முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
கமலமலர் வேதன்எழுத்12 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

கமலமலர் வேதன்எழுத்

11✓
கமலமலர் வேதன்எழுத் - தினைவலிய தேயெனவுட்
கருதிஅருள் வாழ்வைமறப் - பதனாலே
கனகநில மாதரெனக் - குலவுதிரி யேடணையிற்
கனவெயிலில் வீழ்புழுஒத் - துழலாதே
சமரசவி னோதம்உடைப் - பெரியவர்கள் வாய்மொழியைத்
தழுவிஅவர் போம்வழியிற் - புகலாலே
தவளநிற நீறுமிகப் - புனையும்நல மாதியமெய்த்
தவமருவு யோகிஎனத் - திகழேனோ
குமரகுரு நாதன்எனக் - கணமுமற வாதுசொலிக்
கொளும்அறிவு ளார்பிறகிற் - றிரிவோனே!
கொடியதவ நாதன்முதற் - பகர்முனிவர் ஓலமிடக்
குதிரையென ஆடதனைக் - கொளும்வீரா!
அமரரொடு போர்புரியத் - தகுமவுணக் கோனைவதைத்(து)
அயிலதனில் வாகையிடற்(கு) - உரியோனே!
அசலம்ஒரு கோடிகளுட் - பெரியதென நீடும்வளத்(து)
அழகியம யூரகிரிப் - பெருமாளே.