முருகன் App
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
முத்தப்பருவம்6 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

முத்தப்பருவம்

42✓
பத்தர்க் கெளியான் எனவுலகும்
பழைய மறையும் ஆகமமும்
பகரும் பெருமான் தரும் புதல்வா
பனிமால் வரையின் தவப்பயனாம்
அத்தக் கடகக் கரக்குயில்நேர்
அம்மை முலைப்பால் மணம்கமழ
அலர்செங் குமுத மலர்வாயாய்
அரவிற் றுயில்கூர் அரிமருகா
சத்தக் கடலின் அமுதனைய
தனிமந் திரத்தின் பொருள் உணர்வாய்
தந்தி முகப்புங் கவன் துணைவா
தலைமைக் குறுமா முனிமுதலாம்
முத்தர்க் கினிய குருபரனாம்
முதல்வா முத்தம் கொடுத்தருளே
முதிருந் தமிழ்த்தே வையில் வளரும்
முருகா முத்தங் கொடுத்தருளே.
43தனது அநுபவம் கூறல்✓
பொன்னார் சுணங்கு முலைமனையாள்
பொறித்த முடங்கல் வழியுய்ந்த
போரே றியற்றும் பணிவாய்ந்து
பொருநைக் கிடபாற் றிகழ்பதியில்
பன்னா கத்திற் கொடியசினம்
படைத்த சமணன் அழுக்காற்றால்
பவளக் கிரிநேர் உனைஒருவன்
பார்த்த மலைச்சார லின்ஒருபால்
உன்னா ருயிரே நிகர்ஒருத்தி
உழைப்பால் உதித்து வளர்தலத்தில்
உண்மை யறிய எனதுமனம்
உருக உடலும் புளகம்உற
முன்னாள் உதவும் நலமறவேன்
முறையால் முத்தங் கொடுத்தருளே
முதிருந் தமிழ்த்தே வையில் வளரும்
முருகா முத்தங் கொடுத்தருளே.
44முருகனிடத்தில் முத்தம் பெற்றவர்✓
ஊச லெனவால் வளையிரண்டுற்(று)
உலவுஞ் செவியார் தமக்கும்மதி
யொடுசெஞ் சடைக்காட்டு றும்அவட்கும்
உயர்சீர் இமவான் றருமகட்கும்
பாச மலிகார்த் திகையார்க்கும்
பணியிற் றுயில்மா மனுக்கும்அவன்
பன்னி யருக்கும் எளிதில்மிகப்
பலிக்கும் உனது பவளமுத்தம்
நேச மிலர்போற் பெரி(து)இகழும்
நீலக் குறத்தி தனக்கும்உனை
நிதமுந் திருடன் எனக்கவியால்
நிகழ்த்தும் கிளிக்கும் அளித்திவையோ
மோசம் வருமென் றொருசிறிதும்
முனியா முத்தம் கொடுத்தருளே
முதிருந் தமிழ்த்தே வையில் வளரும்
முருகா முத்தம் கொடுத்தருளே.
45தெய்வயானை யம்மையிடம் முருகன் கொள்ளும் பரிவு✓
மலையாம் இனத்துள் உயர்கயிலை
மலைபோ லசைந்து மதத்தருவி
வயங்கக் காட்டுந் தவளநிறம்
மலிவா ரணம்அன் றெடுத்துவந்து
கொலைவா ளவுணர்க் கெமன்போலும்
குலிசா யுதத்து மகபதிபாற்
கொடுக்க அமரா பதிநகரிற்
குடிகொண் டிருப்போர் பலர்போற்ற
இலையார் பசும்பொற் கொடியேபோன்(று)
இனிது வளர்ந்தாள் எழில்மார்பத்(து)
இருகுங் குமக்கோ டெனநீடி
இரதி மதவேள் உருக்காட்டும்
முலைதோய்ந் துவப்ப வலிதுமுத்தம்
மோகா முத்தங் கொடுத்தருளே
முதிருந் தமிழ்த்தே வையில் வளரும்
முருகா முத்தம் கொடுத்தருளே.
46ஆட்கொண்டமையும் அவன் அருள்வேண்டலும்✓
துத்திப் பணப்பாந் தளில்நடிக்கும்
தோகை மயில்வா கனமுதுகில்
சுடர்வேற் படையும் முத்திரையும்
சுவண நிறக்கண் டிகைப்பொலிவும்
எத்திக் கருமெச் சியமுழுநீற்
றெழில்ஆ தியவுந் துலங்கிடவந்(து)
இலைவெண் திருநீ றளித்தொருநாள்
இரவிற் பகர்ந்த படியாண்டு
பத்தித் துறையை யிகழாதார்
பலருங் களிப்பப் பிறர்நாணப்
பாவ மிகையோர் பரிதியெதிர்
பனிபோல் ஒழியப் பயன்காட்டி
முத்திக் கடலுள் விடல்நிசமேல்
மூவா முத்தங் கொடுத்தருளே
முதிருந் தமிழ்த்தே வையில் வளரும்
முருகா முத்தங் கொடுத்தருளே.
