சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
அருளாடியர் மடத்துத் தலைவர் புலவருக்குப் பரிசில் நல்கியது கூறல்7 / 16
1காப்பு2புலமைத் திறம்3புலவர் வறுமை4பரிசில் வேண்டிச் செல்வரை நாடியது கூறல்5நல்லோர் வறுமையும் நலந்தரும் என்னல்6சென்னி மலையின் சிறப்புறு மகிமை7அருளாடியர் மடத்துத் தலைவர் புலவருக்குப் பரிசில் நல்கியது கூறல்8பூந்துறை நாடு9குறிஞ்சி நிலம்10முல்லை நிலம்11மருத நிலம்12பாலை நிலம்13சென்னிமலைமேல் செவ்வேளைத் தரிசித்தல்14முருகன் புகழ் பாடுதல்15செவ்வேள் பரிசில் நல்குதல்16சென்னிநகரச் சிறப்பு
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
அருளாடியர் மடத்துத் தலைவர் புலவருக்குப் பரிசில் நல்கியது கூறல்
✓
அன்ன வேளை யழகுற மேனியில்
அரிய வெண்ணீறும் அக்கமா மணியும்
வெள்ளொலி யாடையம் விளங்குறத் தரித்த
அருளா டிகண்மடத் தருள்மிகு தலைவர்
அகத்திற் கருணை முகத்திற் பொலியவந்
✓
தென்கரம் பற்றி யேகினர் சென்றோர்
மண்டபத் தென்னை வான்றவி சமர்த்தி
யென்முக நோக்கி யெழில்மிகு மிந்தச்
சென்னிக் குன்றந் திகழ்தரப் பொலியுங்
குன்ற மெறிந்த குமரவே ளுனக்கு
✓
நல்லுடல் வாழ்வும் நயமுறு செல்வமும்
மன்னுற வருளை வழங்கினன் வாழ்கென
நீற்றினை யென்றன் நெற்றியிற் பூசிக்
குமரி வாழைக் குருத்தினை விரித்து
நீர்தெளித் தென்ற னேர்முக மிருந்து
✓
திகழைந் தமுதுந் தேன்தினை மாவும்
மாம்பழங் கதலி வருக்கையின் சுளையும்
அறுசுவைக் கறிகளு மப்பள வகையும்
அன்னமும் பருப்பும் ஆன்புது நெய்யும்
சுண்டை வற்றற் சுவைமிகு குழம்பும்
✓
நெல்லிசேர்த் தரைத்த நிகரில்மோர்க் குழம்பும்
மிளகு சீரகம் மிதமாய்த் தூதுளை
சேர்த்துச் செய்த தெளிவுறு ரசமும்
கன்னல் நெய்பால் கலந்துடன் சமைத்த
சர்க்கரைப் பொங்கலுந் தாளித மணஞ்சேர்
✓
புளியுலை வெந்த பொன்னிறப் புழுக்கலும்
மொந்தையில் நிறைந்த முளிதயிர் விராவிய
அன்னமு மாப்பா லடிசிலும் துவையும்
அன்புறப் படைத்து ஆர்வமிக் குடைய
சொல்லினும் பொருளினுஞ் சுவையுற முகமன்
✓
இன்னுரை பலவு மிடையிடை கூறி
உண்ணுமா றென்னை யூக்கின ருணவை
வயிறும் வாயும் வாய்த்த பயன்கொளத்
தேவ ரமுதினுந் தீஞ்சுவை மிகுந்த
தென்றமிழ்க் கவியிற் சீர்பெறச் சுவைத்து
✓
உண்டே னுண்டபி னுற்றவென் முகத்தின்
மலர்ச்சி கண்டு மகிழ்வுறு மடியவர்
என்னை நோக்கி யிலங்கெழிற் புலவ!
முன்னைமா தவத்தின் முழுப்பயன் கூட்டச்
செம்பொன் வரையின் சிகரமென் றுரைக்குஞ்
✓
சென்னிமா மலையிற் சேர்ந்தனை யாதலின்
இல்வாழ் வதனி னிருந்துயர் கடந்து
நல்வாழ் வதனை நயமுறப் பெறுவாய்
இம்மலை மகிமை யியம்புத லெளிதல
வாயினுஞ் சிறிதிங் கறைகுவன் கேண்மோ.
✓
தெவ்வுதூர் மாவின் றிறலுரம் பிளந்த
செவ்வேட் சேயின் றிருவருட் பொலிவும்
போன வுயிருடல் புகுந்திடச் செய்யும்
சஞ்சீ வனிமுதற் சாற்றுநால் வகைசேர்
மருந்து களுமிம் மலைதனி லுண்டு.
