முருகன் App
கதிர்காமத்து அம்மானை
தேவர்கள் பகையை4 / 18
கதிர்காமத்து அம்மானை

தேவர்கள் பகையை

7விருத்தம்✓
தேவர்கள் பகையை வெல்லத் தெரிந்துமே விடுத்த காமன்
மேவலே மலரின் மாரி விடுத்தது கண்டு முன்னோன்
ஆவலாய் விழுங்கும் போது அரிவையர் வடிவ மான
பாவலர் புகழுங் காமன் நீறெனப் பறந்தானன்றே.
8நடை✓
சதாசிவனு மப்போ சகிக்க முடியாமல்
பகாதி பரயோகப் பக்குவங்கள் விட்டெனவே
அக்கினி தேவன் அரனார் அடிவணங்கி
மிக்கவர மீயுமென வீரமதைக் கைகொடுத்தார்
வாங்கி விழுங்கி வணங்கி நடந்தவரும்
தாங்கரி தாகையினால் சரவணையிற் கக்கிவிட்டார்
மாயவனார் தங்கை மாதுமையா ளோடரனும்
காய மொடுகாயங் கலந்து கலவியுடன்
கூடி இருக்கக் குமரவே ளுற்பவித்தார்.
பாடியே தேவரெல்லாம் பரமனைத் தொழுதுநின்றார்
பாசம் பகைஅறுக்கும் பார்வதியாள் புத்திரனும்
வாசமலர்ப் பொய்கையிலே வளர்ந்துவிளை யாடுவாராம்
ஆறு முகமும் ஆறிரண்டு தோள்களுடன்
நீறுபெறு மேனியோடு நீள்கரமு மீராறு
வதனவிழி பன்னிரண்டு மதிநுதலு மோராறு
மதனன் அழகெனவே வாழ்த்தியே தேவரோடு
வேதனும் மாலும் விண்ணவரும் இந்திரரும்
தாதுமலர் தூவிச் சந்தோஷ மாடுவாராம்
இன்றோடு சூரனின் இடுக்கண் தொலைந்ததென்று
கொண்டாடி நின்று கும்பிடுவார் தேவரெல்லாம்
அப்போது மாதுமையும் அரனா ரடிவணங்கி
தப்பாமல் ஓர்மதலை தாருமென்றா ளம்மானை
அந்த உரைகேட்டு அரனார் மனமகிழ்ந்து
சந்தோஷமாய் மதலை சரவணப் பொய்கைதனில்
மகிழ்ந்து விளையாடி வளருகிறான் மாதரசே
புகழ்ந்தெடுத்து நீயும் பொற்கொடியே வாருமென்றார்
ஈச னுரைகேட்டு ஈரேழு உலகளந்த
வாசவனார் தங்கை மகவாசை கொண்டெழுந்து
நடந்தாள் உமையவளும் நன்மதலை வாழுமிடம்
தொடர்ந்தா ளறுமுகனார் சோதியுருப் பெற்றிருக்க
மாதுமையா எங்குசென்று மதலைதனை அணைத்து
பாதம் பிடித்துப் பார்வதியு முத்தமிட்டு
கொஞ்சி அணைத்துக் குழந்தைவடி வேலனென்று
பஞ்சுமலர் மெத்தையிலே பாலூட்டித் தான்வளர்த்து
தாலாட்டி சீராட்டி சண்முகனார் என்றுரைத்து
பாராட்டி மாதுமையாள் பாலகனைத் தான்வளர்த்தாள்
செல்ல மொழியும் சிறந்த அழகுடனே
மெல்ல நடந்து விளையாடி யேவருவார்
கைலைமலைப் பூவினங்கள் கண்டு மலர்ந்தோங்க
அகிலந் தழைக்குமென்று அரனார் மனமகிழ
மதங்கள் செழிக்க வானோர்கள் ஈடேற
பதங்கள் இசைக்கப் பாரரசர் தற்சூழ
ஐந்து வயதுசெல்ல அரனும் உமையவளும்
மைந்தனைத் தானேந்தி வாழ்த்தி மனமகிழ்ந்து
மூவுலகும் தானாளும் முதல்வரிவ ரென்றரனார்
ஏவல்செய்து தேவரெல்லாம் எந்நாளு மேதுதிப்பார்
கந்தன் கடம்பனென்றும் கைலைமலை நாதனென்றும்
சந்தோஷ மாய்உமையும் சங்கரனும் முத்தமிட்டு
விந்தைபெறச் சந்தனம் மேனியெலாந் தானணிந்து
உந்திச் சுழிவரையில் உருத்ராட்ச மாலையிட்டு
நந்தி மலரணிந்து நற்காவி வேட்டிகட்டி
சந்திரனைப் போல்நுதலிற் சந்தனப் பொட்டுமிட்டு
சதங்கை அரைக்கணிந்து தாளக் குடைகொடுத்து
பதுங்கிவிளை யாடுமென்று பார்வதியும் சங்கரனும்
வாழ்த்திவிட வேலவரும் மாதுமையாள் தன்னிடத்து
தாழ்த்தி நகைத்துத் தாய்மடியில் தானிருந்து
பாலருந்திச் சென்று பாரிலுயர் வெம்மலையில்
மால்முருகன் ஏறி மாதா மனமகிழ
குலாவி நடந்து குழந்தைவடி வேலவரும்
உலாவி கயிலையெங்கும் ஓடிவிளை யாடிவர
மாதா மனமகிழ வானோர்கள் கண்டுதொழ
வேதனும் மாலும் மிகமகிழ்ந்து கொண்டாட
கந்தம் புனுகு களபகஸ் தூரியுடன்
சந்தம் கமகமமெனத் தான்வளர்ந்தார் அம்மானை.