முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
சப்பாணிப்பருவம்5 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

சப்பாணிப்பருவம்

21✓
நீண்டதோர் பட்டியலை
நீட்டி. அவற்றையெலாம்
நீ அளித் தால்இதனை
நினக்களிப் போம்' எனவே
வேண்டும்அப் பக்தர்குழாம்
வீரிடும் ஓசையிலே,
விற்கப் படும்பொருளாய்
விட்ட நினதருளுக்கு
ஈண்டும் அடியவரும்
எண்ணத்தை நஞ்சாக்கி
ஏய்க்கும் தரகர்களும்
எங்கணும் சூழ்ந்து,அறிவை
ஆண்டு வரும்மடமைக்கு
ஆலயத் துள்ளிருந்தே—
ஆனையங் காஅழகா!—
ஆர்த்தங்கை கொட்டுகவே!
22✓
கள்ளம் கபடமிலாக்
காந்தச் சிரிப்பதனால்,
காண்பவர் நெஞ்சையெலாம்
கைக்குள் அகப்படுத்தும்
உள்ளம் படைத்துஉலகத்
துள்ள சிறார்களெல்லாம்
உன்னுரு மாற்றம்எனும்
உண்மை தனைஅறியாக்
குள்ள மனத்தினராய்க்,
குன்றுகள் தோறும்உனைக்
கூக்குர லிட்டுநிதம்
கும்பிடும் மானுடரை
எள்ளும்எம் தெய்வமே!
இன்னெழில் நாவலடி
ஈசன் இளமகவே!
இருகரம் கொட்டுகவே!
23✓
பொன்னும் நவமணியும்
பூவொடு பூந்துகிலும்
பூட்டிப் பலவிதமாய்ப்
புத்தொழில் கண்டுமகிழ்
அன்னையர் போல்,நிதமும்
ஆசை உலுக்கிடலால்
ஆளுக் கொருவிதமாய்
ஆன விதத்தினில்நீ
இன்னெழிற் கோலமுற
இச்சையுடன்முயலும்
இவ்வுல கோர்க்கெதிரே
எள்ளிச் சிரித்திடும்-எம்
அன்னையும் தந்தையுமாம்—
ஆறு முகச்சிவமே!
ஆனையங் காவுடையாய்!
அருட்கரம் கொட்டுகவே!
24✓
ஈனம் அழிக்கவரும்
ஈடறி யாமறமே!
இளமை வளமையெலாம்
ஏற்றெழும் இன்னெழிலே!
ஞானம தோர்உருவாய்
நாடிய வேலுடையாய்!
நாவலங் காஅகில
நாயகி தன்குமரா!
வானவர் சேனைகொள
வந்த தனித்தலைவா!
வண்தமிழ் ஈந்துதவக்
கொண்ட முதற்குரவா!
தீனர்க ளுக்குதவும்
தேவர்கள் தெய்வமே!
திக்குகள் கெக்கலிக்கச்
சப்பாணி கொட்டுகவே!
25✓
பொருளறி யாச்சடங்கிற்
போது கழிப்பவர்கள்
புந்தியிற் சிந்தனையின்
போக்கை மறித்திடலால்,-
இருளிடை யேகுருடாய்
ஏங்கி அழும்குழவி
இன்னும்ஒன் றுக்குவழி
ஈதென ஓதுதல்போல்—
மருளொடு வாதமிடும்
மதமெனும் பேருடைய
மானுடர் தங்கள்மன
மடமை தனைஇகழ்ந்து—
குருபர னே!முருகா!—
கொட்டுக சப்பாணி!
குளிர்பொழிற் காவையினாய்!
கொட்டுக சப்பாணி!