சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
முருகன் புகழ் பாடுதல்14 / 16
1காப்பு2புலமைத் திறம்3புலவர் வறுமை4பரிசில் வேண்டிச் செல்வரை நாடியது கூறல்5நல்லோர் வறுமையும் நலந்தரும் என்னல்6சென்னி மலையின் சிறப்புறு மகிமை7அருளாடியர் மடத்துத் தலைவர் புலவருக்குப் பரிசில் நல்கியது கூறல்8பூந்துறை நாடு9குறிஞ்சி நிலம்10முல்லை நிலம்11மருத நிலம்12பாலை நிலம்13சென்னிமலைமேல் செவ்வேளைத் தரிசித்தல்14முருகன் புகழ் பாடுதல்15செவ்வேள் பரிசில் நல்குதல்16சென்னிநகரச் சிறப்பு
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
முருகன் புகழ் பாடுதல்
✓
கன்னியம் பிகைசேய்! கார்த்திகை புதல்வ!
✓
சென்னியங் கிரியிற் சேர்திரு முருகா!
பொன்னியந் துறைசேர் பூந்துறை நாட!
ஆரந் திகழு மணிகெழு மார்பின்
வீரவா குப்பேர் வீரனே முதலாம்
வீரர் தம்முடன் மேவுறுந் தலைவ!
✓
உறுநினை வினிலு முளஞ்சுடும் பொல்லா
வறுமைநோய் பிணிப்ப வாட்டமுற் றயர்ந்தேன்
பாடும் புலவர் படுமிடர் தீர்த்து
நாடும் வாழ்வு நனிமிக வருளும்
புகழ்மிக வுடைய புண்ணியக் கடவுள்
✓
நீயே யாகலின் நின்புகழ் பாடி
யுறுதுயர் தீர வுனைவந் தடைந்தேன்
சொல்லுறு மறையுஞ் சொல்லுதற் கரிய
வெல்லையி னின்புக ழியம்புதற் கரிதே
யெனினு மன்பி னிசைக்குவ னீயே
✓
மூவிலைச் சூல முதற்பெருங் கடவுள்
மேவுறு நெற்றி விழிவரு பொறியாய்த்
தோன்றிக் கயிலைத் தொல்வரை யடுத்த
வடவிம யச்சார் வளர்சர வணஞ்சூழ்
தடமலர்ப் பொய்கை தன்னிலா றுருவாய்
✓
அறுவர் தருமுலை யமுதினை யுண்டு
நறைவிரி கமல நறுமலர் வளர்ந்தனை
இமையா முக்க ணெண்டோட் செல்வ
னம்மை யப்ப னருளிய வாக்கால்
அரன்மனைக் கிழத்தி யம்பிகை கையா
✓
லார்வமுற் றணைப்ப வறுவே றுருவுந்
திரண்டொரு வடிவாய்த் திருமுக மாறும்
ஆறிரு புயமு மணிகொளத் திகழ்ந்தனை
மண்ணுறு கடலும் வானமு மலையும்
நண்ணி யாடல் நடுக்குறச் செய்தனை.
✓
விண்ணோர் சினந்தமர் மேவிடத் தோல்வி
நண்ணுறச் செய்தனை நடுங்கிய தேவர்
அசுரர்செ யச்ச மகன்றிடத் தம்மைக்
காக்கும் வலிமிகு கடவுணீ யென்று
தேறினர் தேவ சேனா பதியென
✓
வாழ்த்தி வணங்கி வரிசை களாகத்
தீத்தழற் கடவுள் செஞ்சுடர்க் கோழியும்
மாத்தரு வேந்தன் மஞ்ஞையுந் தென்றிசைக்
கோமான் மறலி கொடுந்தகர்க் கடாவும்
கொடுத்தன ரவரும் கூடிய பிறரும்
✓
வச்சிரந் தோட்டி வானுதி யம்பு
வடிவேல் மாலை மணிமழுத் தண்டம்
ஆகிய பிறவு மன்புறத் தந்தனர்
அழகுறு மனைய யாவையு மேற்றுப்
பெரிதுள மகிழ்ந்து பேரருள் செய்தனை.