✓
மூப்பும் பிணியு முறைபெறத் தவிர்த்து
மரணமெய் தாமல் வாழ்ந்திடச் செய்யும்
கையா வெட்டியிக் கல்வரை யுண்டு
கடியர வோட்டுங் கடிமண மிகுந்த
கருநொச் சியைநீ காணலா மீங்கு.
✓
அற்றற் றுடல்சேர் அற்புதங் கொண்டு
சினந்தெயி றதனாற் றீண்டிடிற் சித்தி
தருவதாய் முத்துந் தவளமும் போன்ற
வெண்ணிறச் சாரை மேவுமோர் பாலில்
கண்முன் றோன்றிக் காணப் பெறாத
✓
காணாச் சுனையுங் காணுமிம் மலையில்
கருங்கொடி யென்னுங் காகமே றாத
சினகரக் கூடஞ் சிறந்திடு மோர்பால்
வானம் பெய்யாது வறட்சிமீக் கூர்ந்து
கனல்வளி வீசுங் காலநீர் சுரந்து
✓
அருவியாய் வழியும் அற்புதம் பெருக்கு
மாமாங்கச் சுனையும் மலைதனிற் பொலியும்
சித்தர்வாழ் குகையுந் தெய்வமூ லிகையும்
பவளக் குறிஞ்சியும் பரூஉக்கலின் முளைத்த
புல்லுரு வியுமிப் பொன்வரை யுண்டு.
✓
இம்மலை மாதவ மெய்திவாழ்ந் திருந்திவ்
வற்புத மனைத்தும் பொற்புறக் கண்டு
சென்னிமா மலையிற் செவ்வேள் தனக்கும்
வள்ளிதெய் வப்பிடி மங்கையர் தமக்கும்
ஆலயம் கோபுரம் அழகுசேர் பதிட்டை
✓
திருத்தேர் விழாக்கள் சிறப்புறச் செய்தோன்
அரவணி சடையோற் கன்புமா றாத
சரவண முனிவன் தமிழ்மொழிச் செய்த
தலபுரா ணமுமித் தலத்தினி லுண்டு
அன்னதன் பெருமை யாரளந் துரைப்போர்?
✓
மணப்பூங் கடம்பணி மார்பனை யிவ்வரை
யன்புடன் கண்டவ னடிவணங் குறுவோர்
பூமகள் திருவும் புவிமகள் திறனும்
நாமகள் கல்வியும் நலமுறப் பெற்று
மனைவி மகருடன் மகிழ்வுற வாழ்ந்து
✓
சிவஞான சித்தியும் சீர்பெறு முத்தியும்
எய்தப் பெறுவ ரென்றினி தியம்பிச்
செம்பூம் பட்டின் சீருடை யென்றன்
மருங்கில் விளங்க மகிழ்வுட னுடுத்தி
எழுதலை முறையு மெடுக்கக் குறையாப்
✓
பொன்னும் மணியும் புரைதவிர் முத்தும்
மணிவிர லாழியு மகரகண் டிகையும்
மரகத மாலையும் வயிரக் கடுக்கனும்
தங்கப் பதக்கமும் தகைகக் கடகமும்
அழகு திகழுறு மணிகலன் பிறவும்
✓
நோக்கு நுழையா நுண்ணிழை யோட்டிய
வேயுரி யன்ன வெண்டுகி லாடையும்
கம்பளச் சால்வையுங் கவின்றலைப் பாகையும்
சட்டையுங் குட்டையுந் தரிக்கு மேலாடையும்
நீறுஞ் சாந்தும் நிரல்பட நிரைத்த
✓
பொற்பூந் தட்டைப் பொற்புற வெடுத்து
ஆர்கலி யுவகை யகந்தனிற் பெருக
அறிஞ! கொள்கவென் றன்புடன் கொடுத்துச்
சென்னிமா மலைவேள் திருவரு ளதனால்
திருவு மிகவுஞ் சீருறப் பெருக
✓
வழிவழி யாக வாழ்கென வாழ்த்திய
அருளா ளடிக ளடியிணை போற்றி
நிலம்படர் வணக்க நேருறச் செய்து
பிரியா விடையாற் பெயர்ந்தனன் வந்தேன்
வாழிய கேண்மதி வளர்மதிப் புலவ!
✓
எல்லா மலையிலு மிருந்தருள் செவ்வேள்
சென்னி மலையிற் சிறப்புற அருள்வான்
ஆகலின் நீயு மம்மலை சென்று
வள்ளி துணைவன் மலரடி கண்டு
புகழ்ப்பொரு ளமைந்த தமிழ்க்கவி மாலை
✓
வளமுறப் பாடி வணங்குவை யாயின்
வறுமைப் புலியும் வருத்துநோய்ப் பேயும்
வாய்விட் டோட வளர்மிகு செல்வமும்
உடலி னலமு மொழியும் பெறுகுவை
சென்னி மலைதிகழ் சீர்பெறு நாடும்