கோங்கமெனுங் கன்னிமுலைக் கொங்குமுகி ழரும்பக்
கொழுநனெனும் வேங்கைமலர்ப் பொன்சொரிந்து விரும்பப்
பாங்குசெம்பொன் வாங்குகைபோற் காந்தண்முகிழ் விரியப்
பாந்தவர்கள் போல்வண்டு தூதுசொல்லித் திரிய
மூங்கிலெனுங் கிளைகண்முத்த மூரல்தனை வழங்க
முறைமுறையே வாத்தியம்போன் மும்மதமா முழங்கத்
தேங்கமழு மலர்ப்பணைகள் தாங்குபொழி லோங்கும்
செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே.
சந்திதொறுஞ் சந்தமுத்த மீந்தெனக்கால் வீசும்
சாதிகிளை மீதுகிளி வேதமுறை பேசும்
மந்திகனி கொண்டுமத தந்தியின்மேற் சாடும்
வானுலகின் பூவெடுத்துக் கானவர்கள் சூடும்
அந்திதொறு மைந்துவகைத் துந்துபிகண் முழக்கும்
ஆற்றொலிதென் காற்றொலிவான் மேற்றிசையைப் பிளக்கும்
செந்தமிழ்மா முனிமகிழ்ந்து சந்ததமும் போற்றும்
செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே.
பூவின்மதுக் குடித்துண்டு மேவியிசை படிக்கும்
பொங்குமத தும்பியும்பர் மங்குறனைப் பிடிக்கும்
காவின்மிசை யெங்கள்குலப் பாவையர்கள் கூட்டம்
காத்திருந்து வேன்முருகர் பார்த்தருளு நாட்டம்
வாவிதனிற் றினங்குவளைப் பூவின்முகி ழரும்பும்
மண்ணவரும் விண்ணவரு நண்ணிமிகத் துதிக்கும்
தேவர்முதன் மூவர்களு மாவலொடு போற்றும்
செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே.
மண்ணின்வரு கண்ணெனவே வந்துவெளி பார்க்கும்
வானுலகுக் கேறிவரு மேணியெனச் சேர்க்கும்
தண்ணளியால் மண்மடந்தை தன்கையென வளர்ந்து
தண்ணிலவின் மறுத்துடைக்குந் தகைமையெனக் கிளர்ந்து
விண்ணுலவும் பெண்ணினங்க ளேறிவிளை யாட
மேன்மையென வோங்கியெழில் வாய்ந்தகழை யாடும்
திண்ணமுறும் யானைமதம் வீழருவி யிறைக்கும்
செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே.
ஆனைமருப் பென்னும்வெள்ளி வேலியுடை துதைப்பார்
அதனுடவில் வேடர்பொன்போற் செந்தினையை விதைப்பார்
கானமரை பாய்ந்தெழுந்து வானினதி தோயும்
கார்முகிலை வேழமெனக் கோளரிமேற் பாயும்
தானமத மாமுழக்கக் குன்றமெதி முழக்கும்
தருகுறவர் வில்லொலியுஞ் சில்லொலியுங் கிளக்கும்
தேனுலவு மஞ்சரியிற் சஞ்சரிகம் பாடும்
செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே.
குரவமெனும் பாவைதனக் கழகுமணம் பேணிக்
குறவர்சிறு மகளிர்நவ மணிகளதிற் பூண
அரவமது பணம்விரித்து மணிவிளக்குப் பிடிக்க
ஆவலுடன் மயினடிக்கப் பூவைகவி படிக்க
விரவிமுகின் முழவதிர மதுதாரை வார்க்க
வேட்டமண வாளனென மென்றளிர்க்கை யேந்தித்
திரமுறவே தினந்தோறுங் கலியாணஞ் சிறக்கும்
செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே.
கனகவரை வில்லிதரு குமரனெனச் சொல்லிக்
கயிலைமலை தந்தன்பேர் பயிலுமலை யம்மே
சனகர்முத லோர்வணங்கும் பெருமைமலை யம்மே
சதுமறைகண் முறையிடுஞ்சொல் நிறையுமலை யம்மே
பனகமணி யிரவியென விரவுமொரு பாலில்
பணைமணிக ணிலவெனவே யுலவுமொரு பாலில்
தினகரன்றேர்க் குதிரைபுன லுண்டுதகை யாறும்
செங்குவளைத் திருமலைதா னெங்கண்மலை யம்மே.
முனிகள்தவ சிருக்கவொரு பான்முனிகள் திரியும்
முத்திருக்கும் பெற்றிருப்பார் முத்திருக்குங் கிளையார்
வனிதையர்கள் கற்புநெறி வனிதனையே நிகர்க்கும்
வண்டொலிக்குந் தண்டலைக்குள் வண்டொலிக்குந் தடத்தில்
கனிவுகொடு மேல்பாலிற் கனிகையெழு பேர்கள்
காத்திருப்பர் நீலமலர் பூத்திருக்கு மம்மே
பனிமதியந் தவழ்சடையான் பனிபாகத் துடையான்
பழங்கயிலைக் கிணையெங்கள் செழுங்குவளை மலையே.