காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
வருகைப்பருவம்8 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்
வருகைப்பருவம்
36✓
உரிமை தனைத்தம் ஆட்சிவெறிக்கு
உணவாக் கிடுவோர் ஒருசிலரும்,
உற்ற கடமை முற்றிலும்விட்டு
உரிமைக்கு அலறும் மிகப்பலரும்,
பிரிய முடன்தாம் கீழ்இறங்கிப்
பீடு பெறப்பின் தொடர்வோரும்,
பேச்சொன்று அன்றிச் செயல்அறியாப்
பென்னம் பெரிய தலைவர்களும்,
புரியாக் குழப்பம் பொதிந்தபல
போதம் உரைக்கும் மேதைகளும்
புகட்டும் அறிவே திகட்டிடலால்,
போதைக் கிறுக்கில் பொன்றிடுவோர்
வரிசை வளரும் வையத்தின்
வலக்கை பிடித்து மடைமாற்ற
வருக! திருநா வற்காட்டின்
வள்ளால்! வருக! வருகவே!
37✓
இயக்கும் கடவுள் எங்குற்றான்?
இயற்றப் புகுந்த தனைத்தும்மிக
இழிந்து கிடக்கும் இந்நிலையில்
எழுந்தே இதனைத் திருத்தாமல்,
மயக்கத்து அயர்ந்து மாழ்கிடுதல்
மாண்போ?' எனஇம் மண்ணுலகின்
மாந்தர் குலமே மறுகையிலே
மறைந்தோ இருப்பது? அறிவனைத்தும்
வியக்கக் கரத்தில் விஞ்ஞான்
வேலோடு எழுந்து, விழிக்கெதிரே
விந்தை விளைக்கும் விருப்புடனே
வேட்கை மயில்மீ தேறி,நலம்
பயக்கும் படிசீர் திருத்திவிடும்
பரிவால் வருக! வருகவே!
பழனக் காவை வாழ்தண்ட
பாணீ! வருக! வருகவே!
38✓
அழுகிக் கழுகிற்கு உணவாக
அடக்கம் செயஆள் இல்லாமல்,
ஆற்றங் கரையிற் கிடந்திடும்ஓர்
அனாதைப் பிணத்தில் எழும்அற்பப்
புழுவிற் கடைய புன்குரம்பை
புனைந்து திரியும் மானுடத்துட்
பொதிந்து கிடக்கும் பொல்லாங்கால்,
புவனம் கரிந்து பெருநரகாய்
விழுமுன், காக்க வேண்டுகிறேன்.
வேலா யுதத்தை வீசி,அருள்
வேண்டிக் கிடக்கும் தொண்டர்களின்
வேட்கை மயில்மேல், விரைவுடனே
எழுக! செழுநீர் எழிலுருவம்
ஏற்றான் மகனே! வருகவே!
இயல்சேர் ஆனைக் காஅமர்ந்த
எழிலோ வியமே! வருகவே!
39✓
வறுமை மலிந்து, வாழ்க்கைஒரு
வறண்ட பாழாய் விட்டதனால்,
வாடிக் கிடக்கும் நாட்டினர்தம்
வருத்தம் தோய்ந்த நெஞ்சகத்தில்
உறுவீண் பிணக்கி னுட்புகுந்தே,
உயரக் கொடிகள் உயர்த்தி,அருள்
உபதே சங்கள் ஓதி,மனம்
உளையக் குழப்பித், தம்முடைய
சிறுமை விளங்க ஏமாற்றிச்,
சிம்மா சனத்தைப் பெறச்சூழ்ச்சி
செய்யு மவர்பால் சிக்குண்டு
சீர்கெட் டழியும் குடியரசால்,
பொறுமை இழந்துஉன் பொன்னடியே
புகல்என்று அடைந்தோம். வருகவே!
பொன்னார் காவை நகரின்நறும்
புகழே! வருக! வருகவே!
40✓
அடங்கி ஒடுங்கும் ஆற்றல்மிகும்
ஐம்பூ தங்கள் பின்தொடர,
அணுவைப் பிளந்தும் அகிலாண்டம்
அனைத்தும் அளந்தும் அடிமைசெயத்;
திடம்கொண்டு உலகத் தெருவழியே
தென்போடு உலவும் திறனுடைய
தேவ குமார னாம்மனிதன்
திரங்கி மனத்துத் தென்பிலனாய்,
முடங்கிச் சாவின் சன்னிதியின்
முன்ற ருங்கால்,உன்னி)—அதோ!—
முருகா!' எனக்கை கூப்புகிறான்.
மூடச் செருக்கின் முடிவிலுள
தடம்கண்டு அடையத் தாவும்அவன்
தனக்குஉன் அருளைத் தருகவே!
தமிழுக்கு இரங்கும் தண்காவைத்
தண்டா யுதனே! வருகவே!