முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
தாலப்பருவம்4 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

தாலப்பருவம்

16✓
இருந்தும் தந்தை எந்நாளும்
இரந்த குடிக்கும் இயல்புடையான்;
ஈன்றாள் என்னைப் போல்எங்கும்
எண்ணற் றிருக்கும் ஏழைகளின்
வருந்தும் குரல்கேட்டு உதவிடவே
வாழும் குணத்தாள் எனஇரங்கி,
வாரிக் கரத்தில்எடுக்கும்ஒரு
வாஞ்சை யுடன்யான் வருகையிலே,
பொருந்தும் அலைக்கைப் பூக்களொடு
பூசை முடிக்கும் ஆசையுடன்
போந்த புனல்தண் பொன்னிதொழும்
பொழில் ஆனைக்கா வின்நடுவில்,
கருங்கல் அறைக்குட் கண்வளரும்
கந்தா! தாலோ தாலேலோ!
கருத்தன் மகனாய் வந்தசிவக்
களிறே! தாலோ தாலேலோ!
17✓
குடகுஅங் களிக்கக் கொணர்ந்து, அழகு
குறையா முல்லை மணம்கமழக்
குறுகும் பொன்னி குறைவில்வளம்
கொழிக்கும் மருதப் பண்ணையிடைப்
படர் கூ விளப்பைக் காவினில்,ஓர்
பசுங்கொம் பினிலே பூங்கொடியாம்
………
………
வடமிட்டு இணைத்த தொட்டிலிற்கண்
வளரக் கிடத்தி வைத்து;என் உள
வயலிற் கிளைத்து வளர்பாச
வகையாம் களையைக் களையஅருள்—
மடமோ டிரங்கும் அகிலம்மை
மைந்தா! தாலோ தாலேலோ!
மயில்மேல் ஏறி வரும்குப்ர
மணியா தாலோ தாலேலோ!
18✓
உள்ளத் தெளிவற்று ஓயாமல்
உறுமிச் சமரிட்டு, ஓஒஎன்று
ஊளை யிடலே உயிர்வாழ்வின்
உண்மைக் குறிக்கோள் என்னும் இளம்
பிள்ளை; அவனைப் பெற்றிடவே
பிறந்த பேதைப் பெண்;வயிற்றுப்
பிழைப்புக்கு எதையும் பிரியமொடு
பிழையென்று உணர்ந்தும் மறுக்காமல்,
கள்ள மனத்தி னொடுசெய்து
காலம் கழிக்கும் ஆண்,இவர்கள்
கப்பிக் கிடக்கும் காசினியைக்
காணில், கடிந்து அக் கணம்எடுப்பாய்
துள்ளும் வேல்என்று அஞ்சிஉனைத்
துயிற்று விக்க விழைகின்றோம்.
துணைவா! தாலோ! தண்காவைத்
தோன்றால்! தாலோ தாலேலோ!
19✓
“நிசம்.கள்” என—எம் நெஞ்சத்தே
நிறைந்த அறிவு கரைந்தொழிய—
நின்று முழக்கும் கவடர்குலம்
நெடுகத் தீட்டிக் காட்டிவரும்
இசங்கள் பலவும் இழித்திடலால்,
இயல்பை இழந்தது எம்இனமே.
எத்திச் சுரண்டும் எத்தர்களை
இயக்கும் பாவை எனத்,தங்கள்
வசம்கெட்டு உளையும் வாழ்வு.இதனால்
வதங்கிக் கிடக்கும் வையத்து
வாட்டத் தேஉன் நாட்டமுற,
வடவைத் தீப்போல் கனன்றுனது
புசம்தாங் கியவேல் சீறிஎழின்
பொறுக்கத் திறன்ஏது எமக்கையா!
பொன்னித் துறைவா! தாலேலோ!
பொன்மயிற் பாகா! தாலேலோ!
20✓
வாய்த்துக் கிடக்கும் வளமையெலாம்
வன்பா லையிலே நிலவாக,
வறுமைப் பெரும்பேய் வழிமறித்து
வாயைப் பிளந்து விழுங்கவரத்
தீய்ப்புண் டிருக்கும் மண்ணுலகில்,
தெருநாய் போலத் தீனர்களாய்த்
திக்கற் றலைந்து திரிந்தாலும்
திரும்பித் திருந்தும் தெளிவிலராய்,
ஏய்த்துப் பிழைக்கும் இழிதொழிலே
ஏற்ற தெனக்கொண்டு எப்பொழுதும்
ஏங்கிக் கிடக்கும் எம்நாட்டை
இன்று காணில், எழும்சினத்தால்
சாய்த்துச் சழக்கை மாய்த்திடவேல்
சடக்கென் றெடுப்பாய் எனப்பயந்தோம்.
சண்முக! தாலோ தாலேலோ!
சம்பு வனத்தாய்! தாலேலோ!