முருகன் App
கதிர்காமத்து அம்மானை
வரைபக வெறிந்தோன்11 / 18
கதிர்காமத்து அம்மானை

வரைபக வெறிந்தோன்

21விருத்தம்✓
வரைபக வெறிந்தோன் செட்டி மரமென நின்று மாயை
தரைதனில் நடந்து ஆண்டி தளர்பணி வளைய லென்ன
உரைபல கூறி வேட ருற்றிடும் வனத்தி னூடே
நரைதிரை தளர்ச்சி யாகி நவின்றனர் மணிக ளென்றே
22நடை✓
தாடி நரையும் தளர்ந்த நடையுடையும்
சூடு மணிவளையல் சொல்லரிய ஊன்றுதடி
கரத்திற் பிடித்துக் களைத்தவர்போல் வேலவரும்
சிரத்தில் மணிபைவைத்துத் தினைப்புனத்தில் வந்தவரும்
தள்ளாடித் தள்ளாடித் தந்திரமாய் நின்றுநின்று
மெள்ளமெள்ளச் சென்று வேடர் தினைப்புனத்தில்
வளையல் மணிகூறி வடிவேலர் செல்கையிலே
அழகுசெறி வள்ளியரு மண்ணமார்க் கேதுரைப்பாள்
ஆரோ ஒருகிழவன் அணிமணிகள் கூறுகிறார்
வாரா யெனவழைத்து வாங்குமெந்த னண்ணர்களே
இவ்வசனம் வள்ளிசொல்ல எயினர்குல வேலநம்பி
அவ்வை மனமகிழ அழைத்தார் கிழவனைத்தான்
விழுவா ரெழுந்திருப்பார் மேனி படபடப்பார்
அழுவார் பசிக்குதென்று அசைந்து நடந்திடுவார்
தம்பியரே இக்கடப்பைத் தான ஏற மாட்டேன்காண்
வெம்பாமல் வந்திடுவீர் வேண்டும் விலைநவில்வேன்
ஆண்டி இவையுரைக்க அங்குசென்று வேலநம்பி
வேண்டும் வளையலொன்று விலையதனைச் சொல்லென்றான்
முருகன் மலர்ந்து மூவுலகுந் தான்தந்தோன்
மருகன் விலைபகர்ந்த வண்மைகே ளம்மானை
கேட்கவிலை சொல்லவோ கேளாமல் சொல்லிடவோ
பார்க்க வெனைப்பகிடி பண்ணாமல் வாங்குமென்று
மாணிக்கக் கல்நூறு வைத்தால் வளையலொன்று
காணிக்கை போல்தருவேன் கானவரே வாங்குமென்றார்
கேட்டுக் குறவர்கோன் கிழவாநீ சொன்னவிலை
வாட்டமில்லை எங்களுக்கு வந்துபசி ஆறுபின்பு
வாங்கி மகிழ்வோம் வள்ளியர்க்குத் தானணிவோம்
தீங்கு வாராது தேன்தினைமா தின்னுமென்று
வடுவை நிகர்த்தவிழி வள்ளியரே வாருமிங்கு
கொடுமிவர்க்கு நல்ல குகைத்தே னுடன்மாவும்
அந்த உரைகேட்டு அன்னநடை வள்ளியம்மை
சிந்தை களிகூர்ந்து தேன்தினைமா கொண்டுவர
பண்டாரங் கண்டு பாவையரைத் தான்பார்த்து
கொண்டு வரவேண்டா முன்குடிலிற் படுக்கவிடும்
எழுந்து நடந்து இளைத்துக் கடப்பேறி
விழுந்து கிடந்துகந்தர் விளம்புவா ரோர்வசனம்
கடிந்தோர் குகைபோலே கன்னியரே உன்மனையில்
மடிந்ததார் சொல்லுமம்மா வாசலெல்லாந் தூசிருக்கு
என்ற மொழிகேட்டு ஏங்கி மனந்தளர்ந்து
அண்டர் புகழ்வள்ளி அண்ணமார்க் கோதலுற்றாள்
அண்ணரே இக்கிழவன் அருவருப்புப் பட்டிருந்து
என்னுடைய வீட்டி லிடந்தா வெனக்கேட்டார்
சொல்லுகுறாய் தங்கையரே துவண்ட கிழவனவர்