47வேறு முருகன் புயத்தில் உள்ள கிளியின் இயல்பு (அருணகிரிநாதர் கிளியென்பது)✓
நெய்த்த மலர் சொரிதருங் கற்பக மரங்கண்டு
நிகரில்சந் தம்பொலிந்து
நீடிய திருப்புகழ் அநந்தங் குலாவிஅருள்
நெறியுளார்க் குரிமை யினதாய்ப்
புத்தமுதி னும்பெரி தினிக்கு நீர் மிகைமல்கு
புனிதத்த தாகி விண்ணூர்ப்
போகமட வார்நனி வியப்பச்சி றந்துபைம்
பொற்கிரண மிகைமன்னிஎண்
சித்தடைந் தழகிய கலாபமயி லும்பொருவில்
சேவலும் விரும்ப மிளிரும்
செம்முகத் தினதாய்க் குலத்திலுயர் தலைமையாய்த்
தென்றலங் கிரியை நிகராம்
முத்தமிழ்க் கிளியொன் றிருந்தகைக் குருபரா
முத்தங் கொடுத்தருள்வையே
மூவர்புகழ் தேவைநகர் மேவுகும ரேசனே
முத்தங் கொடுத்தருள்வையே.
48முத்துகளின் இழிவு✓
வகைமல்கு முத்தங்கள் உலகில்உள எனினும்அவை
மாதவந் தருப அன்(று)அம்
மட்டினும் இராதளவில் மடமலி தரச்செய்து
மமதையில் அமிழ்த்தும் அன்றித்
தகைமலியும் நெற்கெதிரில் விளைமுத்தம் மேதித்
தடங்கால் மிதிக்க நெரியும்
தண்மலர்க் கணைமதன் சிலைமுத்தம் ஆலையிற்
றவிடுபடும் மூங்கில் முத்தம்
மிகைபடும் நெருப்பில்ஒவ் வொருவேளை வேம்இந்த
விதமாக மற்றவைக்கும்
விலையாதி ஊறுண்டு விழையேம் மறைத்தலை
விளம்புபிர ணவமணக்கும்
முகைமுல்லைதிகழ் குமுதம் அனையதிரு வாய்கொடொரு
முத்தங் கொடுத்தருள்வையே
மூவர்புகழ் தேவைநகர் மேவுகும ரேசனே
முத்தம் கொடுத்தருள் வையே.
49வேறு சந்தம் தத்தன தானன தத்தன தானன தத்த தனத்தானனா✓
ஒப்புயர் வோதரு முத்தமிழ் பாடிடும்
உத்த மரைப்பழியேன்
உக்கிர வாசனை அற்றவர் தாள்தொழும்
உட்டு ணிவைக்கழியேன்
எப்புவி யோரும்வ ழுத்தும்நின் வார்கழல்
இட்டம் விடுக்கறியேன்
இக்கது போல்மொழி செப்புமி னார்முலை
இச்சை யினைக்குறியேன்
வெப்புறு பாழ்நெறி யிற்சுழல் பாதகர்
வெற்றி சகித்தமையேன்
மெய்த்திரு நீறுடல் முற்றணி சீர்பெறும்
வித்தக ரைப்பிரியேன்
முப்புரம் நீறந கைத்தவர் பாலக
முத்த மளித்தருளே
முற்பகர் தேவைந கர்க்கும ராஒரு
முத்த மளித்தருளே.
50✓
ஒருபொரு ளேபரம் எனவுணர் சீரியர்
உட்குந் துன்பொழிவார்
உயிர்வதை ஆதிய புரிவர் யாவரும்
உய்த்தங் கண்டழிவார்
தருமமி லாநெறி மருவிய தீயவர்
தர்க்கங் கொண்டெதிரார்
சதுமறை நூல்பகர் அறுமத வாணர்கள்
தத்தம் பண்படைவார்
திருமகள் கோன்நுவல் உனதிசை தேறுநர்
திக்கெங் குந்திகழ்வார்
திரைகடல் சூழ்புவி மகள்துயர் போய்மகிழ்
சித்தந் துன்றிடுவாள்
முருகவிழ் தாதகி அணிபவர் பாலக
முத்தந் தந்தருளே
முனைமலி தேவையில் வளர்முரு காஒரு
முத்தந் தந்தருளே.
51தானன தத்தந் தானன தத்தந் தானன தத்தந் தனதனா✓
கார்மரு பொற்பொன்(று) ஆகம றப்பெண்
காதலன் முத்தந் தருகவே
காய்தகு வர்க்குஞ் சாரண ருக்குங்
காதகன் முத்தந் தருகவே
சூர்மடி யக்கொன் றார்வம் விளைக்குந்
தோளினன் முத்தந் தருகவே
தோகை மயிற்கொண் டூர்தரு கொற்றந்
தோய்பவன் முத்தந் தருகவே
பார்மகிழ் தற்கென் றாய்பவர் பற்றும்
பாவகன் முத்தந் தருகவே
பார்வதி பக்கம் சேர்பவர் நத்தும்
பாலகன் முத்தந் தருகவே
சீர்மலி யத்தென் தேவை புரக்குஞ்
சேவகன் முத்தந் தருகவே
தீயினை யொக்குஞ் சேவ லெடுக்குந்
தேசிகன் முத்தந் தருகவே.