முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
சிறுதேர்ப்பருவம்12 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

சிறுதேர்ப்பருவம்

56✓
தாழ்ச்சியொடு உயர்ச்சிபல
தந்தமனு தருமம்
தாங்கியமை யாற்,புதிய
தீங்குகள் அனைத்தும்
வீழ்ச்சியுற, விந்தைபல
சிந்திவரு கின்ற
வீறுடைய மக்கள்சன
நாயகம் தென்னும்
ஆட்சியென வோஉலகில்
அற்புதம் தான
அழகியம ணிச்சிறுதே
ராம்அதனை,—எம்முன்
காட்சிதரு நாவல்அடர்
காவைமுரு கா!—நின்
கைம்மலர்சி வந்திட
உருட்டிவரு வாயே!
57✓
சுத்தாத்து விதம்என்ற
சொற்பொருள் உணர்த்திச்
சோதியில் மறைந்தவட,
லூரர்மொழி காட்டும்
சித்தாந்த சன்மார்க்க
வித்தார வழியே,
சீவகா ருண்யமாம்
சிறுதீபம் ஏந்தி,
இத்தா ரணிசிங்க
ஏறாய்முன் னேற
எண்ணும் கவிச்சித்ர
வண்ணங்கள் யாவும்
ஒத்துஆன் றெழும்புகிய
கற்பனைச் சிறுதேர்—
உயர்காவை வேலவ—
உருட்டிவரு வாயே!
58✓
கொடிய நசையின் கொடுங்கரங்கள்
கூட்டிக் குவித்துப் பதுக்கியதால்,
கொழிக்கும் திருவின் தெரிசனமே
கூடாது ஒழிந்து குமைந்துவரும்
மிடியர் குடியை மேலேற்ற,
மெய்ம்மை எனும்வன் படைதாங்கி,
மெச்சி உலகே கைகூப்பும்
மிடுக்கோடு எழுந்த காந்திமுனி
படியில் எழுப்பப், பன்னாளும்
பரிவோடு உழைத்த பயன்என்னும்
பஞ்சா யத்துப் பேரரசாம்
பைம்பொற் சிறுதே ராம்இதனை—
வடிவேல் அழகா! திருக்காவை
வள்ளி கணவா!—உருட்டுகவே!
வட்வான் இமய மடப்பாவை
மைந்தா! சிறுதேர் உருட்டுகவே!
59✓
திடமான குரலில்தாம் தெய்வமாக் கவி,முனம்
தெளிவாக்கி விட்ட குறளால்
தீந்தமிழர் மரபதனை ஆய்ந்து அறிந்திட்டவழி
தேசத்தை முன்நடத்தக்,
குடவோலை முறையிலே குடிகள்பல தாம்தம்
குழுத்தலைவ னைப்பொறுக்கிக்
கொணர்ந்தவர்கள்,புரிகின்ற இணையிலாப் பணியில்ஓர்
குறையும்இல் லாத அரசுக்கு
இடமான செந்தமிழ்த் தடமே உயர்ந்துமுன்
ஈடிலாப் பீடில் நிற்க,
இவ்உலக மேதொழும் செவ்வியது வாகிய
இராசரா சன்தன் ஆட்சிச்
சுடரொளி பரப்புமொரு சொற்பனச் சிறுதேர்
சுடர்க்கரம் தொட்டுருட்டே!
சோபைதரு மெய்யனே! காவைமுரு கையனே!
தூயசிறு தேருருட்டே!
60✓
ஒப்பற்ற அற்புதக் கற்பனைச் சிற்பத்தின்
உயிரோ வியம் தீட்டியே,
உலகத்து மானுடவர் உய்யக் கொடுப்பதற்கு
உற்பவித் திட்ட மேதை;
செப்பரிய குணசீல னாம்காரல் மார்க்ஸ்அன்று
செங்கொடி உயர்த்தி வந்து,
செம்மைநல மேஒன்று சேர்த்திட, அமைந்தஒரு
சித்தாந்த சமதர்மமாய்
மெய்ப்பொடு நிமிர்ந்துவரும் அப்புத் தமைப்புழுமுன்
மெல்லடி தொடர்ந்து, மண்ணின்
மீதெலாம் சுற்றிச் சுழன்றுசிறு தேருருவில்
மின்னொளிப் பரப்புவதுபார்!
அப்ப!உனை அன்புடன் அழைக்கிறோம். அகிலாண்ட
அம்மையுடன் அமுத லிங்கத்து
அருளுருவ மாகிவரும் ஆறுமா முகவனே!
அச்சிறிய தேருருட்டே!