காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
தகர் அடக்குபருவம்13 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்
தகர் அடக்குபருவம்
61✓
திருவெனப் பணிந்து தேசம்ஓவ் வொன்றும்
தினம்தினம் அஞ்சலித் திருக்கும்
தெய்வமா சக்தி திகழ்ந்திட, நன்று
தீதெனும் கொம்புஇரண் டேந்திப்,
பொருளெனும் பெயரிற்புகுந்து, வீண் பேதப்
பொங்குழற் சினத்துடன் எங்கும்
போக்கிலாது அலறும் மாக்களைத் துரத்திப்,
பொருதுஅலைந்து இருமையிற் புகும்ஓர்
கருநிற ஆட்டுக் கடாவினை அஞ்சிக்,
கைவலி யற்றுஅமுது அலறிக்,
கதியென நினையே மதியினுள் வைத்துக்
கண்ணில்நீர் மல்கிடக் கதறி
வரும்அடி யவர்தாம் தொழுகையிற் காக்க
வர்த்தயங் கிடுவதேன்? ஐயா!
வளர்திருக் காவைமுருகனே! கலியின்
வலங்கெட இன்னருள் புரிவாய்!
62✓
அரியதன் சீர்த்தி அதைவிளக் கிடவே
ஆன்றெழும் அறிவழல் நடுவே,
ஆர்த்தெழுந்து இந்த அகிலமே நடுங்கி
அச்சமுற் றிடவளர்ந் துயர்ந்து,
பிரிவினை என்னும் பேருடன் ஆடிப்,
பீதியுற்று அறிஞர்கள் ஒளியப்
பெருந்துயர் விளைத்து வரும்மறிக் கடாவைப்
பிடித்துஅடக் கிடுபவர் இலையால்.
பரிவொடுஉன் பாதம் பணிந்துஅழைக் கின்றோம்
பயந்துமா னுடத்தொகை முழுதும்
பாயும்அவ் ஆட்டால் மாயும்'என்று அலறும்
பகுத்தறி வாளரைப் பாராய்!
விரிபுனற் பொன்னி சொரிமலர்க் குவையுள்
விளங்கிடும் நாவலங் காவின்
விமலைதன் மடியில் அமரும்ஓர் குமரா!
விளம்பும்எம் வேண்டுகோட்கு இரங்காய்!
63✓
ஆக்கமாம் மகத்தின் அழலிடை, முன்னாள்
அவனியோர்க்கு அன்பளிப்பாக
அளித்தநா ரதனார் விரும்பிய படியே
அருளுருத் தாங்கி இவ் உலகைக்
காக்குமாறு அமைந்த கடமையை மறந்து,
கலியெனக் கனன்று,உயிர்க் குலமே
கண்டுஉளம் கலங்கப் பண்டெழுந்து அலைந்த
கரியசெம் மறிக்கடா, புதிய
ஊக்கமோடு உலக அரசியல் உருவில்
உட்புகுந்து உளத்தருக் குடனே
உறுமுகின் றதுகாண்! உளம்குலைந்து உன்னை
உதவிக்குப் பரிந்துஅழைக் கின்றோம்.
தேக்கம்ஏன்? அதைஉன் திருக்கரம் தொட்டுத்
திமிர்அடங் கிடப்பிணித் தருளாய்!
திருவளர் காவை வரும்அருட் கடலே!
தேவ!எம் வேண்டுகோட்கு இரங்காய்!
64✓
மனமெனும் குண்ட மத்தியில் எழுந்து
மதியெனும் கதிரொளி பரப்பும்
மானுடச் சித்தம் எனும்கதத் திடைச்,செம்
மறிஎனத் தோன்றும்விஞ் ஞானம்,
தனதருந் தாயும் தந்தையும்ஆன
தாரணி மானுடந் தனையே
தாக்குதல் கண்டு சகிக்கமாட்டாது
தருமமே,இருகரம் கூப்பி
நினதடித் தலத்தை நெருங்கிஉன் எதிரே
நெடுங்குரல் எடுத்துநின் றலறும்.
நீதிதே வதையின் வேண்டுகோட்கு இணங்கி,
நிலைகுலைந் தாடும்அக் கடாவின்
சினம்கெடப் பிடித்துச் செருக்கினை அடக்கிச்
சேவகம் காட்டிடத் தடைஏன்?
செழும்புனற் காவைச் சேவல்அங் கொடியாய்!
திருவுளம் நீசிறி திரங்காய்!
65✓
திடம்படும் உலகம் தெளிவுடன் வாழ்க்கைத்
தேவைஎன்று ஆற்றிய பணிகள்
திறம்பி,இன்று “அறிவுத் தெளிவிலார் புரியும்
திரங்கிய கிரியைகள்,பயன்இல்
சடங்குகள்,மூடச் சழக்குகள், மனம்சஞ்
சலித்தவர் செயல்கள்’’என்று அறிஞர்
சாடிடப் புகுந்து,எம் சமூகமே குலைந்து
சாம்பிடத்,தாம்எழுந்து உழப்பி
அடம்பிடித்து அடங்காது அலைந்திடும் கொண்டி
ஆடுகள்,தம்எதிர்ப் பட்ட
அறிவினைத் தடுக்கும் ஆணவத் திமிரை
அடக்கிட ஆள்கிடை யாமல்
முடங்கினோம். காவை முத்துவேல் ஐயா!
முட்டுமுன் கட்டியே அவற்றின்
மூர்க்கமுற் றிலுமே தீர்க்க,மெய்ஞ் ஞான
முறைதிரும் பிடஅருள் செய்வாய்!