பொல்லாங்கு செய்யார்காண் பொற்கொடி அஞ்சாதே
நெஞ்சம் பதறாதே நெட்டூரம் பண்ணார்காண்
அஞ்சாம லேஅவரை ஆதரித்து வைத்திருநீ
தேனெடுத்து வாரோம் சேயிழையே இப்பொழுது
கானகத்தி லேகவென்று கடந்தார் புனத்தைவிட்டு
மலைமேற் குறவர் வனத்திலே சென்றபின்பு
சிலைபோலப் புருவவிழி செல்வவள்ளி ஆண்டியரை
வாருங் கிழவாஉன் வளையல்மணி காட்டெனக்கு
ஊரேது பேரேது உமக்குப் பொருளேது
தலைநரைத்துப் போனதென்ன தாடி வளர்ந்ததென்ன
நிலைகள் தளர்ந்ததென்ன நிசமாக ஓதுமென்றாள்
வள்ளி இவைகேட்க வடிவேலர் தான்மகிழ்ந்து
புள்ளிமான் கன்றார்க்குப் புகல்வா ரொருவசனம்
அன்னமே என்னை அறிய விரும்புமுன்னே
துன்னுபுக லிவ்வனத்திற் சூழவந்த காரணமேன்
குறவர் குலமல்லநீ குமரகுரு வேலர்குலம்
உறவாக இப்புனத்தில் உற்றிருக்குங் காரணமேன்
மூதாதை உண்டோ முன்தாதை ஆருமுண்டோ
மாதா உமக்கார் மணவாள னுண்டோசொல்
சேடன்மார் என்றுமிங்கு செப்புகிறாய் வேடர்களை
பாட்ட னெவரென்று பகருமம்மா வள்ளியரே
சொல்லுவீ ரானால் துணையாயுனக் கிருப்பேன்
நல்லமணி வளையல் நான்தருவே னுந்தனக்கு
என்னக் கிழவ னிளங்கிளியா ளேதுசொல்வாள்
அண்ணர் வருமுன்னம் அணிவளையல் காட்டுமென்றாள்
பாசிமணி வளையல் பாவையர்க்கு வேலவரும்
ஆசைகொள்ளக் காட்டி அறைவா ரொருவசனம்
மின்னே இதற்கு விலைஅதிக மாகுமாம்
என்னவிலை தருவா யிந்த வளையலுக்கு
சங்குவண்டு என்று சாற்றும் வளையலிது
பொங்குதொடி குருபாய்ப் புகலும் வளையலிது
பிடிகமென வாழ்த்திப் பேசும் வளையலிது
மடிகள்கொண்டு மன்றாடி வாங்கும் வளையலிது
ஒன்றையொன்று தள்ளாது உமக்கு எதுவேண்டும்
நன்றாய் விலைகேளும் நான்கொடுப்பே னுன்றனுக்கு
தோரை மதாணி சுடிகை பரிபுரமும்
நேரா யிருக்குதின்னும் நேரிழையே கேள்பார்ப்போம்
என்றுமெய்யாள் தன்னிடத்தில் ஈசன்மகன் கேட்க
தொண்டரென விங்குவந்த துவண்ட நரைக்கிழவர்
தினையு மிறுங்குந் தேனுந் தருவேன்நான்
புனைய வுமக்குப் புலித்தோலும் நான்தருவேன்
ஏதொன்றும் பேசாமல் என்கைக் கிணங்கியதாய்
தாவென்று கேட்டாள் தையலரு மம்மானை
வஞ்சி யிவையுரைக்க வளையல்மணிப் பண்டாரம்
மிஞ்சவே பொன்பணமும் வெகுவாய்த்தரு வீரென்றால்
உமக்கு வளையல் ஒண்டொடியே நான்தருவேன்
சுமக்கும் தினைவேண்டாம் தோகையரே என்றுரைத்து
பண்டுபணக் காரரைப்போற் பவுஷா யழைத்தார்கள்
இன்றுதானே தெரியும் இயல்பற்ற வேடரென்று
ஏன்வந் தலைந்தே னென்தலையி லேபிரமன்
வீண்வார்த்தை கேட்க விதித்தானோ வென்றுரைத்த
செட்டிதனைப் பார்த்துச் சேயிழையாள் வள்ளியரும்
