முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
அம்புலிப்பருவம்7 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

அம்புலிப்பருவம்

31✓
கண்டார் பயங்கொள்ள அண்டாண்ட வெளியிலே
காற்பந்து விளையாடிடும்
கடவுட் குழந்தைகால் படலாற் சொலித்தெழும்
கதிர்மணிப் பந்தாகிய
வெண்திங்க ளே! உன்னை விளையாட வேண்டிவடி
வேலவன் அழைக்கும் வேளை,
வீணாக முகிலினுட் காணாம லேஒளிய
விரைகின்ற விந்தை ஈதென்?
அண்டாண்ட மேட்டில்நின்று ஆனந்த நடமாடும்
அமுதலிங் கேசர் மகிழ,
அகிலாண்ட நாயகிமுன் ஆசையுடன் ஈன்றஓர்
அற்புதச் சேய்இவன் காண்!
தண்டாயு தம்கையிற் கொண்டமுரு கேசனோடு
தண்மதீ! ஆட வாவே!
தண்ணார் தடங்காவை வெண்ணாவல் நிழலிலே
தண்மதீ! ஆட வாவே!
32✓
மானிடம் மயங்கிஉனை மண்என்று தேறாது
மாழ்கிக் கிடந்த தெல்லாம்,
மாண்டகதை யாதியபின் வீண்கருவம் ஏன்?உன்னை
மனையாக்கி விடநினைந்த
நானிலத் துயிர்களே பெருவெற்றி' காண்கின்ற
நாளில்வீண் பிடிவாதமோ?
நாங்கள்அன்று. அன்புடன் ஈங்குஅழைக் கின்றவன்,
நமையெலாம் முன்படைத்துச்
சூனியப் பரவெளியின் மேல்நின்றுஓர் அகிலாண்ட
சோதிமா மயில்மீதிலே
சுத்தமெய்ஞ் ஞானம்எனும் முத்துவேல் ஏந்திவரு
சுப்ரமண் யக்கடவுள்காண்!
பால்நில வெறிக்கின்ற மேனியுடை யாய்!இவண்
பனிமதீ! ஆட வாவே!
பரிவுடன் அழைக்கின்ற காவைமுரு கேசனொடு
பனிமதீ! ஆட வாவே!
33✓
மதியற்ற நாளில்நீ விதியற் றலைந்திடும்
மருமத்தை ஓர்ந்திடாமல்,
மானுடக் கைக்குட் படாய்'என்று அயர்ப்பினால்
மாழ்கிக் கிடந்துவிட்டோம்
கதியற்ற மனம்இன்று புதியவிஞ் ஞானக்கை
காட்டும்ஒரு வழிவிரைந்தே,
ககனவெளி மீதில்உன் சகசநிலை ஈதுஎனக்
கண்டுஇனிது விண்டுரைக்கும்
புதியஒளி பெற்றபின், பண்டைவீண் கௌரவப்
போலிப் பகட்டில் வாழும்
பொருளாளர் போல,நீ எட்டிஏ காந்தமாய்ப்
போவதால் பயன்ஏதுகாண்!
விதியினைச் சிறையிட்ட வேலவன் அழைக்கிறான்.
வெண்மதீ! ஆட வாவே!
வெண்ணாவல் நிழலிலே கண்ணான முருகனொடு
வெண்மதீ! ஆடவாவே!
34✓
கவிராயர் பலர்உனைக் கற்பழித் திட,நீஓர்
கொடைகேடி ஆன தறிவோம்.
காலம்உன் மேனியில் தொழுநோயை வீசிடக்
கரைகின்ற அதுவும் அறிவோம்.
குவியாத காமவெறி கொண்டுநீ செங்கதிர்க்
குமரனைச் சுற்றி வந்து,
கும்பிட்டு நிற்பதனை அம்புவியும் வான்உடுக்
கூட்டமும் நன்கறியுமே.
அவியா மயற்சுரத்து அவசமாய் விட்டநீ
ஆடையில் லாதுஅலைவதால்
ஆத்திரங் கொண்டுஉனைப் போர்த்தும்வெண் முகில்களின்
ஆதுர மெலாம்அறிகுவோம்.
தவியாய்த் தவிக்கும்நிற்கு இன்னமும் அகந்தைஏன்?
தண்மதீ! ஆட வாவே!
தண்காவை முருகன்உனை அன்போடு அழைக்கிறான்.
தண்மதீ! ஆட வாவே!
35✓
பெண்எனக் கொண்ட ஒரு பிரமையாற் பலர்பண்டு
பித்தாய்ப் பிதற்றியதுவும்,
பிஞ்ஞகன் சடையில்முன் அஞ்சிப் புகுந்தஆண்
பிள்ளை என்று உன்னியதுவும்
உண்மையன்று; அன்று உனது வெண்மைநிற உருவுகண்டு,
‘ஒன்றுக்கும் உதவாமலே
உயரத்து இருக்கின்ற கற்பாறை தான்’என்று
உணர்த்தி, விஞ் ஞானம் எங்கள்
கண்ணைத் திறந்திட்ட பின்னரும் ஏய்ப்பதேன்?
கதியற்று அகண்ட வெளியில்
காய்கதிர வன்வீட்டு வாயிலிற், பிச்சைக்குக்
காத்துக் கிடக்கின்றஉன்
எண்மையை அறிந்துகதிர் வேலவன் அழைக்கிறான்.
இந்துவே! ஆட வாவே!
எழிற்காவை வாழ்முருகன் ஏவல்செய்து உய்திபெற
இந்துவே! ஆட வாவே!