காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
காப்பு1 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்
காப்பு
1விநாயகன்✓
பழனமலி காவிரிப் பைங்கரையில் ஒருபெரும்
பண்ணைவைத்து, ஆன்ற தருமப்
பைங்கூழ் வளர்க்கஉட் பொங்கிவரும் ஆவலாற்
பழையஎரு தோடொர் கிழவன்
உழவருகை யில்,விதைக்கு ஓர்நாழி நெல்அளந்து
ஊக்கமுடன் ஆக்கம் ஊட்டும்
உள்ளத்தொடு உதவவே மெள்ளத் தொடர்ந்துவரும்
ஒருபெருங் கரிய வண்ணக்
கிழவிதன் கோயிலிற் கீழ்த்திசையின் வாயலிற்,
கேட்பார் இலாதிருக்கும்
கம்புரிக் கன்றின்இரு பங்கயத் தாள்கள்என்
வெம்பும்நெஞ் சத்துஅலர்கவே-
குழவியுரு வாய்வந்த குருமூர்த்தி யாம்எனது
குமரதண் டாயுதன், உளக்
கோவிலில் இருந்துவிளை யாடும்அத னைச்சொலிக்
கும்மாளி போடுதற்கே!
2முருகன்✓
பேயாய் வலிந்தெம்மை ஓயாது உசுப்பிடப்
பித்தாகி விட்ட நெஞ்சம்
பிடர்பிடித்து உந்தலால், இடர்வழியி லேஆசை
தொடர, ஓர் நாதி யற்ற
நாயாய்த் திரிந்துபன் னாட்களும் கழியவே
நைந்துடல் தொய்ந்த நேரம்,
நமனாரும் ஆசையொடு தமது ஏவ லாளர்எனை
நண்ணிக் கவர்ந்து கொள்ள
நோயுருவி லேவந்து வாயிலரு கேசமயம்
நோக்கிநிற் கப்பணிக்க,
நொந்தழியும் இந்தநாள், வந்துனது புகழ்பாடும்
நோக்கமுற் றேன், அருளுவாய்!
தாயாக உலகெலாம் தாங்கும்அகி லம்மையருள்
தண்தமிழர் தம்தெய்வமே!
தண்ணார் செழுங்கழனி வெண்ணாவ லீசர்தரு
தண்டபா ணிக்கடவுளே!
3பரமசிவம்✓
எப்பா லதற்கும் அப்பாலாய்
எல்லா உயிர்க்கும் உள்ளுயிராய்,
இயங்கும் ஆற்றற்கு எழுகளமாய்,
என்னுள் இதயப் பரவெளியில் -
தப்பா இசையில்-தனித்துவலத்
தாளை ஊன்றிக் கூத்தாடும்
தன்னே ரறியாத் தனித்தலைவா!
தமிழாம் பழைய தனம் தரும்என்
அப்பா! உனைஇங் கழைக்கின்றேன்.
ஆசை இழுக்க, எங்கள்திரு
ஆனைக் காவின் சேயோனை
அடியேன் பிள்ளைக் கவிபாட
ஒப்பாது அறிஞர் உலகம்எனும்
உண்மை அறிவேன். ஆகையினால்,
உதவற்கு உன்றன் அபயகரம்
உடனே நீட்டி அருளுகவே!
4அம்மை✓
நீயே கருணை நிறைந்துஎனையும்
நினைந்து கொடுத்த பனுவல்இது;
நின்னிற் கிளைத்த நெடியோனில்
நீண்ட தமிழின் படையல்இது;
நாயேன் கொடுப்ப தாயிடினும்,
நாற்றச் சேற்றின் மிசை அலரும்
நளின மலர்அர்ச் சனைஎல்லாம்
நாளும் புனைந்து நலம் அருளும்
தாயே!-நின்றன் அடிமலர்க
தினையும் தாங்கி, என்உளத்தே
தண்டா யுதனாய்த் தனித்திருக்கும்
தன்னே ரறியா இன்னழகுச்
சேயான் தனது சீர்புகலச்,
சித்தத் தெளிவைத் தந்தருள்வாய்!
சிற்றம் பலத்தான் இடப்புறத்தே
செழித்துக் கிடக்கும் செழுங்கொடியே!
5சண்டேசர்✓
உற்ற இரும்பைப் பொன் ஆக்கி
உலகை மயக்கும் சித்தரெலாம்
உள்ளம் துடிக்க, மெய்சிலிர்த்தே
உவகைக் கடலில் ஆழ்ந்திட,ஓர்
குற்றம் அதனைக் குணம் ஆக்கிக்,
கூத்தன் அடியார் குழாத்தலைமை
கொண்டான் சண்டே சுவரன்' எனக்
கும்பிட் டிருக்கும் பெருந்தலைவா!
மற்றை யுலக மானுடத்து
மதலை யரைப்போல் மாயாத
மாண்போடு, அழகுச் சேயோனாய்
மருதக் காவை மாநகரத்து
உற்றே இருந்த பெருந்தமிழன்
உயிரோ வியத்தைப், பாவில்வடித்து
உதவத், தனக்கோர் துணைக்குஅலையும்
உன் ஆள் எனக்கும் இரங்காயே!