மட்டிக் கிழவாநீர் வடுச்சொல்ல வந்தீரோ
நடைகள் தளர்ந்து நாடிதலை நரைத்து
உடையிழந்த பண்டார மோடும் புனத்தைவிட்டு
புரவலன் போற்பேசிப் புன்சிரிப்புக் கொண்டிருந்து
இரவல் நகைவளையல் எடுத்துப் பெரிதாக
காட்டிக் கதைபேசிக் கானவரைத் தானிகழ்ந்தென்
வீட்டி லிராமல் விரைவிலே தானெழுந்து
நடநீர் திடமாய் நளினக் கதைபொருத்தி
மடவார்க ளோடு வம்புவசை கூறவந்தீர்
வல்லவர்க ளெங்களண்ணர் வருவார்நீர் நில்லாதே
பொல்லாங்கு செய்திடுவார் போகிழவா நிற்பதென்றால்
வில்லா லடித்து வெருட்டித் துரத்திடுவார்
நில்லாதே செல்லும் நின்றா லனர்த்தமுண்டு
பல்லாண்டு கோடி பதியாண்ட முக்கோடி
கல்லாண்டு வந்தவெங்கள் கானவரைத் தானிகழ்ந்தீர்
என்றுவள்ளி சொல்லி யிருக்கக் கிழவனுந்தான்
சென்றுவிடேன் பெண்ணே சிலைவேடர் தான்வரட்டும்
பெண்ணாரே யுங்களண்ணர் பெருமையைப் பேசாதே
மண்ணி லெலிபிடிப்பார் மரம்வெட்டித் தேனெடுப்பார்
கண்ணிகுத்தி யேபறவை கடுகிப் பிடித்திடுவார்
எண்எழுத்துத் தானறியா எயினர்குலம் நீங்களல்லோ
அன்னமெனும் பண்டம் அருந்தத் தெரியாதார்
மன்னர் குலமென்றும் மகத்துவங்கள் சொல்லாதே
காடை கவுதாரி கமடமொடு பன்றிமுயல்
வேடரெனத் திரிந்து விரவிப் பிடித்தருந்து
சிலம்பெனன்றும் வரையா ளதிபெனென்றும்
சிலையா லுயார்வனென்றுஞ் சினங்கொண்டு பேசாதே
மாதங்க ரென்றும் மாநிலத்தோர் சொல்வார்கள்
சாதங்கள் தின்றறியாச் சாதியென்றா ரம்மானை
செந்திவடி வேலவனார் செப்பவே வள்ளியம்மை
வந்திட்டு மண்ணமார் வாய்பொத்த வைத்திடுவேன்
வந்த வரத்தும் வழியில் விழுந்ததுவும்
சிந்தைதனி லெண்ணாமல் சேட்டைமிகப் பண்ணுகிறீர்
ஆடி யசைந்துவிழ அண்ணமார் கைகொடுக்க
கூடி நடந்துஎந்தன் குடிசைக்குள் ளேயிருந்து
நிந்தம்போ லெண்ணி நெடுநா ளுறவினராய்
குந்தி யிருந்து குலம்பேச வந்தீரோ
ஆனாலும் நீர்தான் அறிவிற் குறைந்தவர்காண்
போனாரே யண்ணன்மார் பொறுத்திரு வந்திடட்டும்
வேந்தா புரந்தரனே வேலாவெனப் புலம்பி
நேர்ந்தாளே யண்ணர்களை நிமிஷம் வருவதற்கு
ஓடினாள் வள்ளியம்மை யுற்ற கடவலடி
தேடினா ளண்ணர்களைத் தேங்கி நின்றா ரம்மானை
கந்தரிவை யறிந்து கன்னியரே நான்போறன்
உந்தனுக்கும் எந்தனுக்கும் ஒருகுறையும் வேண்டாங்காண்
அண்ண ரண்ணரென்று ஆங்காரம் பேசாதே
மின்னே யவர்திறமை யறிவேன் விளம்பாதே
குறம்பேசிக் கானவர்கள் குகைத்தே னெடுத்திடுவார்
திறம்பேசிச் செப்புகிறாய் தெரியுமுங்க ளண்ணர்குலம்
வாருமென் வள்ளியரே வயிறு பசிக்குதம்மா
