காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
காப்புப்பருவம்2 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்
காப்புப்பருவம்
6காரைக்கால் அம்மை✓
தம்முட் கனிந்த தாபம்மிகத்,
தமக்கென்று ஒருதாய் இல்லாத
தன்னந் தனிய ராயபெருந்
தலைவர், திருவாய் மலர்விரிய
‘அம்மே!’ என அன்று அழைத்திடவே,
அலகை யுருவோடு அவர் அடியை
ஆடிப் பாடி அடைந்தணையும்
ஆலங் காட்டுத் தமிழ்த்தாயே!
எம்மை யுடையான்; எழிலுடையான்;
இளமை கொழிக்கும் வளமுடையான்;
எளியார்க்கு இரங்கும் அருளுடையான்;
இனிய காவைப் பதியுடையான்;
மும்மைப் புவனம் முழுதாளும்
முதல்விக்கு இனிய புதல்வன் எனும்
முருகச் சேயை, அவன் குடும்ப
மூதாட் டியள்நீ முன்காக்க!
7நாவரசர்✓
வெப்புமனப்பசியொடு அருள் வீட்டைத் தேடி
விரைகையிலே, பிறப்பிலிதன் வரலாற் சுட்டி
அப்பர்' எனக் கூவிட; முன் ஆண்மை யோடே
அறச்சமரிட்டு, அரசனும்நோற்று அடியான் ஆக,
மெய்ப்பொருளுமுன் னாள்‘இவன்ஓர் மேதை’என்று
மேதினியே போற்றியநா வரசன் காக்க—
கப்புமழைக் கருமுகில்கள் கைகோத்து ஆடும்
காட்டேரிக் கூட்டம்போல் கவிந்து சுற்றி,
எப்புறமும் எதிரொலிக்க இடித்து மின்னி,
இன்னெழில்வெண் முத்திறைக்கும் இயல்பைக் காணப்
புப்புதுப்பல் கோடிமலர் குறிஞ்சி பூக்கும்
பொருப்பினைவிட்டு, இந்நாவற் பொழிலுள் தங்கும்
இப்பெரிய சிறுமகவை; இமயப் பாவை
எடுத்தளித்த வேல்சுழற்றி எதிர்த்தோர் எல்லாம்
குப்புறவீழ்ந் திடத்தளிர்க்கை கொட்டி ஆடிக்
கும்மாளம் போடுகின்ற குமாரத் தேவை!
8மெய்கண்டார்✓
ஆதி முதற்கல் லால்அடியில்
அமர்ந்து,ஓர் நால்வர்க்கு அறமுறையை
அறியப் புகன்ற சிவகுருவும்
ஆசா ரியன்என்று ஏத்திட,முன்
போதித் திருந்த சிவஞான
போதக் குருவைப்; புலவர்குலம்
போற்றிச் சொரியும் கவிமலர்கள்
பூண்ட குருவைப் புரந்தருளப்—
பேதித்து எழுந்த பேதைமையால்
பெரும்போர் புரிந்து, பின்நகரும்
பித்தர் பலர்சொல் தத்துவநூற்
பின்ன லிடைப்பட்டு உழல்மனிதச்
சாதி உயரச், சன்மார்க்க
சைவம் அளித்த மெய்கண்ட
சந்தா னத்து முதற்குரவன்
சன்னிதி புகுந்து வேண்டுவனே.
9சிவஞான முனிவர்✓
பூபாலர் போற்றுபல பூர்வாசி ரியர்வழிப்
புனிதமுறும் ஒருமொழியதைப்
போன்றதெளி வுரைஎதும் தோன்றாமை யால், மனப்
புண்ணோடு நின்றிருந்த
காபாலி ஈன்ற ஒரு மாபாடை யாம்தமிழ்க்
காசினியி லேநிமிர்ந்து,
கண்ணிய முறப்பண்டு வெண்ணெய்நல்லூரின்மெய்
கண்டார் அளித்த நூற்கு
மாபாடி யம்தந்த மாதவச் சிவஞான
மாமுனிவர் வந்து காக்க—
மயிலேறி, வண்பொன்னி பயில்கின்ற வெண்ணாவல்
மாமரத் தடியை நாடி,
சீபாத மீதொளிர்மெய்ஞ் ஞானச் சிலம்பின்ஒலி
சித்தாந்த சைவம் ஓதும்
சிறுவனாய் உருமாறி ஒப்பற்று நிற்கின்ற
சிவபால குருபரனையே!
10வள்ளலார்✓
முதிய சழக்குஅத் தனையையும்மண்
மூடிமறைக்க, மொய்த்தபழ
முறையின் குறைகள் முடிந்தொழிய,
மூப்பற் றிருக்கும் மோகத்துப்
புதிய முறுவல் பூத்தலரும்
பொற்பில், தமிழைப் புதுக்கிஅருள்
புரியும் வடலூர்ப் புண்ணியனார்
போதம் துணையாய்ப் புரந்தருள்க—
நதியி னிடைப்பட்டு உயர்ந்தஒரு
நாவற் காட்டில், நாதியிலா
நங்கை யவள்தன் செங்கரத்தில்
நளின மலர்போல் தாங்கும்அருள்
நிதிய மதனைப், பழஅடியார்
நெஞ்சக் களத்தில் நிலையாக
நித்தம் குதித்து விளையாடும்
நெடிய தமிழ்க்குஓர் தலைவனையே!