காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
துயிலெழற்பருவம்10 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்
துயிலெழற்பருவம்
46✓
மானசப் பூம்பொய்கை மத்தியில் அரும்பி,மறை
மதுகரம்ஓர் நான்குஇசைத்த
கானயாழ் இசையிலே தான் அவச மாகியுட்
கட்டவிழ்ந் திட்ட தால்,மெய்ஞ்
ஞானமலர் மீதில்அறு நங்கையர் வளர்த்திடவும்
நம்தமிழர் நாடு புக்கு
மோனம்விளை யும்காவை யின்நடுவி லேதுயிலும்
முத்துக் குமாரயனே!
கூன்இள மதிதேய்ந்து கொண்டே நகர்ந்திடக்
குணகதிர் எழுந்து விட்டான்.
போனதுஇருள்.போனதே புவிஇன்னல் யாவுமே.
பொழுதோ விடிந்தது, இன்பம்
ஆனது.‘இனி யாவுமே ஆனந்தம்! ஆனந்தம்!
ஆனந்தம்!’ என்ற புதுமைக்
கானகச் சேவல்ஒலி காதில்விழ வில்லையோ?
கந்தா! விழித்தெழுகவே!
47✓
கானி லிருந்துஎழும் தென்இளங்
காற்றவள் கூட்டிப் பெருக்கிட,
வானின்ற மாரிஉன் கோயிலின்
வாயிலில் நீரைத் தெளிக்கிறாள்.
மேனின்று எழுந்திடும் பொன்னியும்
மெல்லஉன் நாமம் இசைக்கிறாள்
தேன்நின்ற பூந்துணர் வஞ்சியர்
தெய்வக் குரவை பயின்றிடச்,
சூனியக் காவினிற் பூத்தொளிர்
சோதி மலர்களைத் தூவிடப்,
பூநிறை கூடைய ளாய்உஷை
பூதலம் தேடி விரைகிறாள்.
மாநிலத் தாய்இதைக் கண்டதும்,
வாழ்த்தி மலர்க்கை குவிக்கிறாள்.
ஏன்இன்னும் தாமதம்? காவையின்
எம்பெரு மானே! எழுந்திறாய்!
48✓
குடத்தினில் தேனும் கூடையில் கனியும்
கோணியில் சீனியும் கண்டும்
திடத்தினில் சுமந்த கொல்லிஅங் குறவர்
தெருவெலாம் கூடிநிற் கின்றார்
சுடச்சுடப் பொங்கற் சோறும்ஆன் பாலும்
சுவைபடக் காய்ச்சிய நெய்யும்
அடக்கிய கலம்பல் லாயிரம் கொண்டே
அந்தணர் வந்துநிற் கின்றார்.
கடப்பமா மலரும் கூவிளந் தளிரும்
கட்டிய சரம்பல குவித்து, இவ்
இடத்தினைத் துறவோர் இனம்பல நிரப்ப,
இன்னிசை வீணையர் பாட,
நடத்தினில் வல்ல நங்கையர் பரத
நாட்டியம் புரிந்திடு கின்றார்.
அடத்தினுக்கு இனியும் துயில்வதோ? காவை
ஆறுமு கா!விழி மலராய்!
49✓
கங்கை யாதிநதி மங்கை மார்எழுவர்,
கைவ ளை'கலக லீர்'எனத்
தங்க நீர்க்கலசம் பொங்கும் ஆவலொடு
தாம்சு மந்துவிரை கின்றனர்.
செங்க திர்க்கடவுள் ஆதி யோர்எழுவர்,
சேண கப்பொழிலி னுடுஅலர்
கொங்கு லாவுமலர் கொண்ட கூடைபல
கொண்டு முண்டிவரு கின்றனர்.
தங்கள் தோளின்மிசைத் தங்கு காவடிகள்
தாங்கி, மானுடரும்—ஈங்கிதோ!—
மங்க லப்பொருள்க ளோடு கோவிலின்முன்
மண்ட பத்தில்நிறை கின்றனர்.
எங்கள் காவைவளர் தெய்வ மே!தமிழர்
ஏத்தும் ஞானகுரு பண்டிதா!
இங்கு வந்தருள ஏற்ற காலைஇதில்,
இன்ன மும்துயில லாகுமோ?
50✓
மோக முற்றழகு முத்த மிழ்க்கிளிகள்
முருகன் வாழ்எனமு ழக்கிடும்.
யூகம் மிக்கஉப நிடத குக்குடமும்
ஓம்ஓ லித்துவல மாய்வரும்.
பாகெ னக்குழறும் மாமறைக்குயில்கள்
பாடி உன்பெயர்கள் ஓதிடும்.
யாக வேதிகளில் ஆகு திப்பொருள்கள்
வேகும் அங்கி'அர கர'எனும்.
போக சுந்தரியள் ஆன தாரணிவி
பூதி வேண்டிஉனை வாழ்த்தினாள்.
ஏக நாயக!நீ ஏறு மாமயில்தன்
எழுநி றக்கலவம் ஆயவான்,
மேக மாமலையின் மீது கீழ்த்திசையில்
மேவு கின்றதொளி யாய்இதோ!
ஆக மாதிபதி யான காவைநகர்
ஆண்ட வா!துயில லாகுமோ!