தாருந் தேன்மாவுந் தண்ணீரு மெந்தனுக்கு
கேட்டுமிகப் பண்டாரம் கிடந்து மகிழ்வாராம்
தீட்டும் விழியுடைய செவ்விவள்ளி தான்பார்த்து
வாதிற்கு வந்தீரோ வளையல்விற்க வந்தீரோ
சூதிற்கு வந்தீரோ சோலிசெய்ய வந்தீரோ
பகடிபண்ண வேண்டுமென்றும் பணக்கார ரில்லையென்றும்
மகிடிவித்தைப் பையை வடிவாகக் கட்டிவைத்தீர்
வாகிழவா வுன்றனக்கு வயிறு பசிக்குதென்றீர்
மாவருந்திச் சென்று மடுவிலே நீர்குடித்து
ஓடிப் பிழைத்து உன்னூரைத் தேடுமென்று
வாடி மனங்கருகி மங்கையரும் மாவெடுத்து
இந்தாரும் தேன்தினைமா எடுத்து அருந்தியபின்
அந்தா மடுவிருக்கு அங்குசென்று தண்ணிருண்டு
வந்த வழிதேடி வளையல்மணிப் பையெடுத்து
முந்த நடவுமென்று மொழியவள்ளி வேலவரும்
தின்னு மளவில் செருமிப் பொறுத்ததுபோல்
கன்னியவள் காணக் கண்பிரண்டாற் போலிருந்து
வாவியுங் காணேன் வழிகாணே னென்றழுது
பாவியரே எந்தனக்குப் பாங்காய்ப் பொறுக்குதடி
நாவி கலந்தீரோ நான்சாக வென்றசைய
ஆவி யகலுமென்று அழகுவள்ளி தாவியபின்
பொய்கைக் கரையருகில் பொற்கோடி கொண்டுசெல்ல
தையலரே மாவில்நஞ்சி தான்புரட்டித் தந்தீரோ
கிறுதி வருகுதடி கிளம்பி நடவாதே
இறுதி முடியுதென்று இருந்தார்கா ணம்மானை
ஏங்கினார் வேலவனார் இளைத்தார் கழுத்தைச்சத்தார்
தூங்கினா ரப்போது தோகையரு மேதுசொல்வாள்
பாங்கியரு மில்லை பார்வனத்தி லெந்தனுக்கு
ஏங்கி யழுது என்செய்வே னென்றுரைத்து
அண்ணரையுங் காணேன் ஆருதவி யெந்தனுக்கு
பண்ணவரே காருமென்று பரதவித்து வள்ளியரும்
ஆல மருந்திடுகில் ஆயாசந் தீருமென்றாள்
வேலர் மனமகிழ்ந்து மெல்லியரைத் தான்நோக்கி
கிழவன் கிழவனென்று கீழ்த்தரமாய்ப் பேசினையே
அழகா யுனையணைய ஆகாதோ வள்ளியரே
எனக்கும் உனக்கும் இணங்குங்கா ணோவியமே
சினக்காம லென்னைச் சேர்ந்தணைந்து முத்தமிடும்
சீறிச் சினந்து சிந்தனைகள் செய்யாதே
கூறிய புன்சிரிப்புக் கோதையரே கொண்டணைவீர்
உந்தன் கவலை ஒருநாளும் மாறாது
எந்தனைநீர் சேர்ந்தணைந்தால் எந்நாளும் வாழ்ந்திடுவீர்
பாவையரே யுன்னைப் பாங்காக வைத்திருப்பேன்
தாவி யணையச் சம்மதங்கள் சொல்லுமென்று
முருகன் இவையெடுத்து மொழியவே வள்ளிமனம்
கருகித் தளர்ந்து கந்தா வெனநினைந்து
தாதவிழும் மாதுகுழல் தையலரு மப்பொழுது
தீது வசனம் செப்பாதே யெந்தனுக்கு
ஆறு முகனை அனுதினமுந் தான்நினைந்து
நீறு தரித்து நீள்தவசு செய்திருக்க
தாதையைப்போ லிங்குவந்து தார மெனநினைந்து
வாதுகள் கூறாதே வாரி யருந்துமென்றாள்
மின்னா ருரைத்தமொழி வேலவனார் தான்கேட்டு
