தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
தாலப்பருவம்4 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்
தாலப்பருவம்
22சங்கு விளங்குமிடம் இவையென்பது✓
செங்கண் விடையார் நெடுஞ்செவியில்
சிவையா தியராம் பலமடவார்
செழும்பொற் கரத்தில் மணிப்பூணும்
திருமங் கலமுந் திகழ்குழுத்தில்
பங்கப் பழனப் பெரும்பரப்பில்
பங்கே ருகப்பூந் தடங்கரையில்
பகட்டு மதம்நா றியமறுகில்
பசுமைக் கதலி இளங்குருத்தில்
பொங்கக் கவின்பூ விரிக்கும் வரிப்
பூக மடலில் அகல்முன்றிற்
புனற்சால் அருகில் பெருஞ்செல்வம்
புனைவார் அகங்கைப் பொறிநலத்தில்
சங்கம் மிளிரும் புகழத்தேவைத்
தவமே தாலோ தாலேலோ
தமிழ்ச்சொற் புலவர் குலத்தினுக்கோர்
தலைவா தாலோ தாலேலோ.
23திருஞான சம்பந்தராக அவதரித்தது✓
புண்பட் டுளதோர் குலச்சிறையும்
பொன்னித் துறைக்கோன் திருமகளும்
பொருவில் களிவா ரியில்மூழ்கப்
போர்வேல் வழுதி புரைதவிர்தன்
பண்பிற் றிகழ வளமதுரைப்
பரமன் அருட்பூ சனைநடக்கப்
பாண்டித் துயரம் பறிபோகப்
பறிக்குந் தலையார் கழுவேறத்
திண்பெற் றுளதோர் கவுணியனார்
தெண்ணீர்த் தடம்புக் கியற்றுதவம்
சிறக்க மறைநூற் பொருள்பலர்க்கும்
தெரியத் திருநீற் றிசைவிளங்கச்
சண்பைப் பதிபோய் வருந்தேவைத்
தருவே தாலோ தாலேலோ
தமிழ்ச்சொற் புலவர் குலத்தினுக்கோர்
தலைவா தாலோ தாலேலோ.
24வள்ளி திருமணம்✓
வண்ணம் சிறந்த முலைக்குறப்பெண்
வனப்(பு) ஓர் முனிஓ திடல்வினவி
வானத்தமரர் குலந்துதிக்கும்
மகவான் மகளுட் கருத்தயர
எண்ணம் பெருக்கிக் கிழமுனிவன்
என்றோர் வடிவும் எடுத்துமுதிர்
ஏனற் புனத்திற் றடியொடுபோய்
இசைமிக் குரைப்போர்க் கெளியோனே
கண்ணம் புயமா யவன் மருகா
கலச முனிவன் தொழும்குரவா
கமலா சனத்தான் அழப்புடைத்தாய்
கடம்பும் குரவுங் கலந்தணிவாய்
தண்ணம் பொழிற்றே வையில் இறைவன்
தனையா தாலோ தாலேலோ
தமிழ்ச்சொற் புலவர் குலத்தினுக்கோர்
தலைவா தாலோ தாலேலோ.
25ஆட்டு வாகனம் ஊர்ந்த விவரம்✓
மழமால் விடையார் நிகர் ஒருவன்
வானத் தினர்க்கும் தவத்தோர்க்கும்
மறையோர் களுக்கும் நலம்உதிப்ப
வஞ்சத் தகுவக் குலமடவார்
அழமா மாயை தரும்புதல்வர்
ஆதி யோர்கள் இறுமாப்போ(டு)
அழியக் கருதி மணியெறியும்
அலைவா ரிதிசூழ் அம்புவியின்
நிழலார் இமய மலையருகில்
நேமித் துடுக்கின் மிசையிருந்து
நெல்லின் பொரிநெய் அடையாதி
நிறையச் சொரிகால் நிவந்தொலிக்கும்
தழலூ டுதித்துக் குலவுபெருந்
தகரா தாலோ தாலேலோ
தமிழ்ச்சொற் புலவர் புகழ்தேவைத்
தலைவா தாலோ தாலேலோ.
26முத்து விளங்குமிடம்✓
பரவுந் திரைநீர் வயற்சாலிப்
பயிரின் கதிரில் கழைக்கணுவில்
பாக்கு மரத்தில் பசும்மூங்கிற்
பண்ணைப் பெருக்கில் பலவாழைத்
திரளில் கமல மலர்த்தடத்தில்
சினைச்சங் குலவுந் தெருத்தொகையில்
செவ்வேல் விழியார் முலைத்துணையில்
சிறியோர் உருகுந் திருநகையில்
உரலிற் றிகழ்கால் கரிமருப்பில்
உலவா மழைமா முகிற்றிரளில்
உதிர்பு அருந்தும் ஆன்எயிற்றில்
ஒண்மைத் தவள முழுமதியில்
தரளம் பொலியுந் தமிழ்த்தேவைத்
தலத்தாய் தாலோ தாலேலோ
தமிழ்ச்சொற் புலவர் பலர்க்கும்ஒரு
தலைவா தாலோ தாலேலோ.
