முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
முத்தப்பருவம்6 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

முத்தப்பருவம்

26✓
சீதக் கடல்நீர் முழுவதும்ஓர்
சிறங்கைக் கடங்க உறிஞ்சிடினும்,
சிறிதும் குறையாத் தாகமொடு
சீடமை கொண்ட குறுமுனிவன்
போதம் அடையச் செழுந்தமிழைப்
பொதியத்து அமர்ந்து புகட்ட,முனம்
போந்துஅங் கிருக்கும் முதற்குருவே!
பொன்னிக் கரையில் வாழ்சம்பு
நாதன் எடுத்துச் சீராட்ட,
நாகம் அணைத்த தோள்கள்எனும்
நளிர்குன் றேறி விளையாடும்
ஞானக் குழந்தாய்! இன்னருளாம்
காதல் மணக்கத் தான்மலரும்
கனிவாய் முத்தம் தருகவே!
காவை யதனுள் மேவும்அருட்
கந்தா! முத்தம் தருகவே!
27✓
கத்திக் குதித்துவெண் முத்துக்கள் ஆயிரம்
கைகளால் வாரி வந்து,
காசினிப் பெண்மடியில் வீசிக் களித்திடும்
கடல்அலைப் பாம்பின் உச்சி
புத்தழகு காட்டிடப் புத்தொளிசெய் கீட்டிசைப்
புலரிஎனும் மயிலின் மீது
பொற்புடைய செம்பொனொளி அற்புதக்கோலமொடு
போந்துகதிர் வேலை ஏந்திச்
சித்தம் சிலிர்க்கநீ சேண்வெளியில் எழுகையிற்,
செந்தமிழ்க் கவிதை யுள்ளம்
சீர்கொள்அலை வாயிலே தான்கண்ட காட்சியில்
செம்மாந்து சிம்புளிக்கப்,
பக்தியால் நக்கீரர் பாட,மென் முறுவல்பூரி
பவளவாய் முத்த மருளே!
பாவைகுற மகள்நேச! காவைவரு குமரேச!
பவளவாய் முத்த மருளே!
28✓
நிரவலே அறம்' என்று நித்தலும் பேசியும்
நெடுங்கொடிகள் ஏற்றி வைத்தும்
நெஞ்சினை மயக்கிவிடும் வஞ்சக முடன்பழைய
நிலையைக் குழப்புதற்கே
சரதமிடு வார்கள்தம் சன்மார்க்க சமதர்ம
சத்தமெல் லாம்,உலகதும்
சாகச மயக்கிலே மோகமிக ஆகையிற்
சதிசெய்து வீழ்த்தி விடும்ஓர்
கரவென்று உணர்ந்தநீ, கதியற்ற மானுடம்
கைப்பாவை யாகி அந்தக்
கவடார்அடி யில்வீழ அபயம்என ஓடுதல்
கண்டுபுன் னகைகாட்டுவாய்!
பரதெய்வ மே!காவை அரன்ஈன்ற செல்வமே!
பவளவாய் முத்த மருளே!
பாலமுரு கையனே! கோலஉரு செய்யனே!
பவளவாய் முத்த மருளே!
29✓
வாய்க்கினிய பேச்சினால் வாக்காளர் நடுவிலே
வந்து, பின் தலைவர் ஆகும்
வாய்ப்புற் றும்தங்கள் ஏய்ப்புத் திறத்தினால்
வல்லரசர் போல வாழும்
பேய்க்குணப் போதையால், பேதுற்ற நாட்டைப்
பெரும்பாலை யாக்கி விட்டுப்
பித்தக் கிறுக்கினிற் கத்திக் குதித்திடும்
பெற்றியைக் கண்டு, நெஞ்சம்
தீய்க்கும் சினத்தொடுஅத் தீயர்மேல் ஏவிடத்
தீட்டுவடி வேலொளியுடன்,
தீயொத் திருக்கும்ஒளி மேயசெவ் வாய்இதழ்
தெறிக்கும் சினச்சிரிப்பின்
தூயஅற ஒளிகொண்டு சேயென விளங்குவாய்!
துவர்வாயின் முத்த மருளே!
சுடரயிற் கையனே! காவைமுரு கையனே!
துவர்வாயின் முத்த மருளே!
30✓
உரிமையை நினைந்துதம் கடமையை மறந்திடும்
உழைப்பாளர் கூட்டம் எங்கும்
ஒலமிட் டலைகின்ற கோலத்தை நோக்கலின்
உதிக்கின்ற புன்சிரிப்பும்,
புரியாத வகையில்இப் புவியைச் சுரண்டவே
போந்தமுத லாளர் கூட்டப்
புனைசுருட் டால்உலகர் அனைவரும் கெடல்கண்டு
பொங்கிடும் புன்சிரிப்பும்,
நரியொப்ப இங்கிவர்தம் நடுவிற் புகுந்துஇனிய
நயவஞ்ச கப்பேச்சினால்
நாடாள முன்வரும் நஞ்சரைக் காண்டலால்
நண்ணிடும் புன்சிரிப்பும்
விரிகின்ற உதயத்து வெயிலொத்த இதழ்குவிய
மெல்வாயின் முத்த மருளே!
வெண்ணாவ லடியிலுறு தண்ணார் கடம்பனே!
மெல்வாயின் முத்த மருளே!