முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
நன்கறிந்து கொண்டேன்13 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

நன்கறிந்து கொண்டேன்

ராகம்: காம்போதி
✓
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்
விட்டிட மாட்டேன் கந்தா வீடதருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகி யாகஎனைச் செய்திடும் குருநாதா
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடிய ராக்கி மெய்வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர்போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னி மலைக்குமரா சித்தர்க் கருள்வோனே
சிவவாக்கிய சித்துருனைச் சிவன்மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்
புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குரு நாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளம் அருள்வீரே
கற்றவர்க ளோடென்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்
ஸ்கந்தகிரி என்பதை நான் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்