காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
வேலோச்சுபருவம்14 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்
வேலோச்சுபருவம்
66✓
ஆதிக்கு முன்னம் அதுவான ஈசன்
ஆசித் தணைத்த அதனால்,
அகிலாண்ட கோடி அவையாவும் ஈன்ற
ஆதார சக்தி யவளே,—
பேதித்தொர் கோடி பிரிவுற்ற தாய
பேயாட்டம் ஆடி உலகைப்
பீடித்து நிற்கும் வெஞ்சூரன் ஆவி
பின்ஓடி வீழ்ந்து மறையப்,
பீதிக்குள் ளாய பெரியோர்கள் கூடிப்
பிழையற்ற வாழ்வு காண்பான்
பின்நின்று தூண்ட—உன்னைக்கைந் நீட்டிப்
பெருவாஞ்சை கொண்ட ழைத்தும்
ஏதிற் கருத்தை ஏவித்,தனித்த
இடம்இங் கிருக்க நினைவாய்?
எழில்கொண்ட காவை முருகைய! வேலை
இன்னே சுழற்றி எழுவாய்!
67✓
“தருமம் குலைந்த தருணத் தெழுந்து,
தன்னே ரிலாமல் உலகில்
தலைசுற்றி ஆடும் நிலையில் தொடர்ந்த
கலிஓட,—மீண்டும் அறமே
வருமாறு செய்ய—வடிவேல் சுழற்றி
வருவேன்’’எனும்தன் ஒருசொல்
வாய்மைக்கு மாறு படஞாயம் ஏது?
வையத்து வாழ்வு குலைய,
இருள்உற்ற கோயில் அறையிற் புகுந்திவ்
இழிவைத் தடுக்க மனமே
இல்லா திருத்தல்,—வல்லாண்மை கொண்ட
இறைவா!—நினக்கும் அழகோ!
திருவோ டெழுந்து வருபொன்னியின்நைத்
திரையாயிரங்கள் தழுவித்
திகழ்காவை வாழும் முருகைய! வேலைத்
திரும்பச் சுழற்றி வருவாய்!
68✓
ஓயாத இன்ன லதுவாக இந்த
உலகத்து வாழ்வு முடிய,
ஒருகோடி பேதம் அவைசூழ மீண்டும்
உயிர்பெற்று வந்து நிற்கும்
பேயாற்ற லோடு வெஞ்சூர னின்கை
பின்னின்று தள்ளி விடலால்,—
பித்துற் றெழுந்து, மொத்துற் றயர்ந்து
பேதுற்று நின்று மடியும்
நாயாக—மக்கள் அலைகின்ற காட்சி
நயனத்தில் ஏற விலையோ?
நாசம் தவிர்க்க நஞ்சுண் டிருந்த
நாதன்கை தொட்ட அதனால்,
தாயான எங்கள் அகிலாண்ட வல்லி
தரவந்த காவை முருகா!
தருமத்தை மீண்டும் உருவாக்க, உன்கைத்
தனிவேல் சுழற்றி எழுவாய்!
69✓
தன்ஆற்ற லான தனையோர் பொன் வேல
தாகக் கொடுத்த தலைவன்—
“தறிகெட்டலைந்து நரியொத் துலைந்து
தாழ்வுற்று வீழ விரையும்
இந்நா னிலத்தின் இதயத்தில் ஏறி
இழிவிற் செலுத்தி விடவே,
இடையீ டிலாது முயல்கின்ற சூர
பன்மாவின் ஆவி யதனை
முந்நாளில் ஆன முறையிற் கிழித்து
முழுவென்றி காண்க!’’ எனவே—
மோனச் சிரிப்பொ டொருலிங்க மாய்எம்
முன்னே முளைத்து நின்றான்.
உன்னால்அல்லாமல் உய்வில்லை' என்றிவ்
உலகேங்கி ஓல மிடவும்,
ஓய்வேது? காவை அழகா!உன் வேலை
உடனே சுழற்றி வருவாய்!
70✓
அச்சக்தி தன்னூல் முச்சக்திரூபம்
அதுவான தெய்வ வலியால்
ஆக்கிட்ட வேலை ஆர்வத் துடிப்பின்
அந்நாள் அளித்தது,—உயிர்கள்
அச்சத்தை நீக்கி, அறிவோ டெழுந்த
ஆண்மைக்குள் அன்பு சொரியும்
ஆயாசம் அற்ற பேரின்ப வாழ்வில்—
அழியா திருக்க அலவோ?
நச்சுக்கை நீட்டி நாசத்தை மூட்ட
நாடோறும் வந்து நிற்கும்
நவமான கிரௌஞ்ச மலையான துன்பின்
நடுமார்பி னூடு பாய்ச்சிச்
சிட்டித்து, மண்ணை ரட்சித்து வாழ்வு
சிவமாக—நாவல் அடவிச்
சிவசக்தி பால!—வடிவேல் சுழற்றிச்
சேணின்று இறங்கி வருவாய்!