முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
சென்னி மலையின் சிறப்புறு மகிமை6 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

சென்னி மலையின் சிறப்புறு மகிமை

✓
முழுதுணர் புலவ! முன்னையூழ் வலியால்
வறுமை யெனைமுன் வந்தடர்ந் திடலும்
உறுமெய்ப் பிணியு முற்றிட வவற்றால்
பசியும் வலியும் படுதுயர் செய்ய
✓
அத்துய ரிரண்டு மகற்றிட வேண்டிச்
செல்வர் மனைகள் தேடிநின் றிரந்தும்
மருத்துவர் பலரின் மனைமருந் துண்டும்
அன்னவை யிரண்டு மகன்றில வாகிக்
காற்றுந் தீயுந் கலந்தது போலப்
✓
பின்னுமென் மேலும் பெருகுற வளர்ந்து
தள்ளாத் துயர்பல தாஞ்செயுங் காலைச்
செய்வ தொன்றுந் தேர்ந்தறி கிலனாய்க்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங் கொடிது இளமையில் வறுமை
✓
அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
என்றுநம் மவ்வை யியம்பிய பாடல்
உண்மையை யுணர்ந்து ஒருநா ளிரவில்
விதியினை நினைந்து விழிமூ டாமல்
படுதுயர் நொந்து படுத்திருந் தேற்குத்
✓
தீராத் தீவினை சேர்ந்துடல் பற்றிக்
கழுவா வொன்றினு நழுகா தாகிப்
பேரா மிடிநோய் பிணிப்புறுங் காலை
தன்னுயி ரிடும்பை தாங்கா தாயின்
கங்கை யமுனை நருமதை சரஸ்வதி
✓
பொங்கு காவிரி புகழ்பெருங் குமரி
ஒன்றிநீர் மூழ்கி யுயிர்துறந் திடுதல்
தக்க தென்று தகுநெறி கூறுஞ்
சிவபுரா ணப்பொருள் தேர்ந்துரை செய்த
புலவரென் னிளமையிற் புகலுரை யென்றன்
✓
நினைவிற் றோன்ற நெஞ்சக மகிழ்ந்து
அந்நெறி நன்னெறி யாமெனத் துணிந்து
சீல மறிந்தருள் தெய்வமே போலக்
கால மறிந்துயிர் களியுறப் பெருகும்
பூவிரி சோலைக் காவிரித் தாயை
✓
மனதினி லெண்ணி வடதிசை நோக்கிச்
சென்றேன் வழியிற் சேணகல் வானின்
கொண்டல் படியுங் குவடுகள் விளங்கத்
தண்டலை சூழ்ந்து தலைநிமிர்ந் தோங்க
வண்டினம் பாட மயில்நட மாடத்
✓
தென்றல்வந் துலவத் தெய்வநா தங்கள்
ஓமென வொலிக்க வோங்குயர் வேங்கை
பொன்பூச் சொரியும் பொலிவொடு விளங்கப்
பறவையும் விலங்கும் பரந்தொலி செய்யச்
சாந்தமு மகிலுந் தண்மணங் கமழத்
✓
தெய்வ மணஞ்சார் திசையெலாம் விளங்க
மஞ்சடை கிடக்கு மலையிருஞ் சாரற்
குன்றக் குறவர் கொடிச்சியர் தம்முடன்
மலையிருஞ் சுனையில் மகிழ்ந்துநீ ராடி
மலைமிசைச் செவ்வேள் மலரடி வாழ்த்தித்
✓
தேன்குட மெடுத்துச் சென்றிடுங் காட்சியும்
செந்தீக் காந்தட் செம்மலர் மாலையுங்
காவி யுடையுங் கரந்திகழ் வேலுந்
திகழ மலைவாழ் சேந்தனைப் பாடி
யச்சமுண் டாக வாடிமுக் கால
✓
நிகழ்ச்சிக ளனைத்து நிசமுறக் கூறி
யருளா டியர்செலு மற்புதக் காட்சியும்
வயிற்றிடைக் குட்டி வலிவுறப் பற்றச்
செம்முக மந்தி செழுமர மேறித்
தாண்டிக் குதித்துத் தான்செலுங் காட்சியும்
✓
வழிச்செல் லடியவர் வளர்கரத் துள்ள
தெங்கங் காயைத் திடுக்குறப் பிடுங்கிக்
குடந்தலைக் கொண்ட கூன்கிழ வன்போற்
றலையிற் கடுவன் றான்சுமந் தேகுங்
காட்சியு மலிந்து கலையுணர் பெரியோ
✓
ருள்ளம் போல வுயர்வுறு மலையைக்
கண்டேன் றலையிற் கரங்கள் குவிந்தன
காந்த மிரும்பைக் கவர்ந்தது போலவும்
சிற்றிலை நெருஞ்சிச் சிறுபொன் மலரைக்
கதிரோன் றன்முகங் கவருதல் போலவும்
✓
என்னுளங் கவர்ந்த வெழின்மலைக் காட்சியிற்
றலையுறு பாரந் தானகன் றாற்போல்
உறுபசித் துயரு மோவிலாப் பிணியும்
சிறிது சிறிதாய்த் தீர்ந்தன காணேன்
அன்பு மின்பு மகந்தனில் பெருகு
✓
மற்புதங் கண்டே னாங்குறும் பெரியரை
இம்மலைப் பெயரு மிதன்மகி மையுநீர்
தெரிதர வெனக்குச் செப்புதல் வேண்டும்
என்றியான் வேண்ட வியையுறும் பெரியர்
இக்குன் றத்தின் எழில்மிகு முகட்டில்
✓
பச்சை மயிலிற் பரஞ்சுடர் முருகன்
உதய காலத் தொளிரிளம் பரிதி
பசுங்கடல் விளங்கும் பான்மை போல
விரும்பிவீற் றிருந்து வேண்டுநர் தமக்கு
வேண்டுவ வேண்டுவ வேண்டியாங் கருளும்
✓
சென்னி மலையிது சேர்வுறும் வடசார்
சரவண தீர்த்தஞ் சார்ந்து நீராடி
யன்பர் மனம்போ லமைவுறும் படிகள்
ஒவ்வொன் றாய்க்கடந் துயர்மலை யேறி
அறுமுகங் கரந்த வொருதிரு முகமும்
✓
கடம்பணி மார்புங் கரந்தனிற் றண்டுந்
திகழவீற் றிருக்குந் திருமலைக் கந்தன்
குஞ்சித நிலைத்த குளிர்மலர்ப் பதங்கள்
கண்ணிணை குளிரக் காண்பவ ருலகில்
வறுமை தீர்வர் வளமுற வாழ்வர்
✓
வேதனை மிகுந்த வியாதிகள் தீர்வர்
கலைஞா னங்கள் கைவரப் பெறுவர்
நீண்ட வாழ்நாள் நிலையுறப் பெறுவர்
இம்மையு மறுமையு மிரும்பய னளிக்கும்
நன்மகப் பெறுவர் நாற்பொருள் பெறுவர்
✓
என்று மலைநல மியம்பின ரதனால்
ஓங்குயர் மலையி னுச்சியின் மீமிசைப்
பருவமே கம்பெய் பஃறுளி திரண்டு
மணியும் பொன்னும் மலர்களும் வாரிப்
பெருமலை யாரம் பிறங்கிய தென்ன
✓
வீங்குநீ ரருவி வீழ்வுறுந் தாழ்வரைப்
பரமா னந்தப் பழங்கடல் போன்ற
சீதப் புனலிற் செழுமலர் நிறைந்த
சரவணப் பொய்கை சார்ந்துநீ ராடி
மலைமிசை யேற மனமிக விரும்பி
✓
முத்திசோ பான முறைமையிற் றிகழுஞ்
சித்திரப் படிகள் சென்றுசென் றேறிச்
சந்தனஞ் செண்பகந் தருநிழற் புன்னை
சிந்துரம் வில்வஞ் செச்சை வேங்கை
வானுற வளர்ந்து வான்முகில் சூழத்
✓
தேனடை கிடக்குஞ் செழும்பொழில் நடுவண்
குளிர்மதி தவழுங் கோபுரம் விளங்குஞ்
செம்பொற் கோயி றிகழ்மணித் தவிசி
லுள்ளுதோ றுள்ளுதோ றுளங்களி கொள்ளக்
காண்டொறுங் காண்டொறுங் கண்களி கொள்ள
✓
ஒளிப்பிழம் பாகு முதயஞா யிற்றின்
மலைமிசை யெழுமுழு மாமதி யதனின்
அழகெலாந் திரண்டோ ரற்புதம் பெருக்கும்
மணங்கமழ் தெய்வத் திளநலம் பொலிய
உலகுயிர்த் தொகுதி யுய்ந்திடற் பொருட்டா
✓
யருளுருக் கொண்ட வண்ணல் செவ்வேளின்
சேயொளி மேனியுஞ் செஞ்சுடர்க் காந்தள்
பொலிதரு சென்னியும் புதுநில வெறிக்கும்
முழுமதி முகமும் முழுமதி யுதயத்
தலர்ந்தசெங் குமுத மனையகண் களுஞ்சீர்
✓
பொலிந்தசெவ் வாயும் புன்முறு வலும்பொற்
குன்றிரண் டனைய குவிதடந் தோள்களும்
அண்ட வாணர்த மருந்துயர் மாற்றும்
தண்டுறு கரமுந் தனியிடை சார்த்திய
இலங்கெழிற் கரமு மேர்திகழ் மலயச்
✓
சந்தன மணக்குந் தடவரை மார்பும்
மார்பில் விளங்கும் மழைநெடுங் கானிற்
காரின் மலர்ந்த கடம்பணி மாலையும்
அரத்தம் பூப்போ லழகுற விளங்கும்
செந்நிற வாடை திகழ்தரு மிடையும்
✓
பொய்வழி புகாத மெய்வழித் தொண்ட
ருய்வுறப் போற்று மொலிகடற் பூத்த
பவள நிறமார் பதமலர்த் துணையும்
என்று மிலதோ ரின்பங் கிளர்வர
நின்ற கோலம் நேர்படக் கண்டேன்.
✓
வேலும் மயிலும் விரிசிறைச் சேவலும்
வேழமு முன்பில் விளங்குதல் கண்டேன்
கண்டு விரைவிற் கரஞ்சிரங் குவிய
நின்று தொழுது நிலமுற வீழ்ந்து
எண்வகை யுறுப்பு மிருநிலந் தோயப்
✓
பன்முறை வணங்கிப் பார்தனை மறந்து
நின்ற நிலையில் நேர்பட வெழுந்து
தண்டொரு கரத்திற் றாங்கிவீற் றிருக்கும்
சென்னிமா மலைவாழ் செம்பொருள் முருகா!
அடியவர் துயரம் அகற்றிடுந் தீரா!
✓
கடிமண மாலைக் கடம்பணி மார்பா!
மணிமயிற் குமரா! மலைகொழு வள்ளிக்
கொடிபடர் கொம்பே! குஞ்சரப் பிடிதோய்
வளர்புய மலையோய்! வளர்பிறை யணிந்த
செஞ்சடைப் பெருமான் திருநுதல் விழியில்
✓
வெளிப்பட் டும்பர் விண்ணகம் புரந்தோய்!
அஞ்சிடா வணமெனை யாட்கொள வேண்டும்
தனக்கு நிகராய்த் தானே விளங்கும்
நின்பதி னாறு நிகரிலாப் பேர்கள்
அனைத்து மென்று மன்புறச் சொல்லி
✓
மிடிதுயர் பகைபிணி மேவா வண்ணம்
என்று மின்ப மின்றுபோ லெய்தி
நின்றிரு வடியி னீழலில் யாமும்
வழிவழிச் சுற்றமும் வாழ்வுற வருள்வாய்
என்றியான் வேண்டி யிருந்திடும் போழ்தில்
✓
அந்தணர் மரபி னருச்சக னொருவன்
நீறுஞ் சாந்தும் நீள்மலர் மாலையும்
கையுறத் தந்தென் கண்களி கொள்ள
என்முக நோக்கி யிம்மலை யுச்சி
வள்ளிதெய் வப்பிடி வாழ்பெருங் கோயி
✓
லுள்ள ததனை யுவப்புடன் சென்று
கண்டு வணங்கிக் கருதிய பெறுவை
என்று மொழிந்தா னிணையடி வணங்கிச்
சென்றே னுச்சித் திருவளர் கோயில்
பொன்றிகழ் மணியிற் பொலிபூந் தவிசில்
✓
மலைவா ழெயினர் மன்னவன் காட்டில்
வளமுற வளர்த்த வள்ளியங் கொடியும்
கற்பக நாட்டுக் காவலன் செல்வி
பொற்புறு மமுதப் பொலம்பூங் கொம்பும்
தாமரை மலருந் தண்கழு நீரின்
✓
பூமல ருங்கை பொலிதர வேந்தி
மதிமுகம் பொலிய வலமிட மாக
நின்றுயிர்க் கருளு நிலையினைக் கண்டு
அற்புதம் பெருக வார்வமுற் றோடி
வணங்கித் தொழுது வாழ்த்திநின் றிருந்தேன்.