தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
வருகைப்பருவம்7 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
வருகைப்பருவம்
52முருகனை அம்மை பாராட்டும் உயர்வு✓
தளஞ்சேர் கமல மலர்விழியாள்
தங்கை மனம்நெக் குருக முலைத்
தடத்திற் சுரந்து வழிபால்முன்
தானைநனைப்பக் கரம்நீட்டிக்
குளஞ்சேர் விழியால் எனையுடையார்
கொடுத்த மதலாய்! அருள்ஞானக்
குன்றே! யிமையார் பலர்க்கும்ஒரு
கோவே! அருமைக் குறுமுனிவன்
உளஞ்சேர் குரவா வருக!என
உரிமை யொடுபோய்ப் பசியாறி
உவகைக் கடலில் அவளொடுதான்
ஒருங்கு மூழ்கி உயர்ந்துபல
வளஞ்சேர் தேவைப் பதிபுரக்கும்
வாழ்வே! வருக வருகவே
வடிவேல் முருகப் பெருமாளே!
வருக வருக வருகவே.
53✓
கந்தா வருக! சிவஞானக்
கனியே வருக! பரமனுதற்
கண்ணின் மணியே வருக!அருட்
காரே வருக! கருமருப்புக்
குந்தா வருக! குறமடந்தை
கொழுநா வருக! பிரணவச்சற்
குருவே வருக! மலைத்தொறும்வாழ்
கோவே வருக! குலவுமறை
அந்தா வருக! தமிழ்க்கடலின்
அமுதே வருக! வினைப்பிணிவேர்
அறுப்பாய் வருக! சகமுழுதும்
ஆனாய் வருக! அறம்வளர்த்தாள்
மைந்தா வருக! தேவைநகர்
வணிகா வருக! வருகவே
வடிவேல் முருகப் பெருமாளே
வருக வருக! வருகவே.
54முருகன் காட்சிக்கு உரியரானவர்கள்✓
சந்த வரைமா முனிமகிழத்,
தையல் ஒருத்தி கரமுளைக்கச்,
சங்கப் புலவன் தளைநீங்கத்,
தழற்பா லையிலோர் கவிஉய்ய,
அந்தண் அருண கிரிவாழ,
அரையன் ஒருவன் அகம்களிப்ப,
அருமைப் பனுவல் பகர்ஒருவன்
அம்பொற் பதக்கம் பெறச்,சூர்மாச்
சிந்தப் பொருத கதையுரைத்தோன்
திடுக்கம் தவிர, மணியணிநாத்
தெறித்து விழப்பாடி என்முதலோர்
சிந்தை குளிரச், சிகிப்பரிமேல்
வந்த(து) உளதேல் தேவைநகர்
வரதா வருக வருகவே!
வடிவேல் முருகப் பெருமாளே
வருக வருக வருகவே.
55தனக்கு அநுபூதி கிடைத்த இடம்✓
தண்மைக் குலம்சார் தருமுங்கிற்
றடமால் வனத்தில், உருமலையில்,
தயங்குந் திருமா மலைக்குவட்டில்,
தழற்பே ருருவாம் மலையருகில்
பெண்மைக் குயர்ச்சி தரும்நாட்டில்
பின்னும் பலவா கியதலத்தில்,
பிரிய முளார்போல் னினிதோன்றிப்
பேசல் முழுதும், பெறலரிதாம்
உண்மைப் பயனே யாகில்எனை
உலகோர் இகழ்தற் கானவிதம்
உஞற்றி மனத்தோ(டு) உடலுமிளைத்து
உழலக் காண்ப தியல்பாமோ?
வண்மைத் தமிழ்த்தே வையில் ஒருக்கால்
மயில்மேல் வருக வருகவே!
வடிவேல் முருகப் பெருமாளே
வருக வருக வருகவே.
56✓
கொஞ்ச வருக! கவுமாரர்
கூட வருக! புறநெறியோர்
கொதிக்க வருக! திருவருட்சீர்
கொடுக்க வருக! தமிழ்ஆண்மை
மிஞ்ச வருக! பழவினையை
விலக்க வருக! எனதுளத்துள்
மேவ வருக! மயற்பேயை
வெல்ல வருக! விரும்பியவா(று)
அஞ்ச லருள வருக!என
அடிமை முறையிட் டிடல்முழுதும்
அறிந்தும் அறியா தவரேயொத்(து)
அகிலத் தலைய விடல்முறையோ?
வஞ்சர் மருவாத் தேவைநகர்
மன்னே வருக! வருகவே!
வடிவேல் முருகப் பெருமாளே
வருக வருக வருகவே.
