தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
சிறுபறைப்பருவம்10 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
சிறுபறைப்பருவம்
82பறையறையுங்காற் பகரும் பொருள்கள்✓
ஆறுசம யங்களுந்நின் முகமான வாறும், உன(து)
அடியவர்க் கடிமையாகி
அவரடித் துகளைமுடி மிசையணியு மெய்யுணர்(வு)
அதற்கிணையி லாதவாறும்,
கோறுதொழி லும்புலைத் தன்மையும் தாவில்வினை
குன்று மென் றுள்ளவாறும்,
குருவடிவ மும்தரும மும்பத்தி யும்பொதுக்
கொள்கையென நின்றவாறும்,
கீறுமதி யனைய நுதல் மடவார்கள் மயல்மிகிற்
கீழ்மைவந் தெய்துமாறும்,
கிளர் சந் தமும் பொருவில் யமகமும் விளங்கவரு
கிள்ளைஉயர் வுற்றவாறும்,
சேறுறழும் நெஞ்சகத் தினரும்அறி தர இன்று
சிறுபறை முழக்கியருளே
செகதலம் புகழ்தேவை நகர்புரந் தருள்சாமி
சிறுபறை முழக்கியருளே.
83✓
மெய்ஞ்ஞான மாகிய விளக்கினொளி யாவது
விளங்கருட் சித்தியென்றும்
வியன்மருவு சகளமே நிட்கள சொரூபத்தின்
மேன்மையை யுணர்த்து மென்றும்
எஞ்ஞான்றும் அழியாத புகழ்நிறுத் துங்குணம்
எவர்க்கும் எய் தாததென்றும்
இந்திரா தியராய வானவர்கள் முத்தருக்(கு)
இணையாகி டார்கள் என்றும்
அஞ்ஞான மெனவளரும் ஆணவத் தகுவனுக்(கு)
அணிமகுடம் ஐயம் என்றும்
அகிலத்தி னுக்குதவி செய்யநண் ணாதவர்கள்
அலகையிற் கொடியரென்றும்
செஞ்ஞாயி றாமெனத் திகழ்தர விளங்கிஒரு
சிறுபறை முழக்கியருளே
செகதலம் புகழ்தேவை நகர்புரந் தருள்சாமி
சிறுபறை முழக்கியருளே.
84✓
அருள்வளமை யொடுநிலவு சகளத்தி யானத்தை
அன்றியொரு மார்க்கமில்லை
அது தொட்ட நாளிலொரு சமயமே மிக்கதென்
றவிர்தரும் அதிற்று ணிந்தாற்
பொருள்வரவு போக்கற்ற பொதுவா யிலங்கும்அது
புந்தியிற் றோன்றினாலும்
பொருவரிய தூலவெளியிற் காணும் வரைமுயலல்
போதநன்(று) அதனை நீங்கி
இருள்வசத் தினராய் அகம்பிரம வாதத்
தினிற்சென் றிளைக்க ஒண்ணா(து)
இருநாலு சித்திகளும் ஒரு நாலு முத்திகளும்
ஏற்பவர் தமக்கும் நல்கத்
தெருள்வர் அவர் எனுமுண்மை புவியினும் திகழ்வுறச்
சிறுபறை முழக்கியருளே
செகதலம் புகழ்தேவை நகர்புரந் தருள்சாமி
சிறுபறை முழக்கியருளே.
85தீயமுழக்கம் பல நீங்கச் சிறுபறை முழக்கவேண்டல்✓
முத்துதிர் தரப்பல கணுக்கழை வளைக்குமதன்
முரசத்தி னதுமுழக்கும்
மூவகைப் படும் நெறியி னுட்கருமம் உயர்வென்ன
மொழிகின்ற நூல்முழக்கும்
தத்துதவி யளவறும் உயிர்த்தொகுதி யடுசமன்
தன் பகட் டடல் முழக்கும்
சாரணர் பவுத்தர்முத லாகியது டுக்கர்வதி
தரும்அவைப் பெருமுழக்கும்
அத்துவித அநுபூதி வந்ததொத்(து) இறுமாப்
படைந்து மகிழ் வார்முழக்கும்
அயர்வுற, எழுத்தாறும் மறவாத கவுமாரர்
அமர்திருப் புகழ் முழங்கச்
சித்துவிளை யாடித் தினந்தொறுஞ் சலியாது
சிறுபறை முழக்கியருளே
செகதலம் புகழ்தேவை நகர்புரந் தருள்சாமி
சிறுபறை முழக்கியருளே.
86✓
மந்திக் குணக்கயவர் கலைமுழுதும் அஞ்சமிளிர்
வண்டமிழ்க் கலைமுழங்க
வதைநல மெனச்சொன்ன மறைகள்ஒல் க,ப்பகவன்
மைந்தனுவல் மறைமுழங்க,
வெந்தித்த நீதிபுரி வாரழிய, நீதிபுரி
வேந்தர்தம் புகழ் முழங்க,
விடஅரவம் நிகர்கொடியர் மிடியடைய, முகிலனையர்
மிக்கவாழ் வொடுமுழங்கத்
தந்திக் கணத்தைநிகர் தகுவர்குலை யப், புலவர்
தமதுபே ரிகைமுழங்கச்,
சரதமறி யாப்பததர் தட்டழிய, மாதவத்
தன்மையோர் நனிமுழங்கச்
சிந்தித்தொர் ஐவகைநி லந்தொறும் சென்றினிது
சிறுபறை முழக்கியருளே
செகதலம் புகழ்தேவை நகர்புரந் தருள்சாமி
சிறுபறை முழக்கியருளே.
