சீர்கொண்ட தென்மயி லாசல நாடென்ற
பேர் கண்டு நாடிப் பெருங்கடல் நீர்மொண்டு
வார் கொண்டல் விண்ணடுத்துப்-புவி
யோரஞ்ச மின்னல் விடுத்-ததி
ராக இடி இடித்து - மிக்க
மழை முத்து மாலை விழவைத்ததாலே வழியற்றுஞாலம் குழிவுற்றுமேலே
வருநதியின் காட்சிசொலும் வகையறியேனே
மலைவிட்டு நீங்கிப்பொன் னலைகொட்டி மூங்கிலின்
குலமுற்றும் வாங்கிப்பன் மலரிட்டு வேங்கையின்
தலைமுட்டு நதி வெள்ளமே - ஏரி
குளங்குட்டை யவையுள்ளுமே - இரு
நில முற்றும் குதி கொள்ளுமே - எங்கும்
உழவர்கள் ஓடி விழவு கொண்டாடித் தொழுதெய்வம் நாடிக் கழனிகள் தேடிக்
கன எருதின் ஏர்பூட்டி நிலமுழுவாரே
பதனிட்ட நிலமுற்றும் விதை நட்ட தயல் நட்டுக்
களைவெட்ட வருமாதர் மதியொத்த முகம்நாண
மறை மொட்டு விரிவெய்தலும் - அவர்
விழியொத்த கருநெய்தலும் - நத்தை
தருமுத்து நகை செய்தலும் - கண்டு
காலால் மிதித்ததன் மேலே பகைத்தவர் போலே
எடுத்தரி வாளால் அறுத்தெறி
கரைசேர்ந்த களைக்குலத்தில் வண்டு பண்பாட
எருவைத்து வரநித்தம் பிறையொத்து வளரப்பின்
கதிர்விட்டு முதிரத்தன் தலைநட்டு வளையக்கண்
டகமுற்ற மிகுமாசையால் - நிலம்
விளைவுற்ற தொகையேசுவார் - அறு
வடைசெய்ய விடைசெய்குவார் - பின்னர்க்
குப்பல்செய் ததுமோதி நெற்பதர் கெடத்தூவிச் சுப்பு
ரத்தினம் ஓதும் நற்கவிப் பொருள் போலும்
மலைபோல் நெல் வீடுவர இனிது நுகர் நாடே.