முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
பாலை நிலம்12 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

பாலை நிலம்

✓
தவளப் பிறையொளிர் சடைமுடி யுடையாள்
பச்சை நிறத்தி பவள வாய்ச்சி
முத்தின் மூரல் முகமதி யுடையாள்
கயனிகர் கண்ணி கச்சார் தனத்தி
✓
எண்டோட் செல்வி இமையவர் நாடி
அகநிறை கருணை முகமுறு சீற்றம்
பொற்புற விளங்கு மற்புதம் கன்னி
மாமறைக் கூட்டில் வளர்ந்திடுங் கிள்ளை
மகிடற் காய்ந்து வானவர்ப் புரந்தாள்
✓
தண்டு வில்வாள் சக்கரம் சங்கம்
கொண்டு விளங்குங் கொற்றவை செல்வி
பூதவே தாளப் பொருபடை யுடையாள்
கான நாடி கருதுறு மடியர்
அஞ்சிடா வண்ண மருள்புரி சண்டிகை
✓
தென்றல் வாடை திகழிரு புறத்துஞ்
சாமரம் வீசத் தரளமா லிகைசூழ்
திங்கட் குடைக்கீழ்த் திகழ்தர வமர்வாள்
கற்சிறைக் கோட்டங் கடுகினர் சென்று
வழிப்பறி துறை வருபொருள் கொற்றம்
✓
செழிப்புற வருள்வாய் தேவியே! யென்று
புலிநிகர் மறவர் புலிப்பற் றாலி
மலியணி மறத்தியர் மறப்பலி தந்து
நிலமுற வணங்கி நின்றுறு காட்சியும்
வாகையுங் கோங்கு மணமலர் சொரிதலுங்
✓
கற்பர லுண்ட கவின்மணிப் புறாவின்
சேவலும் பேடுஞ் சென்றினி தமர்ந்து
கள்ளிபஞ் சிலையிற் களிப்புறக் கூவலுந்
திலதநீ ரிலலாச் சேற்றுநீர்க் கூவலும்
செங்கதிர் வெய்யோன் றெறலினாற் கரிந்த
✓
கள்ளியும் பாலையும் காரகில் மரமும்
பசித்தி வருத்தப் பருந்துங் கழுகும்
ஆனையு மானு மடர்செந் நாயு
மாவிபோ காம லலைதரு காட்சியுந்
தாங்கொணாப் பசித்தீத் தழற்படுங் காலை
✓
உயர்ந்தோர் தாமு முயர்வினை விடுத்து
இழிந்தோர் நல்கு மிழியுண வுணல்போல்
திரிதர வந்த செந்நாய் வாயின்
வாங்கிய நாவின் வடிதுளி நீரைத்
தேவாங்கு நக்குஞ் சிறுபுன் காட்சியும்
✓
கூர்த்தலைப் பரலுங் குவிமலை முரம்பும்
கார்ப்பரு வத்துங் கனலுரு வெப்பமும்
மன்னிய பாலை வன்பெருந் திணையும்
சூழக் கிடந்ததுஞ் சுடரொளி வெள்ளி
மலைவாய்த் தெய்வ மணிநிழற் காஞ்சி
✓
மரவேர்த் தோன்றி மலரொடு சாந்தும்
வாரி வீசி வருதிரைக் கரத்தால்
போற்றி வணங்கிப் பொலிவுட னிருபாற்
சிவதலம் பலவுஞ் செழிப்புற்ச் செய்து
கள்ளவிழ் சோலை கடிதினிற் புகுந்து
✓
அமர முனிவன் அகத்தியன் கொணர்ந்த
காவிரி கலக்குங் காஞ்சிமா நதியின்
அணிகெழு வடபா லமைந்தது மான