மையை விழிக்கெழுதி மார்பிற் பதக்கமிட்டு
கையிற் கடையமிட்டுக் காதுக்குக் கம்மல் வைத்து
கொண்டை முடித்துக் குலாவுந் துயிலுடுத்தி
தண்டை சிலம்பணிந்து தாதிமார் தற்சூழ
கண்டோர் களிகூரக் கந்தவேளும் மகிழ
செண்டு கரத்திலங்க தெய்வானை அம்மனுந்தான்
சொர்ண நவமுத்துத் துலங்குரத்ன மாலையிட்டு
அன்ன நடைநடந்து தேவேந்திரன் மகளார்
தேவகன்னி நாககன்னி சென்று கவரியிட
பாவைதனை நிகர்த்த பாவனைபோற் தெய்வானை
வரவே அரியயனும் மனமகிழ்ந்து கொண்டாடி
கரமிரண்டு ஆறுடைய கந்தருக்கு ஏற்குமென்றார்
நயனமோ ராயிரந்தான் நாலுதிக்கும் வானுலகில்
மயனால் அலங்கரித்த வாறுகே ளம்மானை
கும்ப மொருநிரையும் கொடிக ளொருநிரையும்
தும்ப மொருநிரையும் தாரை யொருநிரையும்
சின்ன மொருநிரையும் சிறுனா ஒருநிரையும்
வன்ன மொருநிரையும் மடக ளொருநிரையும்
மேள மொருநிரையும் வெடிக ளொருநிரையும்
தாள மொருநிரையும் சங்க மொருநிரையும்
வாழை ஒருநிரையும் வடுக்க னொருநிரையும்
சூழவரத் தோரணங்கள் சுற்றி நிறைந்தபின்பு
பச்சைக் குடைகோடி பவளக் குடைகோடி
வச்சிரக் குடைகோடி வன்னக் குடைகோடி
பட்டுக் குடைகோடி பதனக் குடைகோடி
தட்டுக் குடைகோடி சரிகைக் குடைகோடி
மட்டுமித மில்லாமல் வானுலகந் தான்சிறக்க
கொட்டு முரசதிரக் கொம்புசின்ன மூதிவர
முண்ணணியும் பின்னணியும் முக்கோடி தேவர்வர
கண்ணா யிரமுடையோன் கண்டு மனமகிழ
மின்னார் வரவுகண்டு வேலவருந் தான்மகிழ்ந்து
அன்னா னறுமுகனார் அறைவா ரிமையோர்க்கு
வாசமலர்க் குழலாள் மாதுமையா ளென்தாயார்
நேசமுடனே தவசு நெடுநாள் வரையிருந்து
பெற்றெடுத்த தாயும் பிதாவு மறியாமல்
உற்றமன்றல் செய்ய ஒவ்வே னெனவுரைத்தார்
கடம்ப னிவையுரைக்கக் கண்ணா யிரமுடையோன்
மடந்தையரை யிப்போ வதுவைசெய்தா லும்மாலே
உய்யும் அமரர் உலகமெனத் தாள்பணிய
ஐயன் மனமகிழ்ந்து கைப்பிடித்தா ரம்மானை
கோபதியு மப்போ குகனா ரடிபணிந்து
நாவசைய ஓர்வசனம் நவிலலுற்றா ரம்மானை
தெய்வானை கேள்வா தேவர்சே னாபதியே
ஐயா உமக்கு அமரர் அடிமைஎன்றும்
காத்துச் சுரரைக் கரையேற வைத்தவரே
பார்த்துச் சிவனுமையும் பாங்காய் மனமகிழ
என்னுலகை ஆண்டு இமையோர்க் கரசானென
உன்னுலக மென்று உகந்திருப்பீ ரம்மானை
அத்தருணந் தன்னில் அண்டமுழுது மாடிவர
புத்திரியுங் கந்தருமாய்ப் பொன்னுலகை ஏற்றிருந்தார்
பாரி லவுணர் பகையின்றோ டற்றதென்று
மாரியெனப் புட்ப மழைபொழிந்தா ரம்மானை.