57வேறு
தன்னிலையும் வேண்டுகோளும்✓
தொண்டலது மற்றொன்றை மதியாத மெய்யன்பர்
துணையடித் துகளை முடிமேல்
சூடியுள(து) ஆறெழுத்தும் கருதி நாடொறும்
துதிசெய்து மறுகு மென்பால்
விண்டலம் புகழ்பழனி மலையினிற் செந்திலை
வியந்துரைத் ததும்,அ தெண்ணி
மேவியதும், அங்குவிளை யாடியதும், இத்துயர்
விளைத்ததும், உலகர் அறியார்;
பண்டலகில் அருள்பெற் றிருந்தவுயி ரென்றெனைப்
பகரல்முத லாய பிறவும்,
பழுதுபடில் எனையவர் இகழ்ந்திடலில் உன்னைப்
பழிக்கும் நின்மனம், ஆதலால்
மண்டலத் துயர்தேவை நகரில்ஒரு தரமென்முன்
மயிலில்வந் தருள்செய் வாயே
மரகத கலாபம்விரி தருகுடை நிழற்றருபொன்
மயிலில்வந் தருள்செய் வாயே.
58யானைகள் உலாவும் சிறப்பு✓
கதமீறி யெதிர்நின்ற கந்தைத் தகர்த்(து)உரற்
காற்றளை முறித்து, விண்ணிற்
கைநிமிர்த் துப்பிளிற லொடுபெயர்ந்(து) அருகில்வரு
கனபாக ரைச்சி தைத்துப்,
பதம்ஆ றுடைத்தும்பி யினமொய்த் திசைப்பமிளிர்
பந்தாடு மாதர் கொங்கை
பார்த்தினம் எனக்கருதி, இடைசீயம் என்றுட்
பயங்கொண்டு பைம் பொழிற்கண்
விதம்ஆ யிரம்படு மரங்களை முறித்துத்தம்
வெம்பகைப் பெயர் புனைந்த
வெண்பற் குரங்கினம் வெருட்சியுற மகிழ் வெய்தி
மேகத்தின் நீர் குடிக்கும்
மதவேழ மலிதேவை நகர்வேல! ஒருபோது
மயிலில்வந் தருள்செய் வாயே
மரகதக லாபம்விரி தருகுடை நிழற்றருபொன்
மயிலில்வந் தருள்செய் வாயே.
59வேறுசந்தம்தனன தான தனனதான தனனதான தனதனா✓
அருமை யாதும் அறிகிலாரை
அணுகிஆசி பகர்தல்போய்
அடியர் கூடும் அவையில்மேவி
அளவில்பூசை முயலுவேன்
உருவ மார னெனவும்ஓதி
யுரையுமாதர் மயல்கொளா(து)
உனது பாத மலரைநாடி
உருகும் ஆர்வம் அடைகுவேன்
இருமைநாசம் உதவுலோபம்
எனுமதோடு பழகிடா(து)
இகமும் வானும் அறியுமீகை
யிடைவிடாது புரிகுவேன்
மருவுதேவை நகர்விசாக!
மயிலிலேறி வருகவே!
மறுவில் ஆறு முகவினோத!
மயிலிலேறி வருகவே!
60தானதனன தானதனன தானதனன-தனதனா✓
ஆடல்விழையெ னோடு பகரும்
ஆசைமொழிகள் பிழைபடா(து)
ஆழி, பொருநை வாவிமுதல
வாயபுனலில் அனலில்வீழ்
பாடல் அழிவு றாது, கொலைசெய்
பாவநெறியில் அமிழ்பொலார்
பாரில்மலிவ தால்மெயடியர்
பாறியுணர்வு மெலிவெய்தா(து)
ஊடல்வனிதை போல் உ(ன்)னுவன் என்
ஓகை முனிவு பலசெய்வேன்
ஊறுதவிர நீடுமகிமை
ஓசையிலக அருள் செய்வான்
மாடம் நிலவு தேவபுரியில்
வாழுமுருக வருகவே
மாசில் வளையொ(டு) ஆழிபுனைகை
மாயன்மருக வருகவே.
61தானதான தானதான தானதான தனதனா✓
நீலவேட மாதுசேர நீடுதோளன் வருகவே
நேரிலாத வாசமேவு நீபமார்பன் வருகவே
காலகால னார்பராவு கால்விசாகன் வருகவே
காமனானு மாணிலாவு காமர்வேலன் வருகவே
சாலநாடு வாருள்மேய தாள்வினோதன் வருகவே
தாழும் நீள்கை வேழமான தாரகாரி வருகவே
சீலவேத நூல்வலோர்கள் தேடும் ஏகன் வருகவே
தேவையூரில் வாழ்குமார தேவன் நேரில் வருகவே.