முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
செங்கீரைப்பருவம்3 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

செங்கீரைப்பருவம்

11✓
அன்னையின் மார்பின தாரமு திற்பசி
யாறி, அவள்மடிவிட்டு,
அள்ளுடன் எஞ்சிய பால்—அழ காய்எழுந்
தாடி வரும்பொழுதில்—
புன்னகை சிந்திய மெல்லிய செவ்இதழ்
பூத்து வழிந்தொழுகப்,
பொங்கிய சுந்தரத்து எங்கள் தமிழ்க்குலப்
புண்ணியம் முற்றிலும்ஓர்
இன்னிளஞ் சேயுரு எய்திஇக் கோயிலின்
சன்னிதி யில்உளதோ!’
என்றுஉல கேபிர மித்துஒரு கற்சிலை
என்னமுன் நின்றிடவே,
மின்ஒளி வேலொடு மன்னிய சண்முக!
மென்மெலச் சாய்ந்தாடு!
மெய்ப்புடை எங்களின் அப்ப னருள்குக!
மென்மெலச் சாய்ந்தாடு!
12✓
பந்த விலங்கற என்னுடை இந்தியப்
பண்டைய தொண்டர்குழாம்
பற்றும் வலக்கரம் உற்றஓர் கோலினிற்,
பார்முழு தும்பரவ
வந்து தவழ்ந்திடு தென்றல் அசைப்பினில்,
வானுற ஓங்கிஒளிர்
வண்ண மில்தன தெண்ணம் விளங்கிட,
வல்லமை காட்டிடவே
அந்தர மீதினில் ஆடி யசைந்திடும்
ஆன்ற கதர்க்கொடியின்
ஆட்டத்தை மீறிய நாட்டியம் செய்மன
மாம்மயில் மீதில், அருட்
சந்தக் கவிதரும் செந்தமிழ்த் தெய்வமே!
சண்முக! சாய்ந்தாடு
சம்பு வனத்துறை அம்பிகை பாலனே!
சண்முக! சாய்ந்தாடு!
13✓
தன்உளம் மீறிய காதலொடு இன்னிசை
தாங்கி வரும்தமிழில்
தான் அல ரும்கவித் தாமரை மத்தியில்
தங்கிய தேன்பருகி,
மன்னிய போதை மயக்கினில் ஆடிடும்
மாதவர் நெஞ்செனவும்;
மாமல யத்தி லிருந்து முகிழ்திடும்
மல்லிகை வா சமொடு
புன்னகை சிந்து குறிஞ்சியின் மாமணம்
பூண்டசைந் தாடிஇவண்
போந்திடும் மாருதப் பூங்கரம் தீண்டலின்,
புன்னகை சிந்தும்ஒரு
சன்னல் திரைத்துகில் என்னவும் அழகொடு
சண்முக! சாய்ந்தாடு!
சம்பு வனத்துறை அம்பிகை பாலனே!
சண்முக! சாய்ந்தாடு!
14✓
சேணுறு வானவர் சேனை முதலி;எம்
செந்தமிழ் தந்தமுதல்;
சிவகுரு; பண்டுயர் சித்தர்கள் பூசனை
செய்திடும் ஞானஉரு;
ஆணொடு பெண்ணும தான சிவத்தினது
ஆறுமு கப்படிவம்;
ஆற்றல் அனைத்தும்ஒன் றாகிய வேற்படை
யாளி; மலைக்கிழவன்;
பேணும் மனக்குகைக மத்தியிற் பூத்தொளிர்
பேரருட் சோதிஎனும்
பேச்சினர் யாவரும் ஆச்சரி யிக்கஓர்
பிள்ளை உருவினில்நான்
காணும் வகையினிற் காட்சி தரவரும்
கந்தனே! சாய்ந்தாடு!
காவிரி யின்கரைக் காவையில் மேவிய
கந்தனே! சாய்ந்தாடு!
15✓
அள்ளிச் சுவைக்கஓர் ஆயிர நாவுடன்
ஆடி வரும்தழலை
ஆதவன் செங்கரம் பூதலத் தேபொழி
அக்கடுங் கோடையிலும்,
தெள்ளிய பூம்புனற் பொன்னி மணற்கரை
தேடி வரும்தென்றல்
தீண்டத், தளிர்விரல் நீண்ட கிளைக்கரம்
திக்கெட் டிலும்பரவ,
வள்ளன்மை காட்டி அழைத்திடும் மாமரம்
வாரி வழங்கிடவே,
வாய்த்த கொழுங்கனி காம்பெனும் ஊசலில்
வாட்டமற் றாடுதல்போல்,
சள்ளை மறந்தஎன் உள்ள மடியினிற்
சண்முக! சாய்ந்தாடு!
சம்பு வனத்துறை அம்பிகை பாலனே!
சண்முக! சாய்ந்தாடு!