27வேல் தாக்கப் பெற்ற இடம்✓
நீடு மயக்கந் தரும்கிரியை
நிணம்உண் டுவக்கும் கருங்களிற்றை
நிரைமா முகம்ஆ யிரத்(து) அரியை
நிறைநீர்க் கடலுள் வளர் மாவைக்
கூடும் அடியார் புகழருணைக்
குவட்டின் குடபால் எழுவரையைக்
குறைதீர் புலமைத் திறற்கீரன்
குறுகும் குகையைக் கொடும்பேயைப்
பாடும் கிளிவாய்ப் பனுவலில்ஓர்
பாடல் உரைப்பான் றனைஉறுக்கும்
பலர்மார் பகத்தைக் கவுமாரப்
பத்தர்க்(கு) இகலாம் அவர்குலத்தை
சாடும் வடிவேற் படைக்குமரா
தாலோ தாலோ தாலேலோ
தமிழ்ச்சீர்த் தேவைப் பதிமுருகா
தாலோ தாலோ தாலேலோ.
28வேறு
குரங்குகளின் ஆடல்✓
பனிமதி வரக்கண் டுவக்குங் கருங்கடற்
படுபுனல்குடித்த மேகம்
பளபள பளீரென்று மின்னி உரும் ஆர்த்துவரல்
பார்த்துள குரக்கி னங்கள்
கனிதரு பலாவதனை மாவைவிட் டுச்சிறிய
கமுகினில் கதலி தன்னில்
கைநொடிப் பளவினிற் பாய்ந்துவிரி பாளையுட்
கண்ணிறுக மூடி வைகி
நனிபொழி மழைத்தாரை யிற்சிறிதும் மெலியாத
நன்னலம் பெற்று வந்து
நாரணன் சிறுமகன் விழாநடத் திக் குதிகொள்
நறுமலர்ப் பொழில் விசாலத்
தனிவளம் புனைதேவை மாநகரில் வேலவா
தாலேல தாலேல வே
தண்டணி தடங்கைத் தமிழ்க்குமர குருபரா
தாலேல தாலேல வே.
29வேறு
சந்தம்
தந்தன தானன தந்தன தானன—தானா
தானானா✓
இந்திரன் நாடுபு ரந்துயர் சீர்சொலில்
ஏனோ கேளாய்நீ
இன்பவி னோதமி குங்குற மாதுடன்
யார்பால் நேர்வாயோ
கந்திநு தாள்உறு செம்புகர் மால்வரை
காணா மேனாள்ஓர்
கங்கையி னூடுபெ றுங்கொடி பேணிய
கால்நா டேனோயான்
நொந்தியவ் பாடல ணிந்தும்ஐ யோவினை
நோயூ டேசேரேன்
நொண்டிசொல் பாவவ னும்புகழ் மேவில
னோவீ ணாவேனோ
சந்திர சேகரர் தந்தருள் பாலக
தாலோ தாலேலோ
தண்பொலி தேவையில் வந்தமர் வேலவ
தாலோ தாலேலோ.
30தத்தன தானன தத்தன தானன—தானா தானானா✓
அத்தனும் ஆயியும் நிற்கரு காயினர்
ஆடூர் நீஆள்மீ(து)
அப்படி யேறிய தெத்தினமோ விளை
யாடா(து) ஓய்வாயோ
புத்தமு தேநிகர் சொற்றிரி வார்கவி
பூண்நாள் ஏதாலோ
பொக்கமில் வாய்மையு ரைத்தனை வீணது
போகாதே கா கா
முத்தலை வேல்இய மற்கய ராதவர்
மோகா காராஓர்
முத்தம்என் ஆகம்அ ணைத்தருள் நீர்கொடு
மோவாய் மூடாதே
சத்தச தாசிவன் மெச்சிய தேசிக
தாலோ தாலேலோ
தட்டறு தேவையில் உற்ற மனோகர
தாலோ தாலேலோ.
31தானன தந்தன தானன தந்தன—தானா தானானா✓
ஆரண மந்திரம் ஆகம தந்திரம்
ஆனாய் தாலேலோ
ஆரல்ம டந்தையர் மோகமு றும்குர
வாரா தாலேலோ
வீர மலிந்தெதிர் சூரனை வென்றவை
வேலா தாலேலோ
மேதகு குன்றுதொ றாடல்செ யுங்குக
வேளே தாலேலோ
கோரமி குந்தகர் மீதிவ ருஞ்சிறு
கோவே தாலேலோ
கோதறு தொண்டருள் நாடலில் வந்தவிர்
கோலா தாலேலோ
சீரமை கின்றதொர் தேவையி டந்திகழ்
தேவே தாலேலோ
சீதர னும்புகழ் கூறும் நலம்புனை
சேயே தாலேலோ.