சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகம மேத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்கநீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம்நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில்நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய்நீ
அடியனைக் காத்திட அறிவாய்வந் தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனேநீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில்நீ வந்திடப்பா
காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
மித்தையா மிவ்வுலகை மித்தையென் றறிந்தி டச்செய்
அபயம் அபயம் கந்தா அபயமென் றலறுகிறேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன்
உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள்ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும்நீ தந்துவிடு
அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான்மறந்து
நல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்து
பாவபுண் ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய்
அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்து நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்
சிவனைப் போலென்னைச் செய்திடுவ துன்கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா