முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
புலமைத் திறம்2 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

புலமைத் திறம்

நிலைமண்டில ஆசிரியப்பா✓
மணிவளர் கடல்சூழ் மாநில வளாகத்
தணிவளர் சாந்த மருந்தமிழ் தென்றல்
மணமிகும் பாண்டி மகள்திரு முகமாம்
பொன்றிகழ் கமலப் பொய்கையங் கோட்டுத்
தன்னிய ரமுதத் தண்மதி தழீஇய
மாட மோங்கிய மலிபுகழ்க் கூடலிற்
✓
பாடல் சான்ற பளகறு சிறப்பின்
பிறைமுடி யணிந்த கறைகெழு மிடற்றோன்
ஆல வாயின் அவிர்சடைக் கடவுள்
தலைவ னாகத் தன்னுடன் குழீஇய
புலவரே ழெழுவரும் புலமுற வாய்ந்த
✓
தேனுறை சங்கத் தீந்தமிழ் நூலாம்
பழந்தமிழ் நாட்டின் பண்பும் வளமும்
இயல்வர லாறு மெழில்பெறக் காட்டிச்
சேய்நோக் காடியிற் றிகழ்தரு கின்ற
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
✓
செய்வதுந் தவிர்வதுந் தெரிவுறக் கூறும்
நாலடி முதலா நற்கீழ்க் கணக்கும்
எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யென்னும்
ஒல்காப் பொருள்மிகு தொல்காப் பியத்தொ
டறுபது சூத்திரத் தன்பினைந் திணையும்
✓
ஐங்கா வியங்களு மறிவுறப் பயின்று
பெருவிளை யாடற் றிருவிளை யாடலும்
தெய்வ மணக்குஞ் செய்யுள்க டோறும்
அரிய பொருண்மிகு பெரிய புராணமும்
நச்சிய பொருள்சேர் நளினமிக் குடைய
✓
கச்சியப் பன்செய் கந்தபு ராணமும்
இம்ப ருலகிற் கின்சுவை யமுதாங்
கம்பர்செய் நூலுங் களியுறப் பயின்று
முத்தி யளிக்கு மூவர்தே வார
முதற்றிரு முறையு முரணிலா ஞானச்
✓
சந்தான குரவர் சாத்திர நூல்களும்
செந்தூர் முருகன் றிருவருட் பொலிவுடன்
பாண்டித் தமிழ்வளம் பழுனிக் கிடக்கும்
குமர குருபரன் கொழுந்தமிழ் நூல்களும்
கற்பனைக் களஞ்சியக் காவியப் புலவன்
✓
சொற்புகழ் கொண்ட தூய்தவ மாமுனி
சிவப்பிர காசன் செழுந்தமிழ்ப் பனுவலும்
ஐயமுந் திரிபு மணவுமில் லாமல்
தெளிவுறப் பயின்ற தீந்தமிழ்ப் புலவ!
பாற்கட லமுதம் பரவுதல் போல
✓
நாற்பொருள் விராவு நற்காவி யச்செயுள்
பொழிப்பு மகலமும் புகலுறு நுட்பமும்
அறநூல் விதியு மதிலுறு விலக்கும்
உயர்ந்தோர் வழக்கு முறுநூல் வழக்கும்
வண்டமிழ் மரபும் வடநூன் மரபும்
✓
முன்னுறு பழமையும் பின்வரு புதுமையும்
ஐந்திலக் கணத்தி னமைதியும் பயனும்
தோன்ற விரித்துச் சொற்பொரு ணயங்கள்
விளங்குற வேது மேற்கோள் காட்டிக்
கேட்டோர் மேலுங் கேட்குறு மாறு
✓
அவைக்கள மேறி யாற்றொழுக் கேபோல்
விரிவுரை யாற்றும் மேன்மைசா லறிஞ!
நூலுரை போதகா சிரியரின் றிறங்கள்
மேலுறப் பெற்று விளங்கா சிரிய!
எல்லாப் பொருட்கு மியல்குண முணர்ந்த
✓
வல்லோர் குற்றம் வரும்வழிக் காட்டுவர்
வல்லோ ரறிந்து வழங்கிய குற்றம்
அல்லவென் றுரைப்ப ததுவே புலமை
என்றகத் தியனா ரியம்பின ராதலின்
சீர்மிகு மறிஞர்செய் செய்யுளிற் குற்றம்
✓
ஆக்கிப் பின்ன ரலவெனக் கூறும்
வாதத் திறமை வளமுறப் பெற்ற
அகடித கடன வாற்றலு முடையாய்!
சேரஞ் சோழம் பாண்டிய மென்னும்
மூவகைச் செய்யுள் முறைநெறி கொண்டு
✓
காவிலை யாடுங் கருங்குயி லனைய
தேனினு மினிய செஞ்சொற் கவிதை
நாலும் பாடி நானிலத் தறிஞர்
செய்யு ளின்பம் செவிவழிப் பருகி
மகிழ்வுறக் கூறும் வாழ்வுசால் கவிஞ!
✓
அகப்பாப் புறப்பா வாமிரு பாவில்
புறப்பா வதனிற் பொலிவுற விளங்கும்
கடவு ளமரர் கனம்பெறு மக்க
ளாகிய தலைவர்க் கமைந்துள சிறந்த
ஒளியு மாற்றலு மோம்பா வீகையும்
✓
அளியு மென்றிவை யாய்ந்துறப் பாடும்
பாடாண் டிணையிற் பாவல் லோயே!
நில்லா வுலகில் நிலைபெறும் புகழ்செய்
மும்மணிக் கோவையும் நான்மணி மாலையும்
மங்கல முதலா மருவிய பொருத்தமும்
✓
எழுத்தசை முதலாம் யாப்புறு விதியும்
சொற்பொரு ளணியுந் துலங்குற வளமாய்
இம்மெனு முன்னே இயற்றிடுந் திறலோய்!
பூவு மணமும் பொருந்துறல் போல
வியல்புறு மிலக்கண விலக்கிய மென்னுங்
✓
கலைக்கடல் கடந்துங் கலிக்கடல் கடக்கும்
வகையறி யாது மயங்கினை யந்தோ!