முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
குறிஞ்சி நிலம்9 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

குறிஞ்சி நிலம்

✓
செங்கேழ் முருகன் சிறந்தமர் காணியாய்க்
குறவரும் மருளும் குன்றத் துச்சியில்
அவிர்துகில் புரையு மருவியுஞ் சுனையும்
✓
குறவர்தே னெடுத்தலும் குன்றக் குறத்தியர்
வரைத்தினை குற்றி மகிழ்வுறப் பாடும்
வள்ளைப் பாட்டின் மங்கல வொலியும்
குறக்குடிக் கன்னியர் குளிர்தினைப் புனத்தில்
ஆயோ வென்னும் அழகிய மொழியும்
✓
மலையெதிர் சிலம்ப வந்திடு மொலியும்
சேணோன் வீசிய கவண்கல் மீதுறக்
கறையடி சீறுங் கடும்புலிக் குழாமும்
சந்தனந் தேக்கின் றழைவிரி கிளையில்
கிள்ளை கொஞ்சுலுங் கிளர்மயி லாடலும்
✓
வேங்கையும் பிணாவும் மெய்யுறக் கூடி
வாய்வாய் வைத்து மகிழ்வுறுங் காட்சியும்
தினைப்புனங் காத்த சிறுமியர் நண்பகல்
அருவி யாடியு மகஞ்சுனை மூழ்கியும்
கொய்தளிர்க் குறிஞ்சிக் கொழுமலர் கொய்தும்
✓
காந்தள் பறித்தும் கண்ணிகள் புனைந்தும்
கூந்தலிற் சூடியும் குளிர்தே னுண்டும்
சிலம்பெதிர் கூவியும் திகழ்ந்திடு காட்சியும்
மண்டியே கிடக்கும் மலைநிலக் குறிஞ்சியும்