முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
பரிசில் வேண்டிச் செல்வரை நாடியது கூறல்4 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

பரிசில் வேண்டிச் செல்வரை நாடியது கூறல்

✓
செல்வரை மனதிற் றெய்வமென் றெண்ணிக்
கல்முள் நிறைந்த கானக மதனில்
ஆமாத் திரியு மதர்வழி கடந்தும்
வேழந் திரியும் வியன்மலை தாண்டியும்
ஆழ மிகுந்த வாற்றினை நீந்தியும்
✓
தேனினை நாடித் திசைதொறும் பறந்து
மலரினைத் தேடும் வண்டெனத் திரிந்து
முன்செய் வினையால் முழுப்பொருள் படைத்த
செல்வ ரில்லந் தெரிவுறக் கண்டவர்
தலைக்கடை கால்கள் தளர்வுற நின்று
✓
கன்ன லைங்கணைகள் கரங்களிற் றிகழ
மன்மதன் போர்க்கு மகிழ்வுற வேறுந்
தென்றலந் தேருஞ் சிறுமதிக் குழவியும்
வெளிப்படக் கண்டு விரகநோய் கொண்டு
கொச்சி மஞ்சளும் குடமலைச் சாந்தும்
✓
வசிய மருந்தும் மணமுறப் பூசி
கொங்கையு மாடையும் குலுங்குற நடந்து
நாடக நடித்தும் நல்லிசை பயின்றும்
கண்வலை வீசியும் காளையர் தமது
உளங்கவர்ந் தவர்த முறுபொருட் குவியலிற்
✓
காணியு மின்றிக் கறந்துறும் வாழ்க்கைப்
பாசிழை யல்குற் பரத்தை யரில்லம்
அவசமுற் றோடி யடைக்கல மென்றும்
உம்மை யல்லா லுயிரிலை யென்றும்
செம்பொனும் மணியும் சீர்பெறக் கொடுத்து
✓
மற்றவர்ப் புகழ்ந்து மகிழ்வுறச் செய்து
மழைதிகழ் மாட மஞ்சகத் தணைமேல்
அன்னவர் மார்பி னகலிடம் பெற்று
மலர்வா யமுத மகிழ்வுட னுண்டு
காம வின்பங் களிப்புறத் துய்க்கும்
✓
செல்வருன் வருகை தெரிதலின் பொருட்டுக்
கடவுள் வணக்கமும் கலைக்குரு வணக்கமும்
உன்பெரும் புகழு முவமையில் தலைவன்
தன்பெரும் புகழுஞ் சாருமா சிரியச்
சீர்மிகு விருத்தச் சீட்டுக் கவியோர்
✓
ஆளின் மூல மன்புற வனுப்பிச்
செல்வர்தஞ் சமயந் தெரிவுறக் கண்டு
அவர்பெருஞ் செல்வ மனைத்து முனக்கே
வந்தது போல மகிழ்ச்சிமீக் கூர்ந்து
நாவுற் றெழுந்த நனிசுவை மிகுந்த
✓
தேனூற் றெழுந்த செழுந்தமிழ்க் கவிதை
வானூற் றெழுந்த மழையெனப் பொழிந்து
நின்று வள்ளலை நேருறக் கண்டதால்
நன்றுசெய் புண்ணியம் நான்மிக வுடையேன்
இன்றிது வேளை யிடர்செயும் வறுமைப்
✓
பொல்லா விடத்தைப் போக்குற நின்றன்
அமுதமாங் கொடையை யளியுட னாடிப்
பெறுதற்கு வந்தேன் பெருந்தமிழ்ப் புலவன்
பொன்மனம் வைத்தெனைப் போற்றுக வெனநீ
முற்றுஞ் சொல்லி முடியா முன்பே
✓
புலவர்க் கீந்து புகழ்மிகப் பெறலே
நில்லா வுலகி னிலையென வறியாப்
பொல்லாச் செல்வர் புற்றினில் நாகம்
என்னச் சீறி யியைபிலா மொழியில்
“நூல்பல வுணர்ந்த நுண்மதிப் புலவீர்!
✓
வேளை தெரியும் விவேகமொன் றில்லீர்
விளைபொரு ளுள்ள வேளையை யறிந்து
மற்றோர் வேளை வரு”கெனக் கூறி
நில்லா தேகி நெடுங்கத வடைக்கப்
போன வுயிரும் பொலிவழி யுடலுமாய்
✓
நின்றுலை நீரி னெஞ்சகங் கொதிப்ப
ஊழினை யெண்ணி யுறுமெய்க் குறளில்
இரக்க விரக்கத் தக்கார்க் காணின்
என்றுவள் ளுவனா ரியம்புரை யறிந்தபின்
வழிவழி யாக வண்டமிழ் புரக்குங்
✓
கொடைமிகு செல்வக் கொழுங்குடிப் பிறந்து
ஈகென வருந்தி யியம்பா முன்பே
குறிப்பறிந் துதவுங் கொள்கையின் மிகுந்த
வள்ளலை நாடி வழிகுழி யாகக்
காற்றினில் விரைந்து கடுநடை கொண்டு
✓
பழுமர மதுதேர் பறவையிற் போல
வந்தனை நொந்து வழிதனி லன்ப!
நல்லோர் வறுமையில் நலிவுற வென்றும்
பொல்லார் செல்வம் பொருந்துதல் முறையோ
இருவே றுலகத் தியல்போ கொடிது.