முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
சிற்றிற்பருவம்9 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

சிற்றிற்பருவம்

41✓
திரண்டு கிடக்கும் தேசத்துச்
செல்வம் தமக்கே உரித்தாகத்,
திருவிக் கிரமன், போல்ஓங்கித்
தீய்க்கும் ஆசைப் போக்கினிலே
சுரண்டத் தொடங்கி, நித்தம்ஒரு
சூழ்ச்சி யதனால் ஆட்சியைஓர்
சுமையாய்த் தாங்கி, வஞ்சனையால்
சோர்ந்துஇவ் உலக மானுடமே
மிரண்டு கிடக்க, மிகமகிழும்
மிண்டர் அடைந்த மேல்பதவி
மிடுக்குஈ தல்ல, சிறுமியர்தம்
மென்கை இழைத்த மணல்வீடே!
இரண்டு கரமும் குவித்தோம்.நீ
எங்கள் சிற்றில் சிதையேலே!
எழிலார் காவைப் புவைதரும்
இளையாய்! சிற்றில் சிதையேலே!
42✓
புகட்டும் அறநூற் போதமெலாம்
பொய்யென்று இகழ்ந்து புதியதொரு
புரட்சிப் பாதைப் போக்கெனவீண்
போலி வழிபோய், அழிவுமலை
முகட்டின் உயர்ந்த முடிமிசையே—
மூண்ட கிறுக்கால் நாகரிக
முற்போக் கெனக்கொண்டு அற்பரொடு—
முனைந்து குதிக்க முனைபவர்வீண்
பகட்டன்று இது யாம் வாலையர்கள்
பரிவோடு அமைத்த மணல்வீடே!
பாலும் தேனும் பழச்சாறும்
பாகும் கலக்க எழும்சுவையில்
கதிட்டும் புனற்கா விரித்துறையின்
செல்வா! சிற்றில் சிதையேலே!
திருவானைக்கா நகர்உறையும்
தேவா! சிற்றில் சிதையேலே!
43✓
சீர்திருத் திடமுன் உலகுதொழும்
செந்நாப் போதார், சீகாழிச்
செம்மல், நாவுக் கரசுஇவர்கள்
செய்த தனைத்தும் பாழாக,
யார்திருத் டிடினும் தம்பழைய
யதார்த்த நிலையில்,—முன்சீவ
யாத்திரை முதல்நாள் போல்—இன்னும்
யாண்டும் நடக்கும் மானுடத்துப்
பார்இருப் பதனைப் பார்த்து, உளத்தில்
பரவும் சினத்தீ மிகப்,—'பகையின்
படைவீ டிது'எனப் பதைப்புடனே
பட்டென்று இடது பதம்தூக்கி,
ஓர்உதை கொடுத்தே ஒழித்துவிட
உதவாச் சமுகம் ஈதல்ல.
ஒளிசேர் காவை யாய்! எம்நெஞ்சு
உளையச் சிற்றில் சிதையேலே!
44✓
ஏய்த்துஇவ் உலகின் ஏழைகள்பால்
எத்தும் பசப்பால், தாம்அவர்தம்
ஏவற்கு அடிமை' எனப்பேசி,
ஏற்ற தலைவர் எனச்சிரத்தைச்
சாய்த்திட் டதுமே, சடக்கென்று
சனநா யகத்தின் திருப்பெயரால்,
சாட்டைக் கரத்தோடு அமர்ந்து,உலகைச்
சவாரிக் குதிரை யாக்கி,அறம்
தேய்த்து,ஆ ணவத்தால்—அரசாளும்
திமிரா சையினால்—இப்பெரிய
தேசந் தன்னைப் பாழாக்கிச்
செருக்கித் திரியும் தீம்பருக்கு
வாய்த்த தவிசன்று இது மணலால்
வனைந்த சிற்றில் சிதையேலே!
வயல்சூழ் ஆனைக் காஅமர்ந்த
வாழ்வே! சிற்றில் சிதையேலே!
45✓
உதவாப் பழமைக் கதைபலவும்
ஓயாது உரைத்தே ஊளையிடற்கு
உரிய இடம்என்று, எரிவிழியோடு
உறங்கும் கிழட்டுக் கோட்டான்கட்கு
இதமாய்ச்; சுவர்கள் இடிந்துஉயரும்
எருக்கோடு இணைந்த கள்ளிகளால்
இருண்ட புதறாய், இன்றுளதோர்
இழிந்த பாழ்இல் ஈதன்றே.
மதமாச் சரிய மாசுபடா
மலர்க்கை வருந்த,—மனதார—
மணலைக் குவித்து விளையாடி
மகிழ்தற்கு அமைந்த சிற்றில்இது.
அதம்ஈ தேன்?தென் ஆனைக்கா
அழகா! சிற்றில் சிதையேலே!
ஆறு முகத்துப் பெருங்கருணை
அரசே! சிற்றில் சிதையேலே!