணி
குலவுந் தேவ புரிக்குகனே
கொட்டியருளாய் சப்பாணி.
39வேறு
சந்தம்
தனதன தானன தனதன தானன
தத்தன தத்தான✓
இருநில மாதிகொ(டு) உயிர்வரை ஓதிடும்
எட்டுரு வத்தோனும்
எழில்மலி தாமரை மலர்வளர் பூமகள்
இச்சையு டைக்கோனும்
அருமறை நூல்பகர் பிரமனும் நாடும்நின்
அற்புதம் எப்போதும்
அறைதரு பாவலர் பழவினை வேருடன்
அற்றொழி தற்காக
ஒருதர மாயினும் மயில்மிசை நீவரல்
உட்கரு தித்தாழ்என்
உரிமையெ லாம்அறி திறல்இலி நீயெனில்
ஒப்பிலன்; நத்தாய்கொல்
குருபர; தேவையில் வருகும ராநனி
கொட்டுக சப்பாணி
குணமலி சீர்திகழ் கணபதி சோதர
கொட்டுக சப்பாணி.
40சேவலொலியால் திகழும் செயல்கள்
தனதன தானன தனதன தானன
தத்தன தத்தான✓
இடிநிகர் பேரொலி தருதிசை வேழம்இ
டுக்கண் உறத்தேவர்
இதுமுடி வூழிகொல் எனமலை யாவும்
இருப்பில் மிகப்பேர
வடிவில் மகோததி அலறிட வீரர்ம
னத்துணி வைப்போட
வலிகெழு தானவர் அனைவரும் நாணிவ
னத்தில்ஒ ளித்தோட
அடியவர் சேகரம் உனதருள் பாடிஅ
ளப்பில்உ வப்பாக
அணிகட காதிகள் ஒலிதர ஆறணி
அத்தனை னச்சீர்கொள்
கொடிநிமிர் தேவையில் அமர்கரு ணாகர
கொட்டுக சப்பாணி
குணமலி சீர்திகழ் கணபதி சோதர
கொட்டுக சப்பாணி.
41தத்தன தானன தத்தன தானன—தத்தா னத்தான✓
விற்றகை வேடுவ ருக்குநல் வாழ்வருள்
வெற்பே முத்தேவர்
மெச்சிய தேசிக ஒப்புறு தாரக
வித்தே சிற்றேனல்
உற்றமி னாள்மிசை யப்படு மாநுகர்
உற்சா கக்காரா
உத்தம வீரர்வ முத்திய வேல்புனை
உற்பா தச்சீல
நற்றமிழ் தேர்அரு ணைக்கிளி பாடல்கள்
நத்தார் வத்தேவ
நச்சர வேறி நடிக்கு மயூரமந
டத்தாண் மைப்பால
குற்றமில் தேவையி டத்தமர் காவல
கொட்டாய் சப்பாணி
கொக்கற மோதிவ ரத்தகு சேவக
கொட்டாய் சப்பாணி.