அண்ணா வெனநினைந்தா ரம்பிகை யார்தனையன்
என்ன புதுமையென்று எண்ணி யறிந்தவுடன்
கன்னி மனதைக் கலக்க வெனநினைந்து
முறம்போ லிருசெவியும் முடுதுதிக் கையுடனே
திறம்பெரிய யானையெனத் தினைப்புனத்தி லேகவென்று
மாதங்கந் தூங்கல் வாரணந்தோல் வல்விலங்கு
வாதெறும்பி யும்பல் வயமா புழைக்கைதும்பி
ஒருத்தல் கும்பினாகம் உவாகளிறு பூட்கைகரி
பெருத்த மதகரியாய்ப் பெருமரமெல் லாம்முறித்து
சீறிக் கனைதித் தினைப்புனத்தி லேவரவே
வீறிட்ட தட்டி வேழம் வருவதைத்தான்
கண்டாளே வள்ளியம்மை கலங்கி நடுக்கமுற்று
அண்டர் துதிக்க அறுமுகனே யென்றலறி
ஓடி மரத்தி லுற்றொழிக்க வேழமது
சாடி யடிப்பதுபோற் தையலரைத் தேடிவர
ஐயோ முறையோவென் னண்ணரென வேழமது
கையூதிக் காட்டிக் கடுமரமெல் லாம்பிடுங்க
மாதுநல்லாள் வள்ளியம்மை மணிவளையல் பண்டாரம்
பாதம் பணிந்துஎன்னைப் பாதுகா ரென்றழவே
கும்பி குளறிக் கும்பமசைந் தசைந்து
உம்பல் நடக்க ஒண்டொடியாள் தான்பதறி
மரத்தில் மறைய வாரணமு மங்குசெல்லும்
சிரத்தில் கரத்தைவைத்துச் செந்திவே லென்றோடி
ஆடு கொடிதேடி அரிவையருந் தானோற
கோடு தனையுயர்த்திக் கூச்சலிட்டுத் தானதட்ட
வாடி மனங்கருகி வள்ளியருந் தானிறங்கி
ஓடிவர வேலவரும் ஒண்டொடிக்கு மேதுரைப்பார்
கடம்பன் வருவதுண்டோ கன்னியரே யிவ்விடத்தில்
இடும்பி எனவுன்னி ஏனலைந்து வாடுகிறாய்
வல்விலங்கு அந்தா வருகுதுபார் வள்ளியரே
நில்லாமல் என்னிடத்தில் நேரிழையே யோடுமென
தாலவட்டம் வீசித் தந்திவரும் நேரமதில்
சாலமொடு கந்தர் தடுப்பதுபோற் சத்தமிட
குஞ்சரந் தேங்கிநின்று கோதையரைப் பார்த்திடவே
வஞ்சியரே யோடுமென்று வடிவேலர் தானுரைக்க
அபய மபயமென்று ஆண்டியர்கள் தாள்பணிய
உபயப் படுவீரோ உம்மை மணம்புரிய
சொல்லுங் கரியைத் துரத்துவே னிப்பொழுது
பல்லோர் புகழப் பாருலகி லேயிருப்போம்
கெடுதி வருமுன்னங் கிளிமொழியே வள்ளியரே
சடுதியொடு சொல்லும் தந்திதனை யான்தானும்
ஓடும் படிதுரத்தி உந்தனைநான் கார்த்திடுவேன்
கூடுவீ ரென்றுசொல்லக் குறமாது தானழுது
அரன்மகனே கங்கைமைந்தா ஆண்டவனே கடம்பா
சிரமதனி லேபிரமன் தீங்கெழுதி வைத்தானோ
தாரகச் செற்றோனைத் தான்பணிந்து மன்றல்செய்ய
நேராக நேர்ந்து நினைந்திருந்தே னென்றழுதாள்
அழவே குழகன் அரிவையரைத் தான்வாழ்த்தி
துழவன் மருகன் சுயரூபங் காட்டலுற்றார்
இராச உருப்போலும் தேவ குருப்போலும்
நிராசரங்க ளெங்கும் நிறைந்து ஒளிபரவ
காட்டி மகிழ்ந்து கந்தவேள் வள்ளியரை
கூட்டி மறைந்தார் குறவர்கோன் தேடலுற்றார்.