✓
தேவர் பெருந்துயர் தீர்த்திட வேண்டப்
பவளம் பூத்த பசுங்கடல் நாப்பண்
தவளப் பளிங்கின் றடந்திடர் மேய
மயேந்திரத் திருந்து மன்னுயிர் தின்று
விண்ணகம் புடைத்து விழைபொருள் கவர்ந்து
✓
வானவர் குழாத்தை வல்விலங் கிட்டுச்
சிறைவைத் தொறுத்துத் தீத்தொழில் புரிந்த
கொன்றுண லஞ்சாக் கொடியசூர் முதல்வனும்
அசுர வெள்ளமு மடுசிறைப் புட்பேர்க்
குன்றமுங் கடலுங் கொன்றுயிர் குடித்துப்
✓
பவளச் சிவப்புப் பாசிலைக் கூர்மையும்
தழற்கால் நுனியுந் தாரைக் ளெட்டும்
மந்திர வலியும் மலிந்தழ குற்ற
செஞ்சுடர் மணிவேற் றிருக்கரங் கொண்டனை
வன்சிறை யுற்ற வானவர் தம்மை
✓
விண்குடி யேற்றி விளங்குறச் செய்தனை
அசுரர்செய் துயர மகன்றினி திருக்க
வாசவன் றனக்கு மணிமுடி சூட்டினை
அமுதமுந் தருவு மவிர்மணி யினமும்
மேவுறப் பெற்ற விண்ணவர் தலைவனும்
✓
அயிராணி தேவியு மன்புட னல்கத்
தெய்வப் பிடியைத் திருப்பரங் குன்றிலும்
வள்ளி யென்னும் வளர்குறக் கொடியை
வள்ளியஞ் சிலம்பிலு மகிழ்வுற மணந்து
களவுகற் பென்னுங் கைகோ ளிரண்டுந்
✓
தமிழ்நூல் மரபின் சால்பென விளக்கினை
நளிர்கடல் சூழு நானிலத் துயர்ந்த
குளிர்வரை யுலகக் குறிஞ்சிக் கிழவ!
மணிமருங் கொலிப்ப வளியென விரைந்து
சினத்தீ தெறிக்கச் செங்களம் புகுந்து
✓
அவுணர்த் தேய்த்த வடல்மிகு கோட்டுப்
பிணிமுக வேழப் பிடர்த்தலைப் பெரும!
தானவர் மந்திரந் தாங்கொடு வளர்த்த
மாக்கடல் நடுவண் வலிகவர் மாவினை
அவுணர் நல்லவ மடங்குற வீழ்த்திய
✓
திறல்மிகு செவ்வேற் செவ்வேட் சேயே!
நிலநீர் தீவளி நெடுவளி யென்னு
மைம்பெரும் பூத மடைவுற வகுத்தனை
பூதத் துணர்வாய்ப் பொலிந்தனை, பூதத்
தகில வுலகு மாயினை யெண்ணில்
✓
சமயத் தவருஞ் சார்பொரு ளாயினை
மாதவ ருள்ள மதிவிளக் காயினை
யாறுங் குளனு மாற்றுறு நடுவும்
மலையுங் கந்துப் வாழ்த்தினர்க் கருள்குவை
மலையமா தவத்தோன் மகிழ்வுறப் பொருணூல்
✓
தெளிதர வுணர்த்திய தென்றமிழ்ப் புலவ!
ஆலவா யிறைவ னருளிய களவியல்
உரைகளி லுண்மை யுரையியல் புணர்த்தினை
ஆவண வீதி யருந்தமிழ்க் கூடல்
மேற்பரங் குன்றில் விளங்குறு செல்வ!
✓
நந்தா ரலைவாய்ச் செந்தூர்க் கடவுள்!
மாவினந் திகழு மாவினங் குடியாய்!
ஏரகச் செங்குன் றினிதமர்ந் துறைவோய்!
தளிர்புரை மேனித் தையலர் குழுவில்
குளிர்காந் தட்பூக் குன்றுதோ றாடல்
✓
நனிவிரும் பியவேள்! நளிர்சிலம் பாற்றின்
அழகமர் சோலைப் பழமுதிர் சோலை
மலைமகிழ்ந் துறையு மலைமகள் புதல்வ!
அருமறை யுணர்வு மாகமத் தேர்வும்
முத்தீச் செல்வமும் முறையுறப் பெற்ற
✓
அந்தணர் மணமல ரங்கையி லேந்தி
ஆயிரம் பேரு மன்புறச் சொல்லி
யருச்சனை புரிய வகமகிழ்ந் தருளும்
கடம்பமர் கந்தக் கடவுளிவ் வுலகில்
புலவர் சிங்க மெனப்புகல் கீரன்
✓
ஆற்றுப் படைகேட் டருள்திருச் செவியில்
என்புன் மொழியு மேற்றருள் செய்வா
யென்று துதிக ளியம்பிய பின்னர்
எல்லை யில்லா விருந்துயர் செய்யும்
பொல்லா வறுமைப் பொருகடல் வீழ்ந்து
✓
வாத முதலாம் வலிவிடப் பாந்தள்
கொல்லாத் துயர்செய் கொடுமையாற் றாது
நின்றிரு வருளாம் நேசப் புணைகொடு
இன்பவாழ் வென்னு மிருங்கரை யேறி
உய்தி பெறுதற் குன்றிரு வடிகட்
✓
காயிரங் காலெ னன்புறு வணக்கம்