காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
சிறுபறைப்பருவம்11 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்
சிறுபறைப்பருவம்
51✓
பிளவற்ற வாஞ்சை,கை பின்னிப் பிணைத்திடப்
பேதமெல் லாம்மறந்து
பெய்அன்பு மழையினில் மெய்ஞ்ஞானம் ஓங்கிடப்
பீறிட்டு நெஞ்சில் உறுதி
அளவுடன் அமைந்ததால், அமரர்பெறும் இன்பெலாம்
அவனிக்கு இறங்கி வந்தே,
அனைவர்பணி யும்செய்யும் நினைவொடு புகுந்துநம்
அகவாச லிற்கிடக்க,
தளர்வற்ற கல்வியும் அளவற்ற செல்வமும்
தன்னே ரிலாத் தலைமையும்
தக்கஒரு தாரமும் மிக்கஉயர் சேய்களும்
தாழ்விலா நண்பர் உறவும்
வளர்கின்ற வாழ்வில்'இவ் வையத்து மானுடம்
வளமுற்று வாழ்க!' என்றே
வண்தமிழ்க் காவைகண் கண்டசிவை பால!சிறு
வண்பறை முழக்கி யருளே!
52✓
“காலத்தை யொட்டியதொர் கதியிற் செலாமதக்
கட்டளைகள் கருதி வீழும்;
கண்டிப் புடன்மனக் கருணைஇல் லாஅரச்
கவுரவம் இழந்து தாழும்;
கோலமொடு நற்குறிக் கோளிலாச் சமுதாய
குடிகெட்டு அழிந்து போகும்;
குணமற்ற ஞானமும் தெளிவற்ற கல்வியும்
கொள்கையில் லாதஅரசும்
ஞாலந் தனக்குநோய்; சீலமில் லாவாழ்வு
நஞ்சம் கலந்த உணவே;
நாகரிகம் ஈதெனப் போலிவாழ் வினையுற்ற
நாடுகெடும்” எனும்வாய்மைநீ
ஒலமிடும் மானுடத்து ஒவ்வொருவர் செவியிலும்
ஒலித்திடச் செய்வதற்கே,—
உயர்காவை வேல்முருக! உமையாள் குமாரா!குக!
உனதுசிறு பறைமுழக்கே!
53✓
அதம்செய எழும்புதிய அக்ரமத் தால்நீண்ட
ஆசைஆ ணவமயக்கில்,
அறமுறை மறந்தோடி ஆடிக் குதிப்பவர்தம்
அவலநிலை யதனை,முடிச்
சுதந்தரம் எனும்இனிய சொல்லிற் பதுக்குவது
சூழ்ச்சி'என உலகம் அறியச்,
சொல்லித் திருத்திவிடும் வல்லாண்மை கொண்டவர்கள்
சோர்விலாப் போத மொழிபோல்,
இதம்தர எழும்தொனியில் எண்திசையு மேசிலிர்த்து
இருகை குவித்து நிற்க,
இனியதமிழ் உருவில்ஓர் புனிதநாதந்தனை
எழுப்பிஎம் மைக்காத்து அருட்
பதம்தரச் சமயம்இது, பன்னிருகை வேலவா!
பைம்புனற் பொன்னி பரவிப்
பாதபூ சனைசெயும் காவைஅகி லம்மையின்
பால!சிறு வறைமுழக்கே!
54✓
“அழியட்டும் மானுடர்க்கு ஆகாத தாய்எழுந்து
அக்கிரம வழியில் நின்றே
ஆளும்அர சாட்சியும் அனியாய முறைகளும்!
அடிவேர் அறுந்து கடிதிற்
கழியட்டும் ஒவ்வாத கதைகள்பல கூறிக்
கருத்தைக் குழப்பி விட்டுக்
கைவரிசை காட்டியே வையத்தை ஆள்கின்ற
கபடசம யங்கள் எல்லாம்!
ஒழியட்டும் உலகத்தில் ஒருவர்மற் றொருவர்தம்
உழைப்பைச் சுரண்டி இன்ப
உச்சத்தை எட்டிடும் பச்சைத் திருட்டுவாழ்வு!
ஓயட்டும் இழிவனைத்தும்!
இழியட்டும் மண்ணுலகை ஏய்த்துப்பல் வேடமிடும்
எத்தர்தம் தலைமை!” என்றே
எண்திசையும் ஒலியெழுத், தண்தமிழ்க் காவையாய்!
இனியசிறு பறைமுழக்கே!
55✓
சகவாழ்வி லேயுறும் சங்கடப் பாலையைச்
சகலரும் தாண்டி விடுக!
சந்தோடம் எனும்அரிய விந்தைக் கொழுங்கனிச்
சாற்றைச் சுவைத்தனைவரும்
இகலோக வாழ்வையே இந்திரா தியர்பெறும்
இன்பமய மாக்கி விடுக!
ஈடிலாப் பேரறிவு தேடாமல் வந்துஇவண
எல்லோ ருளத்தும் 'மலர்க!
திகழ்கின்ற புத்தொளித் தீபச் சுடர்க்குளத்
தீக்குளித்து இழிவு மாய்க!
தெய்வீக முற்றுமே எய்திமா னுடமெலாம்
தேவைகள் கடந்து வாழ்க!
உகமுடிவு கண்டுபுது சுகவாழ்வு பூக்கஎன
உலகெலாம் கேட்டு மகிழும்
ஒலிஎங் கணும்பரவ—ஒளிர்காவை யின்குமர!—
உனதுசிறு பறைமுழக்கே!