முருகன் App
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா
பேரிளம்பெண்14 / 14
ஆரணி ஞானியார் மடாலயத்துக் கந்தருலா

பேரிளம்பெண்

✓
அக்குழுவின் மிக்கா ளறத்தின் தொகைவருட
இக்குமொழி யோர்பே ரிளம்பெண்ணா—ளக்குகனைக்
கண்டா ளுளத்திற் கருதினா ளிக்குகவேள்
கொண்டார்ந்த கோலங் கொடியிடைமொய்—வண்டார்
குழலாரைக் கொள்ளைகொளக் கொண்டனனோ வன்றிக்
கழலும் வளைகள் கவர்வதற்கோ—பழகு
நிறைகவர்வ தற்கோ நிறையுருவா தற்கோ
மறைபுகட்டு தற்கோ மதியுள்—ளுறவளித்தற்
காகவோ கொண்ட வுருட்கோல மென்றயர்ந்தா
டாகமுறு காதலுளந் தாங்களாய்—மாகவரைத்
தேனாய சொல்லாயென் றீங்குழலைக் கொண்டுவா
ஆனாயர் பெற்ற வருடனிமை—நானேனுந்
தீர்த்துநலங் கொள்வனென்று செப்பிக் குழல்வாங்கிச்
சேத்தவாய் வைத்துச் செகமகிழ—வார்த்த
சுரத்தாற் சரவணப வாவென்று தோன்ற
வுரத்தாற் கருத்தானின் றூழி—வரத்தான்
முருகா குமரா முதற்குகா கந்தா
வரதா நமோவென்று வாசித்—தொருமனதா
நின்றா டனையறியா ணேசமொன்றா லன்னோன்றன்
பொன்றாப் புகழைப் புகழ்வாள்பின்—னின்றாரைத்
தேடாடி கையா டியங்காண் மையங்காண்மெய்
கூடாள் புணர்ந்தின்பங் கொண்டாள்சீர்—பாடாளாய்
நின்று மகிழ்ந்தாட்கு நீடின் பளித்தருளித்
துன்று மழகுடைய தோகைமேன்—மன்றல்
விளங்கவன்பர் வாழ்த்த வெண்ணீறு பூத்துத்
துளங்குதொண்டர் தோத்திரங்கள் பாடக்—களங்கமறு
மெய்யடியார் போற்ற விரிபுவன மோங்கவுள்ளிற்
பொய்யடிமை யில்லாப் புனிதர்க—ளுய்யுமா
றாறெழுத்தும் பஞ்சாக் கரமு மறைந்துதொழக்
கூறுபடுத் தாறெழுத்தைக் கூறுபவர்—கூற
வுலகங்கள் வாழ்க வொளிமணிகள் வாழ்க
வலமிகு மன்னர்மன் கோல்க—ணலமாதர்
கற்புமிக வாழ்க கவின்மழைவான் வீழ்கநல்
லற்புத மிக்க வழகோடு—பொற்புலவர்
கீதமொடு பாடலைக் கேட்டுவந் தன்பார்ந்த
காதலோ டார்க்குங் கருணைபுரிந்—தாதரவாப்
பேதை முதலாநற் பேரிளம்பெண் ணீறான
கோதையருங் காதலுறுங் கோலமொடு—மாத
ரிருவ ரிருமருங்கு மெய்த வுலகம்
பரிவுகொடு நின்று பரவக்—கருணையொடு
மூவருக்கு மேலா முதல்வ னிவனென்று
தேவர் மலர்பொழியத் தேவனரு—ளேவுட்
களிகொள் சிவஞானங் கால்கொண் டெழும்பே
ரொளிகொண்டு வந்தா னுலா.