மின்னல் மேக மன்னிய சிகரப்
பரங்கிரிச் சாரல் பிறங்கிய தடாகக்
கரையிலா லின்கீழ்ப் பரவிய புகழ்சேர்
நக்கீர முனிவன் முக்கணற் போற்றிப்
பூசனை செயுங்கால் வீசுகிளை பொலிந்த
ஆலிலை பாதி சாலநன் னீரிலும்
பாதி நிலத்தின் மீதும் விழுந்து
நீர்ப்பாதி மச்சம் நிலப்பாதி பறவை
வடிவமுற் றொன்றை மற்றொன் றிழுக்கப்
பூசனை புரிந்த மாசிலா முனிவ
னெஞ்சக மிங்குத் துஞ்சிட வதனால்
பூசைப் பங்கம் பொருந்திட முன்பு
அம்முறை வழுவிய செம்மை யாளர்
தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்பது
மக்களைக் குகையில் முக்கிய பூத
மற்று மொருவர்க் கற்ற நோக்கி
நக்கீ ரரையு மொக்க வடைத்துத்
தன்னிய மப்படி மன்னுமா யிரவரை
உண்ணுதற் கெண்ணித் தண்ணீர்ச் சுனையில்
மூழ்கச் சென்றது வாழ்வினை வேண்டி
அடைபட் டிருந்தோர் தடைபடா வாக்குக்
கீரரை வேண்டச் சூரனா தியரை
வென்ற வைவே ளன்றுகொள் பெரும
நின்னை வேண்டி மன்னுமாற் றுப்படை
செய்தா யிரவருந் திருவரு ளாலுயிர்
வாழ வைத்தனர் வீழ்வினை யறுத்தே.