87வேறு
முருகனைச் சேர்ந்தார் முழுதும் ஆடுதல்✓
ஐயானனத்தோர் பரனாகும்
ஐயன் பொதுவில் அமரர் குழாம்
அறிய நடித்தான், அவன்மனையாம்
அன்னைதானும் அதுசெய்தாள்,
கையார் முகத்துத் துணைவன் ஒரு
கன்னிதனைத்தாங் கியும் நடித்தான்
காக்குங்கருணை பெறுமாமன்
கவின் மத்தளக்கா ரனுமானான்
எய்யா(து) அசலந் தொறுநடித்தாய்
ஏறும் மயிலும் நடிக்கின்ற(து)
இளப்பம் வருமென் றுளத்து ஒல்கேல்!
எழிற் றொண்டகக்கா னவர்மன்கண்
மொய்யார் தடந்தோள் ஆறிரண்டால்
முழக்கிய ருளாய் சிறுபறையே
முருகார் பொழிற்றே வையில்வணிகா
முழக்கியருளாய் சிறுபறையே.
மூன்றாசையினில் பொன்மயல் தீதெனல்✓
பற்றுந்தவத்தோர் அனைவருக்கும்
பார்பெண் பொன்னாம் பகைமூன்றே
பணிக்கே தனத்தோன் முதற்பலபேர்
படியாலி ழிந்து பாடிழந்தார்;
எற்றும் உரற்காற் றிசைவேழம்
இருநான்கினையும் பொருமார்பத்(து)
இகல் வாளரக்கன் ஒருமகளால்
எண்ணில் படையோ டிறந் தொழிந்தான்;
கற்றும் துறந்தும் திருவேடம்
கவினப் புனைந்தும் பலர்வாயிற்
கடையில் உழன்றார் சிலர்; அவற்றுட்
காணம் கொடிதாம் எனல் உலகம்
முற்று முணரத் திருவருளால்
முழக்கி யருளாய் சிறுபறையே
முருகார் பொழிற்றே வையில் வணிகா
முழக்கி யருளாய் சிறுபறையே!
89வேறு
சந்தம்
தனத்த தானன தனத்த தானன தனத்த தனதனனா✓
இறுக்கு பூண்முலை மறத்தி தாள்தொழு(து)
இருக்கும் இசையுடையாய்
எதிர்த்த சூரனை வதைத்து வானவர்
இறைக்கு முடிபுனைவாய்
உறுக்கு கார்நமன் அடுத்தி டாதருள்
உரத்தை யருள் குரவா
உமைப்பெ ணாள்இனி தெடுத்த போதுளம்
உருக்கும் நகைபுரிவாய்
கறுக்கு மாமயில் நடத்தி யேபல
கணத்தில் நடுமிளிர்வாய்
கருப்பு வார்சிலை பிடித்த வேள்படை
களிக்கும் எழில்முருகா
முறுக்கு கோடுறு தகர்க்கொள் சேவக
முழக்கு சிறுபறையே
முதற்கொள் தேவையில் வசிக்கும் வேலவ
முழக்கு சிறுபறையே.
90தானன தத்தன தானன தத்தன தனத்த தனதனனா✓
சேவல்போ றித்துயர் கேதன நட்பினர்
திடுக்க மற, முதுநூல்
தேர்பவ ரைப்பெரி தேசும டத்தினர்
செருக்கு நசிவுற, வேள்
ஏவ நகைத்தரு காமக ளிர்க்குளம்
இளைக்கும் இளையவர்போல்
ஏகியும், நிற்புகழ் பாவலர் வெட்கமொ
டிளைக்கும் வினைகெட, ஊர்
கோவறை யக்கவு மாரர்ப தத்துகள்
குவித்த தலையினின்ஓர்
கூபமமைத்துள பாறையி னிற்புனல்
குதிக்க, அதுமுதலாம்
மூவலில் சத்திய வாழ்வுபெ ருத்திட
முழக்கு சிறுபறையே
மூதுணர் வைத்தரு தேவையில் முத்தைய!
முழக்கு சிறுபறையே.
91தத்தன தானன தத்தன தானன தனத்த தனதனனா✓
மொய்த்தகை சால்அள கத்தினர் மோகனன்
முழக்கு சிறுபறையே
முற்றுணர் சீலமு டைக்கரு ணாகரன்
முழக்கு சிறுபறையே
மொத்தமு மாகி வியட்டியு மானவன்
முழக்கு சிறுபறையே
மொக்கணி வேழமு கற்கொரு சோதரன்
முழக்கு சிறுபறையே
முத்தமிழ் நாவல ருக்குயர் தாரகன்
முழக்கு சிறுபறையே
முட்பொலி தாளுறு குக்குட கேதனன்
முழக்கு சிறுபறையே
முத்தர னேகர்வ முத்திய சேவகன்
முழக்கு சிறுபறையே
முக்கணர் தேவையி னிற்றிகழ் வேலவன்
முழக்கு சிறுபறையே.